வடிவேலுவை முதலில் ஹீரோவாக்கியது இயக்குனர் சேரன் தான்.
பொற்காலம் படத்தில் உண்மையான ஹீரோ வடிவேலு தான்.
அது மட்டுமல்ல வடிவேலுக்கென்றே தனியாக இரண்டு சாங் வைத்தது சேரன் மட்டுமே.
பாரதி கண்ணம்மா படத்தில், தேவையே இல்லாமல் படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் வடிவேலுக்கு ஒரு சோலோ சாங் வரும். ரயிலே ரயிலே அப்படின்னு.. அதுல அவர் மட்டும் டான்ஸ் ஆடி பாட்டு பாடி இருப்பாரு…
இந்தப் பாட்டை எதுக்காக வடிவேலுக்காக சேரன் வச்சாருன்னு இதுவரைக்கும் தெரியவில்லை.
அடுத்து அதே வருஷம் பொற்காலம் படத்துல “ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ” அப்படிங்கிற பாட்டு படத்தில் நடித்த எந்த ஆர்டிஸ்ட்டும் இல்லாமல் இவர் மட்டும் ஒரு ஸ்டேஜ்ல போய் இவருக்காக தனியா வச்ச மாதிரி பாடுவாரு.
பொற்காலம் படத்துக்கு பொற்காலம்னு பேர் வைக்கிறதுக்கு பதிலா போரத காலம்னு பேர் வச்சிருக்கலாம்.. படம் ஃபுல்லா ஹீரோக்கு கெட்ட நேரமா தான் இருக்கும்.. ஒரு நல்ல விஷயம் கூட முரளிக்கு நடக்காது.
ஆனா, இந்த படம் 175 நாள் ஓடி பிளாக்பஸ்டர் அடிச்சது. இயக்குநர் சேரன் ஒரே வருடம் இரண்டு படங்கள் எடுக்கிறார்
‘பாரதி கண்ணம்மா’ 100 நாளை தாண்டி ஓடியது. அதே வருடம் வந்த ‘பொற்காலம்’ 175 நாள் ஓடுச்சு.
அதுக்கு காரணம் ரஜினிகாந்த் செய்த பிரமோஷன். ‘அருணாச்சலம்’ படத்தின் 100வது நாள் விழாவில் பேசிய ரஜினிகாந்த், நான் பொற்காலம் படம் பார்த்தேன். ரொம்ப நல்ல படம். எல்லாரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொன்னார். அவ்வளவு தான் படம் பிச்சுக்கிட்டு ஓடுச்சு.
இத்தனைக்கும் பொற்காலம் படத்தில் மணிவண்ணன் ரஜினியை கலாய்க்கும் ஒரு காட்சி வரும். அதைக் கூட பொருட்படுத்தாமல் ரஜினி இப்படிப் பேசி இருப்பதுதான் அவரின் பெருந்தன்மை.
இந்தப் படம் எனக்கு ஏன் ரொம்ப நெருக்கமான படம்னா, அந்தப் படம் வந்தப்ப நான் ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன்.
தேவாவோட இசையில் இந்தப் படத்தோட பாட்டு எல்லாம் செம ஹிட். தஞ்சாவூர் மண்ணு எடுத்து பாடல்.. சிங்குச்சா சிங்குச்சா பாடல்… ஊனம் ஊனம் பாடல்
அதிலும் சிங்குச்சா சிங்குச்சா பாடல் எல்லா ஜவுளிக் கடைகளிலும் ஓடும். இந்தப் பாடல்கள் கேட்கும்போது என் சிறுவயது ஞாபகங்களை நினைவுபடுத்தும்
படத்தில், முரளி மண்பானை செய்யும் தொழில் செய்வார். மீனா சேலை நெய்யும் தொழில் செய்வார். கைத்தொழிலை அதிகம் மையப்படுத்தி வந்த படங்கள் வெகு சொர்ப்பமே. அதில் பொற்காலமும் ஒன்று.
‘பாரதி கண்ணம்மா’வை விட இந்தப் படத்தில், சேரன் அந்தக் கிராமத்தின் உண்மையான தன்மையைப் பிரதிபலிக்க அதிக மெனக்கெட்டிருப்பார்.
அந்த ஊர் பேச்சு வழக்கு, அவர்களின் அன்றாட வாழ்க்கைச் சூழல், அவற்றின் இயல்போடு ஒன்றி அந்த ஊரில் வாழ்ந்த அனுபவத்தைக் கொடுப்பார்.
சங்கவி இந்தப் படத்தில் கிளாமர் காட்டவில்லை என்றாலும் கண்ணை மூட வைக்கும் அளவுக்கு சில காட்சிகள் இருக்கும்.
ஹீரோ முரளி, அவரின் வாய்ப் பேசாத தங்கச்சிக்கு எப்படியாவது கல்யாணம் செய்து வைத்துவிட்டுத் தான் தனக்கு கல்யாணம் நடக்கும் என்று வைராக்கியத்துடன் மாப்பிள்ளை தேடுவார்.
ஆனால், கடைசி வரை அவர் தங்கச்சிக்கு மாப்பிள்ளை கிடைக்காது. பாரதி கண்ணம்மா போலவே இந்த கிளைமாக்ஸ்லும் மனதை உறைய வைப்பார்.
‘பொற்காலம்’ படத்தில் சந்தோசப்பட்டு சிரிக்கும் ஒரு காட்சி கூட இருக்காது. படம் முழுக்கவே அழுகாச்சிதான். அதனாலேயே இந்தப் படம் ஒரு பொழுதுபோக்கு உணர்வை நமக்கு கொடுக்காது.
நன்றாக கவனித்தீர்கள் என்றால் ‘பாரதி கண்ணம்மா’ படத்தில் வடிவேலுவின் காமெடி ஆங்காங்கே வந்து வந்து போகும்.
‘பொற்காலம்’ படத்திலும் வடிவேலு நடித்திருப்பார். ஆனால், காமெடி சீன் கிடையாது. அப்பவே சந்தேகம் வந்தது, ஏன் வடிவேலு சும்மாவே இருக்கார் அப்படின்னு.
கிளைமாக்ஸ்ல தான் டுவிஸ்ட் அடிக்கும், “ஏம்பா ஊரெல்லாம் உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை தேடுறியே, என்ன எல்லாம் பார்த்தா மாப்பிள்ளையா தெரியலையா” அப்படின்னு கேப்பாரு அந்த scene செமையா இருக்கும்.
கிட்டத்தட்ட சேரன் வடிவேலுவை ஒரு சைலண்ட் ஹீரோவாகவே காண்பித்திருப்பார். இந்த படம் வடிவேலுவின் ஆரம்ப காலகட்டப் படம்.
அப்பொழுது எல்லாரும் வடிவேலுவை காமெடியாக பார்த்தபோது சேரன் மட்டும் அவரை ஹீரோவாக பார்த்திருக்கிறார்.
யாருக்குத் தெரியும் வடிவேலு மட்டும் காமெடியில் பிஸியாகி உச்சத்திற்கு செல்லாமல் இருந்திருந்தால். ஒருவேளை ‘ஆட்டோகிராப்’ படத்தில் வடிவேலு ஹீரோவாக நடித்திருக்கலாம்.
ஆனால், சேரனுக்கும் வடிவேலுக்கும் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. வடிவேலுக்கு தன் படத்தில் இவ்வளவு பெரிய இடம் கொடுத்த சேரன், ‘வெற்றிக் கொடி கட்டு’ படத்தில் வடிவேலுக்கு மிகப்பெரிய காமெடிகளை வைத்து அவரை சினிமாவின் அடுத்த லெவலுக்கு கொண்டு போனவர், அந்தப் படத்துக்கு பிறகு வடிவேலும் சேரனும் சேர்ந்து படம் பண்ணவில்லை. என்ன பிரச்சனை என்று அவர்களுக்கு தான் தெரியும்.
எது, எப்படியோ ஒரு காலகட்டத்தில் பெண்கள் என்றாலே அவர்களை கல்யாணம் செய்து கொடுக்க வேண்டும்.
படிப்பைவிட கல்யாணம் மட்டுமே அவர்களின் பெரிய வெற்றி என்று எண்ணிக் கொண்டிருந்த கிராமங்களின் சொல்லப்படாத வரலாறு.
ஒரு காலத்தில் ஊனமாகப் பிறந்த பெண்கள் மாப்பிள்ளை கிடைக்காமல் பட்ட பாடை வலியுடன் சொன்ன படம்தான் ‘பொற்காலம்’.
நன்றி: மீரா மஹதி முகநூல் பதிவு.