சிங்கப்பூர், ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் திரை உலக வாழ்க்கையில் மாஸ்டர் பீசாக அமைந்த படம்.
படப்பிடிப்புக்காக வெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் சென்ற எம்.ஜி.ஆரை சென்னை விமான நிலையத்துக்கு நேரில் வந்து வழி அனுப்பி வைத்தார், அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி.
இது குறித்து எம்.ஜி.ஆர் நெகிழ்ச்சியோடு கட்டுரை ஒன்றில் பதிவு செய்துள்ளார். அந்த கட்டுரை இது:
‘உலகம் சுற்றும் வாலிபன்’ படப்பிடிப்புக்காக வெளிநாடு செல்ல விமான நிலையத்தில் நின்றேன். இதற்கு முன்னால் அறிஞர் அண்ணா இதே விமானக் கூடத்துக்கு வந்திருந்து என்னை வழி அனுப்பியுள்ளார்.
அந்த அண்ணாவை இப்போதும் தேடினேன். ‘அண்ணா இல்லை என்பது எனக்கு தெரியாதா? நன்கு தெரியும். ஆனாலும் உள்ளத்தில் இருந்த எண்ணம் அண்ணா வந்து, என்னை வாழ்த்தி வழி அனுப்ப வேண்டுமே’ என்பது. நான் அந்த பேராசையோடு சுற்றிலும் பார்த்தேன்.
சுற்றியலைந்த கண்களுக்கு முன் அதோ வருகிறார்! அருகில் வந்து விட்டார்! போலீஸ் அதிகாரிகள் அவரை என் அருகில் அழைத்து வர உதவினார்கள். ஆமாம்! கலைஞர் கருணாநிதியின் உருவில் அண்ணா என்னை தேடி வந்தார்.
அண்ணாவைப்போல் என்னை விட வயதில் மூத்தவரில்லாவிடினும், அண்ணாவுக்குரிய தகுதிகளைப் பெற்ற கலைஞர், என் கழுத்தில் மாலை அணிவித்தார்.
நான் உணர்ச்சி வயப்பட்டுக்கொண்டிருந்தபோதே, அவர் தன்னை சமாளித்துக்கொண்டு அதிகாரிகளுக்கு கட்டளையிட்டார், வண்டியை நேராக விமானத்துக்கு அருகில் கொண்டு செல்லும்படி.
நான் வேனில் ஏற்றப்பட்டேன். வண்டி நகர்ந்தது. கலைஞர் அண்ணாவிடம் ஏதேதோ பேச வேண்டும் என்று விரும்பினேன். இயலவில்லை. பெருத்த ஏமாற்றத்தோடும், வேதனையோடும் விமானம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டேன்.
தூரத்தில் அண்ணன் எம்.ஜி.சி. மற்றும் பல பெரியவர்கள், அன்பர்கள், தோழர்கள் இருந்தனர். எல்லோரிடமும் சென்று என் வணக்கத்தை சொல்ல ஆசைப்பட்டேன். இயலவில்லை.
விமானத்தில் உள்ளே சென்று அமர்ந்தேன். பெருத்த ஏமாற்றம். திடீரென வெளியே இருந்து போலீஸ் அதிகாரிகள் சிலர் விமானத்திற்குள் வந்தனர்.
கலைஞர் கருணாநிதியின் உருவில் அண்ணா என்னை தேடி மீண்டும் வந்தார். என்னை ஆரத்தழுவினார். எங்கள் இருவர் கண்களிலும் நீர் மல்கின.
நான் புறப்படுவதை பற்றி அவரிடம் பேசியது உண்டு. ஆனால் குறிப்பிட்ட தேதியில் தான் புறப்பட இருக்கிறேன் என்று அவருக்கு சொல்லவே இல்லை.
முன்பு பேரறிஞரிடமும் இப்படித்தான் செய்தேன். அவரும் வந்தார். இப்போது இவரும் வந்தார். மனதில் இருந்து பெரும் பாரம் இறக்கி வைக்கப்பட்டது போன்ற உணர்வு.
கடைசியில் என் அண்ணா, நான் இருக்கும் இடத்துக்கே கலைஞரின் உருவில் என்னை தேடி வந்து ஆசி கூறி விட்டார் என்ற பெரும் ஆறுதல்.
முதலமைச்சர் கலைஞருக்கும் எனக்கும் இருபதாண்டுகளாக தொடர்பு உண்டு. அப்போது நான் கோவையிலே இருந்தேன். ஊருக்குள் பிளேக் என்ற நோய் பரவிக்கொண்டிருந்த காரணத்தால் குடும்பத்தை ஊருக்கு அனுப்பி விட்டு கலைஞர் என் வீட்டில் வந்து தங்கினார்.
என் வீடு என்றால் அப்போது வாடகை வீடு தான். 12 ரூபாய் வாடகை வீடுதான். இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம்.
ஆனால், அவர் சுயமரியாதை இயக்கத்தை சேர்ந்தவராக இருந்தார். நான் காங்கிரஸ்காரனாக இருந்தேன். அப்போதெல்லாம் அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன்.
ஆனால் நிலைமை எப்படி ஆயிற்று?

நான் தான் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டேன்.
நான் முதன் முதலாக பெற்ற பட்டம் ‘புரட்சி நடிகர்’ பட்டம். அந்த பட்டத்தை எனக்கு தந்து பாராட்டியவர் கலைஞர்.
புரட்சி நடிகர் பட்டம் அளித்தபோது நான் சொன்னேன். ‘திருவாரூர் மு. கருணாநிதி என்ற சொற்களை திமுக என்று விளக்கிக்கூறி, திராவிட முன்னேற்ற கழகத்துக்கும் அவருக்கும் உள்ள தொடர்பை சுட்டிக்காட்டினேன்.
கல்லக்குடி போராட்டத்தில் தன் உயிரையே பணயம் வைத்தவர் கலைஞர்.
அன்று உயிரைப் பணயமாக வைத்துப் போராடிய கலைஞர் இன்று கழகத் தலைவர்.
இறந்தாலும் லட்சத்தியத்தோடும், கொள்கையோடும்தான் நாம் இறக்கப் போகிறோம்.
மிகப்பெரிய பொறுப்பு நம்மிடம் இருக்கிறது. கழகத்தை வளர்ப்பதற்காக என்றென்றும் பாடுபடுவோம்’ இவ்வாறு, சுமார் 50 ஆண்டுகளுக்கு முன், கலைஞரை பாராட்டி எம்.ஜி.ஆர் கட்டுரை தீட்டி இருந்தார்.
– பி.எம்.எம்.