Take a fresh look at your lifestyle.

எம்.ஜி.ஆர். ரசித்த எரோல் ஃப்ளின் – 6

-தீராத சர்ச்சைகளின் நாயகன்

219

        –     மனோலயன

    1967ம் ஆண்டு எம்.ஜி.ஆர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை எழுப்பியதுடன், அரசியல் களத்திலும், மிகப்பெரிய வரலாற்று திருப்புமுனையை ஏற்படுத்திய ஒன்றாகும்.

எம்.ஜி.ஆரால் ரசிக்கப்பட்ட எரோல் ஃப்ளின் வாழ்விலும் இதே போன்ற பரபரப்புகளுக்கு பஞ்சமில்லை.

ஆனால், எரோல் ஃப்ளின் தொடர்பான பரபரப்பான நிகழ்வுகள், பல நேரங்களில் எதிர்மறையான சர்ச்சைகளுக்கு இடமளிக்கக் கூடியவையாக இருந்துள்ளன.

எம்.ஜி.ஆரைப் போலவே எரோல் ஃப்ளினும் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் ஒன்று நடந்தது.

எரோல் ஃப்ளின் உலகறிந்த நட்சத்திரமாக புகழ் பெறத் தொடங்கி இருந்த காலத்தில், அவர் மேற்கொண்ட ஸ்பெயின் பயணத்தின் போதுதான் அது நடந்தது. இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி,  அவரது மரணத்திற்குப் பின்னரும் முடிவடையாத பெரும் சர்ச்சையாக இன்று வரை நீடித்து வருகிறது. அதற்குக் காரணம், உலக வரலாற்றில் முக்கியமான தருணத்தில் அவர் ஸ்பெயினுக்கு சென்றதுதான்.

அது 1937 ஆம் ஆண்டு.

ஸ்பெயினில், தேசியக்கட்சி என்ற பெயரில் அதிபர் ஃப்ரான்சிஸ்கோ ஃப்ராங்கோ பாமுன்டே (Francisco Franco Bahamonde) சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார். இவரது சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக குடியரசு கூட்டமைப்பு என்ற பெயரில் இடதுசாரிகள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

இதில் சர்வாதிகாரியான ஃப்ரான்சிஸ்கோவுக்கு ஜெர்மனியின் நாஜிகளும், இத்தாலியின் பாசிஸ்டுகளும் ஆதரவளித்தனர். 1936 ஜூலை முதல் 1939 ஏப்ரல் வரை நடைபெற்ற இந்த உள்நாட்டுப் போரை, இரண்டாம் உலகப் போருக்கான முன்னோட்டம் என வரலாற்று ஆசிரியர்கள் வரையறுக்கின்றனர்.

இந்தக் காலக்கட்டத்தில் தான் நமது எம்.ஜி.ஆருக்கு பிடித்த நாயகனான எரோல் ஃப்ளின் நடித்ததி சார்ஜ் ஆப் தி லைட் பிரிகேட் (The Charge of the Light Brigade – 1936 film) என்ற திரைப்படம் வெளி வந்தது.

உள்நாட்டுப் போர் தொடர்பான இந்தப் படத்தில், இந்தியாவில் 1857ம் ஆண்டு பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக நடைபெற்ற சிப்பாய் கலகம் தொடர்பான காட்சிகளும் இடம்பெற்றன. இதற்கான படப்பிடிப்பும் இந்தியாவிலேயே நிகழ்ந்துள்ளது. இதற்காக எரோல் ஃப்ளின் உள்ளிட்ட படக்குழுவினர் இந்தியாவிற்கே வந்துள்ளனர்.

இந்தப் படம் வெளிவரும் தருணத்தில்தான் எரோல் ஃப்ளின் ஸ்பெயினுக்கு செல்கிறார். ஃப்ளினின் ஸ்பெயின் பயணத்திற்கும், “தி சார்ஜ் ஆப் தி லைட் பிரிகேட்படம் வெளி வந்ததற்கும் என்ன தொடர்பு என கேட்கிறீர்களாஇருக்கிறது.

ஸ்பெயினில் உள்நாட்டு போர் உச்சத்தில் இருந்த போது, ஒரு செய்தி சேகரிப்பதற்கான பிரதிநிதியாக ஃப்ளின் அங்கே சென்றுள்ளார். போர் தொடர்பான தகவல்களை சேகரிக்கவும், காயமடைந்த கிளர்ச்சிப் படையினருக்கு மருத்துவ வசதி கிடைப்பதற்கான உதவிகளைச் செய்யவும் ஸ்பெயின் செல்வதாக அப்போது கூறியுள்ளார்.

அப்போது ஹெர்மான் எர்பன் (Hermann Erben) என்ற ஆஸ்திரேலிய மருத்துவரும் ஃப்ளினுக்கு உதவியாக சென்றுள்ளார்.

ஸ்பெயினில் போர் நடைபெற்ற இடங்களுக்கு சென்ற ஃப்ளின் எதிர்பாராத விதமாக காயமடைகிறார். மேட்ரிட் நகரின் பல்கலைக் கழகம் உள்ள பகுதியில் நடந்து சென்ற போது திடீரென இயந்திரத் துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும், இதில் ஆலிவுட் நடிகரும், நடிகை லில்லி டமிட்டாவின் கணவருமான எரோல் ஃப்ளினின் இடது கண்ணுக்குக் கீழே காயம் ஏற்பட்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடன் சென்ற மருத்துவ நண்பரான ஹெர்மான் எர்பன், காயமடைந்த எரோல் ஃப்ளின்னை உடனடியாக மீட்டு முதலுதவி அளிக்கும் மருத்துவ மனைக்கு அழைத்து சென்றதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.

எரோல் ஃப்ளின் ஸ்பெயினின் உள்நாட்டுப் போர் முனையில் காயமடைந்த இந்தச் சம்பவம் ஆலிவுட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான செய்தியாகிறது. எரோல் ஃப்ளினுக்கு லேசான காயம் தான்விரைவில் குணமடைந்து விடுவார் என்றெல்லாம், இன்றைய காலத்தைப் போலவே அப்போதும் பத்திரிகைகள் தகவல்களை வெளியிட்டுள்ளன. இந்தப் பரபரப்புக்கு இடையே, எரோல் ஃப்ளின் ஸ்பெயினில் இருந்து திரும்பிவிட்டார்.

ஆனால், முன்னர் கூறியபடி, காயமடைந்த கிளர்ச்சியாளர்களுக்கு உதவும் எந்த நடவடிக்கைகளையும் அவர் மேற்கொள்ளவில்லை என்பதுதான் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்துவிட்டது.    

உள்நாட்டுப் போர் தொடர்பான தனதுதி சார்ஜ் ஆப் தி லைட் பிரிகேட்படத்தின் வெற்றிக்கான விளம்பரமாகவே, எரோல் ஃப்ளின் இந்தப் பயணத்தை திட்டமிட்டு மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. குடியும், கும்மாளமுமாக பொழுதைக் கழிக்கும் உல்லாசப் பேர்வழியான எரோல் ஃப்ளின்,  போரில் காயமடைவோருக்கு உதவும் உள்ளம் கொண்டவராக எப்படி இருக்க முடியும் என ஜார்ஜ் செல்டஸ் (George Seldes) என்ற முதுபெரும் பத்திரிகையாளர் தனது புத்தகத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

தவிரவும், எரோல் ஃப்ளினுடன் சென்ற மருத்துவர் ஹெர்மான் எர்பன், நாஜி அமைப்பின் உறுப்பினர் என்பதால், எரோல் ஃப்ளினும் நாஜிகளின் ஆதரவாளரே என அவர் தெரிவித்துள்ளார்.

நாஜிகளுக்காக வேவு பார்க்கவும், சர்வாதிகாரி ஃப்ரான்சிஸ்கோ பிராங்கோவுக்கு ஆதரவான சூழலை ஏற்படுத்துவதற்காகவும் மட்டுமே எரோல் ஃப்ளின் ஸ்பெயின் சென்றுள்ளார் என்பது அவரது வாதம்.

இந்தக் குற்றச்சாட்டுகளை நம்பும் வகையில், எரோல் ஃப்ளின் ஸ்பெயினுக்கு சென்று வந்த சில மாதங்களிலேயே இரண்டாம் உலகப் போர் மூண்டு விட்டது. எரோல் ஃப்ளினின் ஸ்பெயின் பயணம் இன்றுவரை சர்ச்சைக்குரியதாகவே காணப்படுவதற்கு இதுவே காரணம்.

 

எதுஎப்படி இருப்பினும்,  ஸ்பெயின் பயணத்திற்கு பின்னர் எரோல் ஃப்ளினின் புகழ்க் கொடி உயரப் பறக்கத் தொடங்கியதை மறுப்பதற்கில்லை.

எனினும், எரோல் ஃப்ளினின் ஸ்பெயின் பயணம் குறித்த விமர்சனங்கள் உண்மை என்றோ, பொய்யானவை என்றோ இதுவரை நிறுவப்படவில்லை.

இரண்டாம் உலகப் போருக்கு முன்னோட்டமாக கருதப்பட்ட ஸ்பெயினின் உள்நாட்டு கிளர்ச்சிக்கான சாட்சியாக இருந்த எரோல் ஃப்ளின், ஃபிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கியூப புரட்சியையும், அதன் வெற்றியையும் நேரில் கண்ட சாட்சியாகவும் ஆகிப் போனதுதான் வரலாற்று வினோதம்.

திரைப்படங்களையும் விஞ்சும் திருப்பங்களை நிஜ வாழ்விலும் கொண்ட எரோல் ஃப்ளினை, எம்.ஜி.ஆர் தனது ரோல் மாடலாக கருதியதில் வியப்பில்லைதானே!

தொடரும்.