தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர், தயாரிப்பாளர்களில் ஒருவரான மறைந்த பி. ஆர். பந்துலு இயக்கத்தில் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் ‘சபாஷ் மீனா’.
சிவாஜி கணேசன், மாலினி, சரோஜாதேவி, சந்திரபாபு நடித்த இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. நகைச்சுவையை கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் சந்திரபாபு வெளுத்து வாங்கி இருப்பார்.
இரட்டை வேடம் ஏற்று நடித்த திரைப்படத்தில் ‘ரிக்ஷாக்காரன்’ கதாபாத்திரத்தில் சந்திரபாபு சென்னை வட்டார மொழியில் கலக்கி இருப்பார். இந்தப் படத்திற்கு இசை டி. ஜி. லிங்கப்பா. பாடல்கள் அனைத்தும் வெகு சிறப்பாக அமைந்திருந்தன.
இதில் சந்திரபாபு பாடுவதாக அமைந்த ஒரு பிரபலமான பாடலை எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கடைசிவரை இந்த பாடலை படமாக்க முடியாமல் போனது.
என்ன காரணமோ தெரியவில்லை. இந்தப் பாடல் காட்சி அந்த படத்தில் இடம் பெறாமலேயே போனது. புகழ்பெற்ற அந்தப் பாடல் கிடப்பிலே போடப்பட்டது.

பின்னர் 1959 ஆம் ஆண்டு எஸ். எம். ஸ்ரீ ராமுலு நாயுடுவின் தயாரிப்பில் ‘மரகதம்’ என்ற திரைப்படம் வெளியானது.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாட்டியப் பேரொளி பத்மினி, பாலையா நடித்திருந்த திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது.
சந்திரபாபு இதில் பாடிய “குங்கும பூவே, கொஞ்சு புறாவே” பாடல் இன்றுவரை இளம் ரசிகர்களையும் ஈர்த்துள்ளது. கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவியர் இந்த பாடலை பாடி அமோக வரவேற்பை பெற்று வருகிறார்கள்.
உண்மையில் சொல்லப்போனால் இந்த பாடல் மரகதம் படத்திற்காக எழுதப்பட்டதல்ல. 1958 ஆம் ஆண்டு வெளிவந்த சபாஷ் மீனா படத்திற்காக டி.ஜி. லிங்கப்பா இசையில் இந்தப் பாடல் எடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால் டி.ஜி.லிங்கப்பாவின் டியூன் மட்டுமே ரெடியாக இருந்தது. ஆனால் அதனை பயன்படுத்த முடியவில்லை.
இந்தச் சூழலில் தான் மரகதம் படம் எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது அதன் இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவிடம் சந்திரபாபு தன்னிடம் ஒரு டியூன் இருப்பதாகவும் அதை பயன்படுத்திக் கொள்ள முடியுமா? என்று கேட்டார்.
டியூனைக் கேட்ட எஸ்.எம். சுப்பையா நாயுடுவுக்கு மிகவும் பிடித்துப் போனது. இயக்குனரின் அனுமதியோடு “குங்குமப்பூவே கொஞ்சு புறாவே” என்ற பாடல் இந்தப் படத்தில் சேர்க்கப்பட்டது. பாடலை எழுதியவர் கு.மா. பாலசுப்பிரமணியன்.
ஆனால், இதனை டி. ஜி. லிங்கப்பா தான் இசையமைத்தார் என்ற விவரத்தை சந்திரபாபு சொல்லவில்லை. படம் வெளிவந்து சக்கைப் போடு போட்டது. சந்திரபாபுவின் திரை வாழ்க்கையில் இந்தப் பாடல் மைல் கல்லாய் அமைந்தது.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் திரை உலகை சேர்ந்த பிரபலமான ஒருவர் இந்தப் பாடல் குறித்த விவரத்தை மேடை ஒன்றில் தெரிவித்தார்.
அப்போதுதான் எஸ். எம். சுப்பையா நாயுடுவுக்கே இந்த உண்மை தெரிந்தது.

அதிர்ச்சி அடைந்த அவர் டி.ஜி. லிங்கப்பாவை தொடர்பு கொண்டு இந்தப் பாடலின் விவரம் தெரியாது என்றும் தனக்கு யாரும் சொல்லாததால் தன்னுடைய பெயரை போட்டுக் கொண்டதாகவும், தனக்கு தெரிந்திருந்தால் டைட்டில் கார்டில் தங்கள் பெயரை போட்டிருப்பேன் என்றும் மிகவும் பெருந்தன்மையோடு கூறினாராம்.
ஆனால், அதைவிட பெருந்தன்மையாக நடந்து கொண்ட டீ. ஜி. லிங்கப்பா, “அதனால் ஒன்றும் பரவாயில்லை” என்றும் “திரைப்பாடல் வெற்றி பெற்றால் போதும்” என்றும் தெரிவித்தாராம்.
அந்தக் காலத்தில் திரைப்பட கலைஞர்கள் இடையே போட்டி இருந்தாலும் பொறாமை ஒருநாளும் இருந்ததில்லை.
பெருந்தன்மையும் தொழிலின் மீது அவர்கள் கொண்ட பக்தியுமே தங்கள் வெற்றிக்கு காரணம் என்பதை புலப்பட வைத்திருக்கிறார்கள்.
இன்றைய கலைஞர்களுக்கு முன்மாதிரி ஆகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.
– லாரன்ஸ் விஜயன்