கவிஞர் வாலியின் பிறந்த தினத்தையொட்டி சிறப்புப் பதிவு.
ரஜினியின் படத்தில் பாடல் எழுதுவதற்காக, கவிஞர் வாலி ரஜினியின் அலுவலகத்திற்குச் சென்று அவருடன் பேசிக்கொண்டு இருக்கிறார்.
அப்போது, ரஜினியின் உதவியாளர் அவரிடம் வந்து காதில் கிசுகிசுக்கிறார். உடனே ரஜினி, கவிஞர் வாலியிடம் “இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு வெளியில் செல்கிறார்.
வெளியே வைரமுத்து ரஜினியைப் பார்க்க வந்து வாசலில் காத்துக்கொண்டு இருக்கிறார்.
ரஜினிக்குக் கொஞ்சம் சங்கடம். வைரமுத்துவை அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்வதா, வேண்டாமா என்ற குழப்பம்.
என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் இங்கேயே இருங்கள். இதோ ஒரு நிமிடத்தில் வந்து விடுகிறேன் என்று ரஜினி வைரமுத்துவிடம் சொல்லிவிட்டு, திரும்பவும் வாலி இருந்த அறைக்குள் வருகிறார்.
வந்தவர் கவிஞர் வாலியிடம் ஐயா, இன்று சிங்கமும் புலியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளப் போகிறார்கள் என்று சொல்கிறார்.
அதைக்கேட்ட வாலி உடனே, யாரு? வைரமுத்து வந்திருக்கிறாரா? என்று கேட்கிறார். ரஜினியும் ஆமாம் ஐயா என்று பதில் சொல்கிறார்.
உடனே கவிஞர் வாலி கேட்கிறார், “ஆமாம்… எங்களில் யார் சிங்கம், யார் புலி? என்று”. ரஜினிக்கு மிகவும் தர்மச்சங்கடமாகிவிட்டது.
“ஐயா, அது வந்துங்க… நீங்க ரெண்டு பேருமே…” என்று இழுக்கிறார் ரஜினி. அவரின் தயக்கத்தைப் புரிந்துகொண்ட ஐயா வாலி, “இதில் என்ன தயக்கம்? இங்கே நான் தான் சிங்கம்” என்று மிகச் சாதாரணமாக சொல்கிறார்.
ரஜினி, அவர் சொன்னதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் அசடாகச் சிரிக்கிறார். அவரைப் பார்த்த கவிஞர் வாலி,
“என்ன ரஜினி? என்னை நானே சிங்கம்ன்னு சொன்னது ஏன் என்று தெரியவில்லையா?” – என்று கேட்கிறார்.
ரஜினி இல்லை என்று தலையாட்டுகிறார்.
உடனே கவிஞர் வாலி, “இங்கே எனக்குத் தானய்யா தாடி இருக்கிறது” என்கிறார் தன் தாடியை நீவி விட்டுக்கொண்டே.
அவர் சொன்னதின் பொருளைப் புரிந்துகொண்ட ரஜினி வியந்து ரசித்துச் சிரிக்கிறார்.
ஆம், வாலி எனும் அம்மா கவிஞன் ஓர் சமயோசித பன்முகத்தார்!
*****************
ஒரு பட்டிமன்றம். கவியரசர் கண்ணதாசனும் கவிஞர் வாலியும் விழாவுக்கு தலைமை தாங்குகிறார்கள்.

தலைப்பு, கண்ணகி மேலா? மாதவி மேலா?
விழா தொடங்குவதற்கு முன் இருவரும் மேடைக்குக் கீழே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
கவியரசர் வாலியிடம் கேட்கிறார்.
“என்ன வாலி, நீ என்ன நினைக்கிறே.?கண்ணகி மேலா? மாதவி மேலா”?
வாலியின் வார்த்தை ஜாலத்தை இங்கே குறிப்பிட்டாகிவிடும்.
கவிஞரே, கண்ணகி மேலுமில்லை. மாதவி மேலுமில்லை. இருவருமே (Female) பெண்கள் என்கிறார்.
கவியரசர் பெருங்குரலெடுத்து சிரிக்கிறார். யோவ் வாலி, பெயருக்கு ஏற்றார் போல் உன் குரங்குத்தனம் உன்னை விட்டுப் போகலையா.
நன்றி: முகநூல் பதிவு