Take a fresh look at your lifestyle.

“ஐ கோ நோ ஸ்கூலு.. ஐ ஒர்க் ஹார்டு…”

– சின்னப்பா தேவர்

இன்றைய வாசிப்பு :

“கோவையில் கோதாப்பட்டி வைத்திருந்த சின்னப்பா தேவர், நண்பர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு வந்து நாகிரெட்டியாரிடம் கொடுத்துப் படம் தயாரிக்க ஆரம்பித்தவர்.

எல்லா வேலைகளிலும் நாகிரெட்டியார் உதவி செய்ததால், எம்.ஜி.ஆரை வைத்துத் தான் எடுத்த 16 படங்களுக்கும் படப்பிடிப்பை க்ளாப் அடித்து நாகிரெட்டியாரையே தொடங்க வைத்தவர் தேவர்.

‘ஹாத்தி மேரா சாத்தி’ படத்தை இந்தியில் எடுத்தவர். அவருக்கு ஹிந்தியும் தெரியாது. ஆங்கிலமும் தெரியாது. அந்தப் பட வெற்றிக்காக வட இந்தியாவில் விழா நடக்கிறது.

“ஹி இஸ் பிளாக்மேன் ஃப்ரம் சௌத் இண்டியா க்ரியேட்டட் ஹிஸ்டரி” என்கிறார்கள்.
அவரை நன்றி உரை ஆற்ற அழைக்கிறார்கள்.

தேவருக்கு பத்தே பத்து ஆங்கில வார்த்தைகள் தான் தெரியும். அதை வைத்துக் கொண்டு தானே நேரடியாக பிஸினஸ் பேசி ஜெயித்தவர். மைக் முன்வந்து நின்று தொண்டையைக் கனைத்தார். அதற்கே கை தட்டு விழுந்தது.

‘லேடிஸ் அண்ட் ஜெண்டில்மேனு, ஐ கோ நோ ஸ்கூலு.. ஐ ஒர்க் ஹார்டு.. லார்டு முருகா கிவ் மீ மனி.. ஐ டேக்.. நமஸ்தே” என்றார். மேட்டர் முடிந்துவிட்டது.

படிக்காதவர் இப்படித்தான் சமாளித்துப் படங்கள் எடுத்தார். எம்.ஜி.ஆரை வைத்து நூறு நாள் படங்களாக எடுத்தவர். அப்போது தான் ஆட்டை வைத்து ஒரு படம் எடுத்தார்.

“என்னங்க.. ஆட்டை வைத்துப் படம் எடுக்கிறீர்களே?” என்ற போது, “டேய்.. சிவா.. சும்மா இரு.. இதை எப்படியாவது அடிச்சுப் புடிச்சு ரிலீஸ் பண்ணிடுவோம். அடுத்ததா ஒரு நல்ல படம் எடுப்போம்” என்றார் தேவர்.

அந்தப் படம் தான் ‘ஆட்டுக்கார அலமேலு’.

சில்வர் ஜூப்ளி..!”

அந்திமழை ஆகஸ்ட் 2019 மாத இதழில் ‘தமிழ் சினிமா: ஸ்டூடியோவின் மடியில்’ என்ற தலைப்பில் வெளியான நடிகர் சிவகுமாரின் கட்டுரையில் இருந்து ஒரு பகுதி.