Take a fresh look at your lifestyle.

ஆளுமையின் சின்னம் கேப்டன் விஜயகாந்த்!

வரும் ஜனவரி 6ம் தேதி தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை திரையுலகில் உள்ள அனைத்துக் கலைஞர்களும் இணைந்து நடத்துகிறார்கள். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இதனை தலைமையேற்று நடத்துகிறது.

இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று திரையுலகின் இரண்டாவது, மூன்றாவது நடிகர், நடிகைகளை கூட சங்க நிர்வாகிகள் வீட்டிற்கு, அலுவலத்திற்கு, படப்பிடிப்பு தளத்திற்கு நேரில் சென்று அழைத்து வருகிறார்கள்.

இப்படியான காலச்சூழலில் தென்னிந்திய நடிகர் சங்கம் தலைமையில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாராட்டு விழா நடத்தியபோது நடிகர் சங்கத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் எப்படி அழைத்தார் என்பதன் ஒரு சின்ன பிளாஷ் பேக்.

நடிகர் சங்கத்தின் தலைவர் அறையில் கேப்டன் விஜயகாந்த் கெத்தாக அமர்ந்திருக்கிறார். பாராட்டு விழாவில் நடத்த இருக்கும் கலை நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசனை செய்து கொண்டிருக்கிறார். திடீரென ஏதோ நினவைு வந்தவராக..

விஜயகாந்த்: புதுசா, செவப்பா ஒரு பையன் வந்திருக்கானே… அட நல்ல டான்செல்லாம் ஆடுறானேப்பா அவன் பேரென்ன…

உதவியாளர்: பரத்துண்ணே….

விஜயகாந்த்: அவனுக்கு ஒரு போனை போடு

(உதவியாளர் போன் பண்ணி கேப்டனிடம் கொடுக்கிறார். கேப்டன் பேசுகிறார்)

விஜயகாந்த்: தம்பி நான் கேப்டன் பேசுறேன்

பரத்: அண்ணே சொல்லுங்கண்ணே…

விஜயகாந்த்: சி.எம். மேடத்துக்கு நாம பாராட்டு விழா நடத்துறோம் தெரியும்ல…

பரத்: தெரியும்ணே… ஏற்பாடெல்லாம் பெருசா நடக்குதண்ணே… ரொம்ப மகிழ்ச்சியா இருக்குண்ணே….

விஜயகாந்த்: அப்போ சரி…. நீ ஒரு நாலு மணிக்கு நான் சொல்ற இடத்துக்கு வந்துடு

பரத்: எதுக்குண்ணே… எங்க வரணும்

விஜயகாந்த்: அதாம்பா டான்ஸ் ரிகல்சல்லாம் நடக்குதுல்ல அங்க வந்துடு. விழாவுல நீயும் ஒரு ஆட்டத்த போடுற….

பரத்: டான்சா…. அண்ணே… எனக்கு டான்ஸ் தெரியுதுண்ணே…

விஜயகாந்த்: (சற்று கோபத்துடன்) நீ ஆடின ‘லஜ்ஜாவதியே… பாட்டை பார்த்துட்டுதானே கூப்புடுறேன்…

பரத்: அதில்லண்ணே…

விஜயகாந்த்: இந்தா பாரு கூப்பிட்டா வரணும். ஷூட்டிங் இருக்கு, வெளியூர் போறேன், டைம் இல்லை… இந்த கதையெல்லாம் என்கிட்ட சொல்லக் கூடாது. நீ நாலு மணிக்கு வந்துடு.

பரத்: அண்ணே நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க… நான் நடிகர் பரத் இல்லண்ணே ‘நியூஸ் டூடே’ ரிப்போர்ட்டர் பரத்துண்ணே…

விஜயகாந்த்: அப்படியா… சாரி தம்பி… செய்திய நல்லா போடுங்க…

இந்த உரையாடலுக்கு பிறகு தவறாக போன் போட்டு கொடுத்தவருக்கு என்ன நடந்திருக்கும் என்பதை கற்பனை செய்து கொள்ளுங்கள். என்றாலும் அந்த தவறான போன்தான். கேப்டன் விஜயகாந்த் என்ற ஆளுமையின் வெளிப்பாட்டுக்கு காலம் கொடுத்த ஆதாரம்.

நன்றி: முகநூல் பதிவு