-‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு!
இயக்குநரும், நடிகருமான ஆர்.ஜே. பாலாஜி முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் ‘சொர்க்கவாசல்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் முன்னணி நட்சத்திர இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் பிரபல இசையமைப்பாளர் அனிருத் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு முன்னோட்டத்தை வெளியிட்டனர்.
அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சொர்க்கவாசல்’ படத்தில் ஆர். ஜே. பாலாஜி, இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், நடிகை சானியா ஐயப்பன், ஷஃரப் உதீன், ஹக்கீம் ஷா, பாலாஜி சக்திவேல், கருணாஸ், ரவி ராகவேந்திரா, அந்தோணி தாசன், சாமுவேல் ராபின்சன், எழுத்தாளர் ஷோபா சக்தி, மௌரிஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார்.
சர்வைவல் க்ரைம் திரில்லர் ஜானரிலான இந்தத் திரைப்படத்தை ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கின்றன.
உலகம் முழுவதும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர். பிரபு மற்றும் எஸ். ஆர். பிரகாஷ் பாபு இணைந்து வழங்குகிறார்கள்.
வரும் 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீடு மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தினை உலகம் முழுவதும் வெளியிடும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான எஸ். ஆர். பிரபு, திங்க் ஸ்டுடியோஸ் சந்தோஷ், படத்தின் நாயகன் ஆர். ஜே. பாலாஜி, நாயகி சானியா ஐயப்பன், நடிகர் ஹக்கீம் ஷா, இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத், ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன், கதாசிரியர்கள் தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இதர படக்குழுவினரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஆர்.ஜே. பாலாஜி, “இந்தப் படத்தின் டீசர் வெளியானவுடன் என்னுடைய நண்பர்களான நிறைய ஹீரோக்கள், இயக்குநருக்கு போன் செய்து பாராட்டி இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் பிரின்ஸ் ஆண்டர்சன் குழுவினரும் திறமையானவர்கள். அவளர்களுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இவர்களிடமிருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்.
நான் நடித்த திரைப்படங்களிலேயே இந்தப் படத்தில் தான் போட்டோகிராபி சிறப்பாக இருக்கிறது. மிகப்பெரிய வேலையை எளிதாகவும், சிரமமின்றியும் செய்பவர் ஒளிப்பதிவாளர் பிரின்ஸ். அவருக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.
இப்படத்தின் எடிட்டர் செல்வாவுடன் இணைந்து ‘எல்கேஜி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷங்க’, ‘சிங்கப்பூர் சலூன்’ என அனைத்து படத்திலும் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.

இந்தப் படத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
கதாசிரியர் தமிழ் பிரபாவின் எழுத்துக்கு நான் மிகப்பெரிய ரசிகன்.
இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலானது. ஏனெனில் படத்தை இயக்கிய சித்தார்த் 15 ஆண்டு காலத்திற்கு முன் நான் கிரிக்கெட் விளையாடும் போது எனக்கு பின்னால் நின்று கொண்டிருப்பான். அவனது இயக்கத்தில் நடித்திருக்கிறேன்.
நான் சூர்யாவின் படத்தை இயக்கிக் கொண்டிருப்பதற்கும், இப்படத்தின் தயாரிப்பாளரான சித்தார்த் ராவிற்கு பங்கு உண்டு. அவருடைய முதல் பட தயாரிப்பில் நானும் இடம் பெற்றதற்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய மனைவி திவ்யா நாகராஜன் இந்த நிகழ்விற்கு வருகை தந்திருக்கிறார். அவர் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்வு இதுதான்.
இதற்கு முன் ஒரு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சர்ச்சையை ஏற்படுத்து வகையில் எதையாவது பேச வேண்டும் என்று இருந்தது.
ஆனால் பேசுவதற்கு எதுவும் இல்லை என்றாலும் பரவாயில்லை. படத்தின் கன்டென்ட் நன்றாக இருந்தால் அது மக்களிடம் ரீச் ஆகிவிடும்.
நான் 2006ம் ஆண்டிலிருந்து இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். விற்பனை செய்வதற்காக ஒரு கடைக்கு நாம் பிஸ்கட்டை எடுத்துச் சென்று விட்டால் அதை மற்றவர்கள் நன்றாக இருக்கிறது. இல்லை என்று சொல்லத்தான் செய்வார்கள். அதேபோல் தான் சினிமாவும். ரசிகர்களை சென்றடைந்த பின் ஒரு படத்தைப் பற்றி அவர்கள் விமர்சனம் செய்வார்கள்.
ஒரு படம் வெளியான பிறகு அதைப்பற்றி யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். யூடியூபில் விமர்சிக்கலாம்… ட்விட்டரில் விமர்சிக்கலாம் .. இன்ஸ்டாகிராமில் விமர்சிக்கலாம். அது அவர்களுடைய சுதந்திரம். யாரும் அவர்களிடத்தில் இருக்கும் செல்போனை பறிக்க முடியாது. அதனால் விமர்சனம் குறித்த கட்டுப்பாடு நம்மிடத்தில் இல்லை.
சொர்க்கவாசல் படத்தில் கன்டென்ட் நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை பார்த்து நன்றாக இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காகத் தான் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
நான் பாவாடையும் கிடையாது. சங்கியும் கிடையாது. அனைத்து அரசியல் கட்சியின் ஐ.டி விங்கிடம் ஒரு பணிவான வேண்டுகோள் வைக்கிறேன்.
நீங்கள் அரசியலை மட்டும் பாருங்கள். சினிமாவை விட்டு விடுங்கள். சினிமாவில் வாரந்தோறும் திரைப்படங்கள் வெளியாகின்றன.
திரைப்படங்களை விமர்சித்து அதனை அழிப்பதில் எதற்காக உங்களுடைய ஆற்றலை வீணடிக்கிறீர்கள்.
அதேபோல் ரசிகர்களிடத்திலும் ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். அதாவது ரஜினி ரசிகர்கள் – கமல் ரசிகர்கள் – விஜய் ரசிகர்கள் – அஜித் ரசிகர்கள் – என எல்லா ரசிகர்களும் நல்ல திரைப்படங்களைப் பாருங்கள். படம் பிடிக்கவில்லை என்றால் விமர்சனம் செய்யுங்கள். அது உங்கள் உரிமை. ஆனால் அவர்கள் படம் வந்தால் எதிர்க்காதீர்கள்.” என்றார்.