‘ரஜினிகாந்த் இப்போது லைகா நிறுவனம் தயாரிக்க ஞானவேல் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். ‘தலைவர் 170’ என தற்காலிகமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த படத்தில் அமிதாப்பச்சன், ராணா, ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.
அனிருத் இசை அமைக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், நெல்லை மாவட்டம் பணகுடி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட ஷுட்டிங் மும்பையில் தொடங்கியுள்ளது. அமிதாப் ரஜினி பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.
28 ஆம் தேதி வரை படப்பிடிப்பு நடக்கிறது. இந்நிலையில் ரஜினிகாந்த், திடீரென நடிகர் லிவிங்ஸ்டனை, ஞாயிற்றுக்கிழமை தனது வீட்டுக்கு வரவழைத்து பேசியுள்ளார்.

இது பற்றி அறிந்த லிவிங்ஸ்டன் மகள், தானும் ரஜினியை பார்க்க வருவேன் என அடம் பிடிக்க, மகளையும் அழைத்துக்கொண்டு ரஜினியை அவரது வீட்டில் சந்தித்துள்ளார், லிவிங்ஸ்டன்.
ரஜினியும், லிவிங்ஸ்டனும் அங்கு எடுத்த போட்டோவை, தனது சமூக வலைத்தளத்தில் லிவிங்ஸ்டன் மகள் வெளியிட்டுள்ளார்.
ரஜினியை சந்தித்தது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு இது:
‘என் அப்பாவை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தனது வீட்டுக்கு வருமாறு அழைத்தார். தலைவருக்கு என் அப்பா நெருக்கமானவர் என்பது எனக்கு தெரியும். ஆனால் தனது வீட்டுக்கு வருமாறு அழைப்பார் என நினைக்கவில்லை.
தலைவரை பார்க்க என்னையும் அழைத்து போங்கள் என அப்பாவிடம் கெஞ்சினேன். அழைத்து சென்றார்.’ என குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியுடன் சிவாஜி, குசேலன், அண்ணாத்தே ஆகிய படங்களில் லிவிங்ஸ்டன் நடித்துள்ளார். ‘தலைவர் 170’ படத்தில் லிவிங்ஸ்டனுக்கு இடம் உண்டா என்பது தெரியவில்லை.
-பாப்பாங்குளம் பாரதி.