அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்த ‘புஷ்பா’ முதல் பாகம், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களைப் பெற்றதோடு, வசூலையும் வாரிக்குவித்தது.
செம்மரக் கடத்தலை மையப்படுத்தி, இந்தப் படத்தை சுகுமார் இயக்கி இருந்தார். அதன் தொடர்ச்சியாக ‘புஷ்பா -2′ படம் தயாரானது.
அல்லு அர்ஜுன் – சுகுமார் கூட்டணி இரண்டாம் பாகத்திலும் தொடர்ந்தது. ‘புஷ்பா’ முதல் பாகத்தில், கதாநாயகியாக நடித்திருந்த ராஷ்மிகா தான் இரண்டாம் பாகத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.
இரண்டாம் பாகத்தில் பகத் ஃபாசிலுக்கு பிரதான வேடம். தெலுங்கில் உருவான இந்தப் படம், தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நேற்று (05.12.2024) உலகம் முழுவதும் ‘ரிலீஸ்’ ஆனது.
‘புஷ்பா – 2’ திரைப்படம் முன்பதிவு மூலமாக மட்டும் 100 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், முதல் நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி, ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளது.
தெலுங்கில் தயாரிக்கப்பட்டு, முதல் நாளில் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த திரைப்படம் என்கிற சாதனையை எஸ்.எஸ். ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் உருவாக்கி இருந்தது.
அந்தப் படம் முதல் நாளில், 158 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. அதனை ‘புஷ்பா-2’ முறியடித்துள்ளது.
முதல் நாளில், இந்தியாவில் ‘புஷ்பா 2’ திரைப்படம், 175 கோடி ரூபாய் வசூலித்ததாக ஆங்கில நாளிதழ்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.
தெலுங்கில் ரூ. 95 கோடி, இந்தியில் ரூ.67 கோடி, கேரளாவில் ரூ.5 கோடி, கன்னடத்தில் ரூ.1 கோடியும் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்திலும் சாதனை
முன்னொரு காலத்தில் தமிழ் படங்களைத் தவிர்த்து, இந்திப் படங்கள்தான், தமிழக ரசிகர்களை கவர்ந்தன. வசூலையும் அள்ளின. ‘மரோ சரித்ரா’ போன்ற படங்கள் விதி விலக்கு.
ஆனால் இயக்குநர்கள் கைக்கு தெலுங்கு படங்கள் சென்றுள்ள நிலையில், அங்கிருந்து வரும் படங்களும் வசூலை அள்ளுகின்றன.
பாகுபலி-1, பாகுபலி-2, புஷ்பா-1 போன்ற படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அந்தப் படங்களை எல்லாம் தாண்டி, இப்போது வெளியாகி இருக்கும் ‘புஷ்பா-2’ புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
தமிழ்நாட்டில், இந்தப் படம் சுமார் 800 தியேட்டர்களில் ‘ரிலீஸ்’ ஆகி இருக்கிறது. முதல் நாளில் மட்டும் 8 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. எந்த ஒரு ‘டப்பிங்’ திரைப்படமும் இந்த அளவுக்கு இங்கே வரவேற்பைப் பெற்றதில்லை.
கலவையான விமர்சனங்களைப் பெற்ற போதிலும், அதை எல்லாம் தாண்டி, இந்தப் படம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.