‘நடனப் புயல்’ பிரபுதேவாவும், ‘வைகைப்புயல்’ வடிவேலுவும் சேர்ந்து 1990-களில் தமிழ் திரையுலகில் புயலாக வலம் வந்தனர். ‘காதலன்’ படத்தில் இந்த ஜோடியை இணைத்து விட்டவர் இயக்குநர் ஷங்கர்.
நடனத்தில் தேவாவும், உடல்மொழியில் வேலுவும் அந்தப் படத்தில், தங்கள் அதகளத்தை ஆரம்பித்தனர்.
தொடர்ந்து இவர்கள் ஜோடியாக வந்துபோன சினிமாக்கள் வணிக ரீதியாக வெற்றி பெறாமல் போனாலும், அந்தப் படங்களில் இவர்கள் காமெடி இன்றளவும் ரசிக்கப்படுகிறது. காமெடி சேனல்களில், இவர்கள் வந்தால் யாரும் ரிமோட்டைத் தொடுவதில்லை.
‘மிஸ்டர் ரோமியோ’வில் வரும் வசனங்களும், ‘மனதை திருடிவிட்டாய்’ படத்தின் புகழ்பெற்ற “சிங் இன் தி ரெயின்” காட்சியும், ‘எங்கள் அண்ணா’வில் இருவரின் கலாட்டாக்களும் வேற லெவல்.
பிரபுதேவா இயங்கிய போக்கிரி, வில்லு ஆகிய இரு படங்களில் வடிவேலுவின் காமெடி ரசிகர்களைத் தியேட்டர்களுக்குக் கொண்டு வந்து சேர்த்தது.
பிரபுதேவா, ஒருகட்டத்தில் இந்திக்குச் சென்றுவிட்டார். வடிவேலு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். இதனால் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.
இந்நிலையில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரபுதேவா, வடிவேலு இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர்.
இந்தப் படத்தை டார்லிங், எனக்கு இன்னொரு பெயர் இருக்கு போன்ற படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இயக்குகிறார்.
மற்ற நடிகர்கள், கலைஞர்கள் இன்னும் முடிவாகவில்லை. விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.