Take a fresh look at your lifestyle.

நீ கொன்னாக்கூட தப்பு இல்ல, நீ சொன்ன சாகும் இந்தப் புள்ள!

உலகத் தரத்திற்கான ஒரு தமிழ்த் திரைப்படம் விரைவில் வந்துவிடும் என்கிற நம்பிக்கையை ‘வெயில்’ வரைக்குமான சில திரைப்படங்கள் உருவாக்கியிருக்கின்றன என்று மகிழ்ந்திருந்த நிலையில், உலகத் தரத்தைத் தொட்டுவிடுகிற ஒரு படமாக வந்திருக்கிறது அமீரின் ‘பருத்திவீரன்’!

உசிரு வெறும் மசுரு என்கிற விதமாய்த் துணிவை இயல்பாய் வரித்துக்கொண்டு வாழ்கிற, மண் சார்ந்த மனிதக் கூட்டங்களின் உள்முகங்கள், மனக்கறுவல்கள். குசும்புகள் இத்தனை அம்மணமாக இதுவரையும் தமிழில் படமாக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

கதாபாத்திரங்களின் தேர்வாகட்டும், கதாபாத்திரங்களைப் பயன்படுத்திய விதமாகட்டும், நெஞ்சழுத்தம் நிறைந்த ஒரு மண் வாழ்க்கையை அப்படியே கண்முன் நிறுத்திய விதத்திலாகட்டும், அமீர் தனித்துத் தெரிகிறார்.

‘சொல் புதிது, பொருள் புதிது, சுவை புதிது’ என்பதுபோல் படத்தின் மொழி புதிதாயிருக்கிறது. காட்சிப்படுத்தல், பொட்டல் பூமியின் பொருமல்களைக் கரடுமுரடாக அம்மணமாக்கித் தருவதாயிருக்கிறது.

பார்வையாளருக்கு அதனால் உருவாகும் சுவை புதிய எண்ணங்களைக் காட்டுவதாயிருக்கிறது.

பார்வையாளர் உணர்வும் படத்தின் உணர்வும் பல இடங்களில் ஒத்துப்போகிற விந்தை, மிக இயல்பாக ஒரு நாளின் பொழுதுகள் போல் சாதாரணமாகக் கடந்து செல்வது ஆச்சர்யமாயிருக்கிறது.

சாதியின் விலா எலும்பைத் தரித்தெடுத்த முடிச்சுதான் பருத்தி வீரன்.

திரைக்கதை மிக லாவகமாக அந்த முடிச்சைப் போடுவதும் உறுத்தலின்றி அதை மெதுவாக அவிழ்ப்பதும் எந்த நெருடலுமின்றி மிக அற்புதமாகப் பதிவாகியிருக்கிறது.

‘அவளுக்கென்று ஒரு மனம்’ திரைப்படத்தின் உச்சம் தராத ஆத்ம அலைவை ‘பருத்தி வீரன்’ இயல்பான தளத்திலேயே செய்திருக்கிறது என்பது பாராட்டப்பட வேண்டியது.

பல முரண் இணைவுகள் மனசை மகிழ்ச்சிப்படுத்துகின்றன. காட்சிகள் விளையாட்டுத்தனமாக எடுக்கப்பட்டிருப்பதான தோற்ற மயக்கத்தைத் தருகின்றன. ஆனால் கூடுதல் ‘தரம்’ அதற்குள் பொதிந்துள்ளதாகத் தெரிகிறது.

பயன்படுத்தும் மொழி மிகச் சாதாரணமாக இருக்கிறது. ஆனால் பட நிகழ்வை அற்புத மாக்குகிறது. படத்தில் வரும் மனிதர்கள், நாம் சந்திக்கிற மனிதர்களாகவே இருக்கின்றனர்.

ஆனால் இதுவரையும் நிழல் வடிவில் காட்டப்பெறாத மனிதர்களாகவே இருக்கின்றனர். இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இன்னும் கொஞ்சகாலம் எல்லார் மனசுக்குள்ளும் முத்தழகி (ப்ரியாமணி) பச்சைகுத்தப் பட்டிருப்பார். பருத்திவீரனுக்கு (கார்த்தி) இது முதல்படம் என்றால் யாரும் நம்பமுடியாது. அவரின் நுழைவுக் காட்சியே நிமிர வைத்துவிடுகிறது.

சித்தப்பா சரவணனின் உடல்மொழி இப்படி மாறிப் போனதன் மூலம் அவருக்கு மிகப்பெரிய புதுவாழ்வு!

படத்தின் இறுதிச் சட்டகம் ப்ரியாமணி வானத்திலிருந்து கையசைந்துத்துக் கொண்டிருப்பது தான், பார்ப்பது படம் என்பதை நினைவுபடுத்துகிறது.

கதை பருத்தியூரைத் தாண்டிப் போகாமல் அதற்குள்ளேயே அங்குள்ள மனிதர்களால் முடிந்துபோவது அழகு! பின்னணி இசையும் அங்கு வாழும் மக்களின் மண்ணைப் பிசைந்து கொடுப்பதாக இருக்கிறது.

ஒளிப்பதிவு அற்புதம் என்பதும் கலை இயக்கம் அருமை என்பதும் படத்தொகுப்பு அழகு என்பதும் மிகக் குறைவான பாராட்டுரைகள்தாம்! ‘நீ கொன்னாக்கூட தப்பு இல்ல, சொன்னா சாகும் இந்தப் புள்ள’ இதுதான் ‘பருத்திவீரன்’!

– ‘பருத்தி வீரன்’ படம் 2007-ல் மார்ச் மாதம் வெளிவந்த போது முனைவர் ‘மு.ராமசாமி’ புதிய பார்வை, இதழில் எழுதிய விமர்சனம். 

#இயக்குநர்_அமீர் #Director_Ameer #பருத்திவீரன் #Paruthiveeran  #விமர்சனம் #Review #ப்ரியாமணி #Priyamani #கார்த்தி #Karthi #சரவணன் #Saravanan