மன்சூர் அலிகான், சென்றாயன், அப்புக்குட்டி, இயக்குனர் பேரரசு, வி.ஆர்.விநாயக் மாரிமுத்து நடிப்பில், அழகுமலை கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி தயாரித்து முக்கிய வேடம் ஒன்றில் நடித்து இயக்கி இருக்கும் படம் ‘பருந்து’.
முதல் மகளுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கும் நிலையில், இரண்டாவது மகள், டிரைவரோடு ஓடிப் போகிறாள். துடிதுடித்துப் போகிறார்கள் அப்பாவும் (மாரிமுத்து) அம்மாவும்.
பஞ்சாயத்து தலைவரும் தனது நண்பருமான ஒருவரிடம் (அழகுமலை) உதவி கேட்கிறார் அப்பா.
அவரது தம்பியின் (விநாயக்) காதலியான ஒரு போலீஸ் காவலர் உதவியோடு ஓடிப் போன காதல் ஜோடி இருக்குமிடம் தெரிய வருகிறது.
காதலனின் பெற்றோர் தலைவரிடம் ”என் புள்ளையை கண்டுபிடிச்சா உயிரோடு கொடுத்துடுங்கய்யா…” என்று கெஞ்சுகிறார்கள். தலைவரும் உறுதி அளிக்கிறார்.
ஆனால், காதலியின் தாய்மாமன் (மன்சூர் அலிகான்) காதலனைக் கண்டுபிடித்து வெட்டுவேன் என்று அலைகிறான்.
அந்தக் காதலனின் ஏரியாவைச் சேர்ந்த ஒரு ஃபிராடு நபரும் (சென்றாயன்) அவனது அம்மாவும் காதல் ஜோடியை மறைத்து வைத்திருக்கிறார்கள்.
அவர்களைக் கண்டுபிடித்துக் கேட்டால் அவர்கள் உண்மையைச் சொல்ல மறுக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் அண்ணாமலை என்ற ஒரு வக்கீல் (இயக்குநர் பேரரசு) இருக்கிறார்.
பெண்ணின் தகப்பனின் சூழ்நிலையை வக்கீலுக்கு புரிய வைக்க, அவர் பெண் வீட்டாருக்கு உதவ முன் வருகிறார்.
விஷயம் அறிந்த பிராடு நபர், காதலனிடம் ”உடனைடியாக அவளோடு உடலுறவு வைத்துக் கொள். குழந்தை உருவாகிவிட்டால் அப்புறம் உங்களைப் பிரிக்க முடியாது” என்று ஐடியா கொடுக்கிறான். காதலனும் முயல, அவளுக்கு மாதவிலக்கு.
அவனால் முடிந்ததா? அதற்குள் காதல் ஜோடியை தலைவர் கண்டுபிடித்தாரா? ஓடிப்போன பெண்ணின் அக்காவின் திருமணம் என்ன ஆனது என்பதே இந்த பருந்து.
மதுரைக்கு கோயில் கோபுரங்கள் பின்னணியில் திரையில் விரியும் டைட்டில்கள் நன்றாக இருக்கிறது.
ஒரு மகளுக்கு கல்யாணம் நடக்க இருக்கும் நிலையில், இளையவள் காதலனோடு ஓடிப்போன சூழலில் பாதிக்கப்படும் அந்தக் குடும்பத்தின் பதட்டத்தை உணர வைக்கிறார்கள்.
படத்தை எழுதி இயக்கி தயாரித்து இருக்கும் அழகுமலை மதுரைப் பக்கம் நிஜமாகவே பஞ்சாயத்து தலைவராம். நிஜத்தில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறாராம்.
“பக்கத்து வீட்டுக்காரன், எதிர் வீட்டுக்காரன் பொண்டாட்டியையே பாத்துக்கிட்டு இருக்கான். அது என்னன்னு பாருங்க..” என்பதை எல்லாம் பிரச்னையாக நிஜத்தில் அவரிடம் கொண்டு வருவார்களாம். அதை எல்லாம் ஒரு காட்சியாக வைத்துள்ளார்.
வசந்த் என்ற அனுபவமிக்க இணை இயக்குநரை வைத்துக் கொண்டு படத்தை எடுத்துள்ளார்.
நேர்மையான பஞ்சாயத்துத் தலைவர் என்ற அவரது – அல்லது அவருக்கு தேவையான – அரசியல் இமேஜுக்கான ஷோ ரீல் என்றும் இந்தப் படத்தை சொல்லலாம். நடிப்பிலும் ஓகே தான்.

முதல் சண்டைக் காட்சியை அட்டகாசமாக எடுத்து இருக்கிறார் ஸ்டண்ட் மாஸ்டர் முருகன்.
காசி விஸ்வநாதனின் ஒளிப்பதிவு லாங் ஷாட்களில் ஓடிப்போன பெண்ணைத் தேடும் உணர்வை சிறப்பாக உணர வைக்கிறது.
சத்தம் கொஞ்சம் அதிகம் என்றாலும் ஜோன்ஸ் ரூபர்ட்டின் பின்னணி இசை பரபரப்பு கூட்டுகிறது. பாடல்கள் இசையும் ஓகே தான்.
”புள்ளைங்கள்… கொள்ளுங்கள்…” என்றெல்லாம் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார் அழகுமலை.
சண்டை நாயகனாக வருகிறார் வி.ஆர்.விநாயக் அவரது காதலியாக வருபவர் ஒரே சிரிப்பில் சில கோணங்களில் ரசிக்கவும் சில கோணங்களில் பயமுறுத்தவும் செய்கிறார்.
சேலை கட்டினால் வயதானவராகவும் மாடர்ன் ட்ரெஸ்ஸில் கொஞ்சம் இளம்பெண்ணாகவும் தெரிகிறார்.
செயற்கையான வசனங்கள், நாடகத்தனமான காட்சி அமைப்புகள் மற்றும் சிலரின் நடிப்புகள், காமெடி என்று அவர்களாகவே நினைத்துக் கொண்டு எழுதி இருக்கும் சில வசனங்கள், தேவைக்கு மேல் நீளும் சில ஷாட்கள் என்று படத்தில் போதாமைகள் இருந்தாலும்…
சினிமாவில் வழக்கமாக காதலை அணுகும் பொதுப் புத்தியில் இருந்து விலகி வித்தியாசமாக அணுகுகிறது இந்தப் படம்.
காதலர்கள் என்றாலே அவர்கள் பக்கம்தான் நிற்க வேண்டுமா? குடும்பம் மற்றும் பெற்றோர் பக்கம் நின்றால் என்ன என்று இந்தப் படம் கேள்வி கேட்கிறது.

ஒரு காதல் உண்மையான காதல் போலவே இருந்தாலும், அந்த காதலுக்கு உதவுபவர்கள் யார்? அவர்கள் நோக்கம் என்ன? அப்பா அம்மா சகோதர சகோதரிகளின் நலனை யோசிக்காத காதல் சரியானதா என்று கேள்விகளையம் மறைமுகமாக கேட்கிறது.
விஜய் நடித்த பழைய லவ் டுடே படத்தில் ”எங்க அப்பா செத்த பிறகுதான் எனக்கு உன் காதல் கிடைக்கும்னா அந்தக் காதலே எனக்கு வேணாம்.” என்று ஹீரோ தூக்கி எறிவானே.. அந்த மாதிரியான (அதே கதை அல்ல) படம் இது.
அதுவும் காதல் ஜோடியை பஞ்சாயத்துத் தலைவர் பிடித்த பின் வரும் காட்சிகள் மெச்சூரிட்டியாக, அட என்று ஆச்சர்யப்பட வைக்கும்படி இருக்கிறது. அதனால் இந்தப் படமும் கவனிக்க வைக்கிறது.
பருந்து… பெரிய விருந்து எல்லாம் இல்லைதான். ஆனால், ஆரோக்கிய மருந்து.
– சு. செந்தில் குமரன்