‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் திரைப் பயணத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் படங்களில் ஒன்று – ‘படையப்பா’. கே.எஸ். ரவிக்குமார் இயக்கிய இந்தப் படம் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10-ம் தேதி தமிழ் புத்தாண்டை யொட்டி வெளியானது.
சவுந்தர்யா கதாநாயகியாக நடித்திருந்த இந்தப் படத்தில், அவரை விட சக்தி வாய்ந்த வில்லி வேடத்தில் ரம்யா கிருஷ்ணன், மிரட்டி இருப்பார். சிவாஜி கணேசன் உள்ளிடோர் நடித்திருந்த படையப்பாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்திருந்தார்.
உலகம் முழுவதும் வெளியான இந்தப் படத்துக்கு 210 பிரிண்டுகள் போடப்பட்டன. இது பெரும் சாதனையாக, அப்போது கருதப்பட்டது. 200 நாட்களை கடந்து ஓடி, வசூல் சாதனையும் நிகழ்த்தியது.
படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆவதை அடுத்து, ‘படையப்பா’ ரீ – ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அல்ல. அமெரிக்காவில். அங்குள்ள தியேட்டர்களில் நேற்று (ஜுலை ஒன்றாம் தேதி) மறு வெளியீடு செய்யப்பட்ட இந்தப் படத்துக்கு ரசிகர்கள் கூட்டம், கூட்டமாக, திரண்டு சென்று திரை அரங்குகளை அமளி துமளி செய்து வருகிறார்கள்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, வைரலாகி வருகின்றன. ஃபுளோரிடாவில் உள்ள தியேட்டரில் படம் பார்த்த ரசிகர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘25 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான படையப்பாவுக்கே, இவ்வளவு ஆர்ப்பாட்டம் என்றால், வேட்டையன், கூலி ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகும் போது, என்ன நடக்கப்போகிறதோ?’’ என குறிப்பிட்டுள்ளார்.
– பாப்பாங்குளம் பாரதி.