Take a fresh look at your lifestyle.

“உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்”!

திரைத் தெறிப்புகள் – 60 :

*

தமிழ்த் திரைப்படங்களின் வழியே காதலை மையமாகக் கொண்டு எத்தனையோ படங்கள் வெளிவந்திருக்கின்றன. எவ்வளவோ திரைப்பாடல்கள் வெளிவந்திருக்கின்றன.

அந்த இனிமையான வரிசையில் இடம்பெறத் தகுதி பெற்றதாக அமைந்திருக்கிறது 1965-ஆம் ஆண்டில் வெளிவந்த ‘வல்லவனுக்கு வல்லவன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல்.

காதல் மொழி கொஞ்சும் இந்தப் பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.

“நூறு முறை பிறந்தாலும், நூறுமுறை இறந்தாலும்
உன்னைப் பிரிந்து வெகு தூரம் நான் ஒருநாளும் போவதில்லை.
உலகத்தின் கண்களிலே உருவங்கள் மறைந்தாலும்,
ஒன்றான உள்ளங்கள் ஒரு நாளும் மறைவதில்லை…”

– என்று இந்தப் பாடலின் முன்னோட்டமாக மெல்லிதாக இசைக் கருவிகளின் பின்புலத்தோடு ஒலிக்கும் டி.எம்.எஸ்-ஸின் குரலில் அவ்வளவு அழுத்தமும், உணர்வும் வெளிப்பட்டிருக்கும்.

பிரபலமான பல இந்திப் பாடல்களின் மெட்டுகளுக்கு தமிழில் இசை வடிவம் தந்திருக்கிற வேதா தான் இதிலும் இசையத் தந்திருக்கிறார்.

மென்மையான தென்றலைப் போல, பாடல் இப்படித் துவங்கும்,

“ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்.
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்.

இந்த மானிடக் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறிவிடும்.
அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடிவிடும்.
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்…”

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், பாடல் துவங்கும்போது பாறைகளுக்கிடையில் ஓடும் அருவிகளுக்கிடையே கதாநாயகி, தன் காதலனைத் தேடியபடி நின்றுகொண்டு இருப்பார். பாடல் நிறைவடையும்போது தான் பாறைகளுக்கிடையே இருந்து பாடியபடி முகம் காட்டுவார் அசோகன்.

“இந்தக் காற்றினில் நான் கலந்தே
உன் கண்களைத் தழுவுகின்றேன்.
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்.
உன் ஆடையில் ஆடுகின்றேன்.
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூ முகம் காணுகின்றேன்.”

– என்று நிறைவுபெறும் இந்தப் பாடலில் மிக எளிய வரிகளில், மிக வலுவாகக் காதலைச் சொல்லியிருப்பார் கவிஞர் கண்ணதாசன்.

ஒரு இனிமையான ‘மெலடி’ப் பாடல் காலம் கடந்தும் இப்படியெல்லாம் நினைவு கூர வைப்பதே சிறப்பு தானே!

*

-மணா