Take a fresh look at your lifestyle.

ஓம் – சரியாகக் கடத்தப்பட்டதா கதை?

தனுஷ், சாய் பல்லவி, மம்முட்டி, ஸ்ரீலீலா, நஸ்ருதீன் ஷா, இந்திரன்ஸ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி இருக்கும் படம்.

‘ஓம்’ என்கிற ஆப்பரேஷன் மோல். வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டுடியோஸ் சார்பில் நடிகர் தனுஷ் மற்றும் அஜ்மத் ஜக்மக் தயாரிப்பு.

ஆந்திராவின் செம்மரக்கட்டைக் கடத்தல், உலகம் முழுக்க பெரும் நெட் ஒர்க்கை ஏற்படுத்தி இருக்க, அவர்களை ஒட்டுமொத்தமாக கைது செய்ய, ஒரு தனிப்படையை ஏற்பாடு செய்யும் ஆந்திர போலீஸ், அதன் தலைவராக நித்யா ரெட்டியை (சாய் பல்லவி) நியமிக்கிறது.

அந்த நெட்ஒர்க்கின் ஒரு முக்கிய புள்ளியான – தமிழ்நாடு, சென்னை ரெட் ஹில்ஸில் வாழும் கார்த்திகேயனை (மம்முட்டி) பிடிக்க ஆந்திர போலீஸ் வருகிறது.

கார்த்திகேயனின் ஆளான திருக்குமரன் (தனுஷ்) தலைமையில் ஒரு பெரும் கூட்டம் ஆந்திர போலீசை ஓட விடுகிறது.

எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் கார்த்திகேயனின் உயிரைக் காப்பாற்றி, அவருக்கு அறிமுகமாகி அவரது பர்சனல் போட்டோகிராபராக ஆகி, அவருக்கு முக்கியக் கையாக மாறி, குழந்தை இல்லாத – கார்த்திகேயன் மனைவி அமலாவின் (ரேணு தேசாய்) தாய்ப்பாசத்தை திருக்குமரன் பெற்றிருப்பது சொல்லப்படுகிறது.

உண்மையிலேயே திருக்குமரன் நித்யா ரெட்டி டீமில் ஒரு அண்டர்கவர் ஆபீசர். கார்த்திகேயனை அவன் நெருங்கியது உட்பட எல்லாமே பிளான்.

ஆனால், திருக்குமரனின் பெயர் பழனி. சொந்த ஊர் திருவண்ணாமலை. அங்கே அவனுக்கு மனைவி ரோஜா (ஸ்ரீ லீலா), லாரி டிரைவராக இருந்து ரிட்டையர் ஆன அப்பா (இந்திரன்ஸ்), பள்ளி செல்லும் மகன் எல்லாம் உண்டு. இது கார்த்திகேயனுக்கே தெரியாது.

என்ன வேலை செய்கிறான் என்பதை மனைவிக்கே சொல்லாமல் அடிக்கடி கிளம்பிப் போய் விடும் பழனி மேல் கோபம் கொண்டு, விவாகரத்து செய்யப் போவதாக சொல்கிறாள் ரோஜா.

இந்நிலையில் செம்மரக்க கடத்தலின் இன்டர்நேஷனல் தலைவன் துபாய் வாழ் அப்துல் ஹமீதுவுக்கு (நஸ்ருதீன் ஷா) போய்ச் சேர வேண்டிய பல ஆயிரம் டன் செம்மரக்கட்டை, சூழல் காரணமாக கார்த்திகேயனிடம் தேங்கிக் கிடக்கிறது.

திருக்குமாரனாக நடிக்கும் பழனியை நம்பி அதை கார்த்திகேயன் அவனிடம் சொல்கிறான்.

அப்துல் ஹமீதுக்கு போக வேண்டிய அந்த செம்மரக்கட்டைகள் போனால்தான் ஒட்டுமொத்த ஆட்களும் வெளியே வருவார்கள்; நெட் ஒர்க்கை பிடிக்க முடியும் என்று நித்யா ரெட்டி முடிவு செய்ய,

அந்தக் கட்டைகளை ஆந்திர போலீஸ் உதவியுடன் ஆந்திர அரசே துபாயில் உள்ள அப்துல் ஹமீதுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்கிறது.

ஆனால், நித்யா ரெட்டியின் திட்டத்தை மீறி அந்தக் கட்டைகளைக் கொண்டு போகும் லாரிகளை மறித்து செம்மரத்தை கைப்பற்றும் ஆந்திர போலீஸ், அந்த லாரிகளை ஓட்டிக் கொண்டு வந்த தமிழக டிரைவர்கள் பலரை சுடுகிறது.

பல அப்பாவிகள் சாகிறார்கள். அதில் திருக்குமரன் என்கிற பழனி என்கிற அண்டர் கவர் ஆபீசரின் அப்பாவும் செத்துப் போகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு மரம் வெட்டப் போகும் பலரை ஆந்திர போலீஸ் கும்பலாக கும்பலாக நிற்க வைத்து சுட்ட கதை தெரிகிறது.

வெறுத்துப் போன பழனி வேலையை விட்டுவிட்டு வந்து விடுகிறான்.

நித்யா ரெட்டி வந்து அவனை மனம் மாற்றி வேலையில் சேர வைக்கிறாள், ரோஜாவின் பிரச்சனையும் தீர்கிறது.

போலீசிடம் சிக்கிய மரக்கட்டைகளுக்கான பணம் வர வேண்டும் அல்லது செம்மரம் வர வேண்டும் என்கிறான் அப்துல் ஹமீது. அவரிடம் கட்டை இல்லை.

நல்லவரான கார்த்திகேயனைக் காப்பாற்ற விரும்புகிறான் பழனி.

எனவே, புதிதாக மரம் வெட்டி அதை அப்துல் ஹமீதுக்கு அனுப்பி வைத்து அவனை கைது செய்ய திட்டமிடும் ஆந்திர போலீஸ், மீண்டும் மரம் வெட்ட தமிழ்நாட்டில் இருந்து ஆட்களை பழனி மூலம் கொண்டு வருகிறது.

அவர்கள் மரம் வெட்ட, முன்பு திருவண்ணாமலை கூலித் தொழிலாளிகளை சுட்டுக் கொன்ற அதே ஆந்திர போலீஸ் அதிகாரி, தன் படையோடு மீண்டும் சுட்டுக் கொல்ல, களம் இறங்க,

இன்னொரு பக்கம் கைது செய்யப்பட கார்த்திகேயனை ஜெயிலில் வைத்து போட்டுத் தள்ள, ஒரு பெரும் படையையே அப்துல் ஹமீது ஜெயிலுக்குள் இறக்க,

நடந்தது என்ன? கொலைகள் தடுக்கப்பட்டதா? அப்துல் ஹமீது கைது செய்யப்பட்டாரா? கார்த்திகேயன் காப்பாற்றப்பட்டாரா? என்பதே ஓம் என்கிற ஆப்பரேஷன் மோல்.

இங்கே மோல் (mole) என்பது மண்ணைத் தோண்டிக் கொண்டு செல்லும் ஒரு வகை எலியைக் குறிக்கும் சொல்.

ஆந்திர செம்மரக் கடத்தல் விஷயத்தில் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்கள் விஷயத்தைத் தொட்டு இருக்கிறார்கள் என்பது அடிக்கோடிட்டு சொல்லப்பட வேண்டிய விஷயம்.

கார்த்திகேயனைக் கைது செய்ய வரும் ஆந்திர போலீசை திருக்குமரன் தலைமையிலான பெரிய படை விரட்டி ஓட வைக்கும், அந்த நீண்ட நெடிய – பெருங்கூட்டமும் வாகனங்களின் ஓட்டமும், பெரும் உழைப்பு கோரும் கேமரா நகர்வுகளும் வேகமும் கொண்ட அந்த காட்சி, அட்டகாசமான தொழிநுட்பத் தரம்.

ராஜ்குமார் பெரியசாமியின் மேக்கிங் திறனுக்கும் தயாரிப்பாளர்களின் தயாரிப்புத் தரத்துக்கும் சாட்சி.

“நீ இனி உன்னை அனாதைன்னு சொல்லிக்காத. நான் உன் அப்பாவோட அக்கா மக. நாம கல்யாணம் பண்ணிக்காமலே இருந்திருந்தாலும் உனக்கு உறவுன்னு நான் இருந்திருப்பேன்” என்று ரோஜா சொல்லும் வசனம் – தாய் தந்தை வழி உறவுகளின் மேன்மையைச் சொல்லும் அற்புதமான எழுத்து.

பாராட்டுகள் எழுத்தாளர் ராஜ்குமார் பெரியசாமி.

எழில் அரசுவின் ஒளிப்பதிவு பிரமாதம். பொதுவில் சும்மா எஸ்டாபிளிஷ்மெண்டுக்காக எல்லாம் ஏரியல் ஷாட் வைப்பார்கள்.

ஆனால், இந்தப் படத்தில் வரும் ஏரியல் ஷாட்கள் அர்த்தமுள்ளவை. குறிப்பாக திருவண்ணாமலை கோவில் கோபுரத்தை டாப் ஆங்கிளில் இருந்து லோ ஆங்கிளுக்கு கொண்டு வந்து நிறுத்தும் ஷாட் அற்புதம்.

சாய் அப்யங்கர் இசை பலன் தரவில்லை. திட்டமிட்ட முட்டுக் கொடுத்தல்கள் ரொம்ப நாள் பலன் தராது.

அமலாவாக வரும் ரேணு தேசாய் ராயல் ராயல். கம்பீரமாக இருக்கிறார். இந்திரன்ஸ், ஸ்ரீலீலா சிறப்பு.

தனுஷ், சாய் பல்லவி, மம்முட்டி போன்றவர்கள் மகா நடிகர்கள். படம் எப்படி இருந்தாலும் அவர்கள் நடிப்பு நன்றாக இருக்கும். ஆனால், அதையும் தகர்த்து சாதனை படைத்துள்ளது இந்தப் படம்.

மூவருமே – ரஜினி சொன்ன வழக்கமான – ஸ்டாக் (ஷாட்) எக்ஸ்பிரஷன்கள், டெம்ப்லேட் நடிப்பு என்று படுத்தி எடுக்கிறார்கள். சாய் பல்லவி மீதே கோபம் வருது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

வேறு மாநில பிரமுகரை கைது செய்ய வாரண்ட் கூட இல்லாமல் வரும் கூறுகெட்ட போலீசா ஆந்திர போலீஸ்?

சிரிப்பு போலீஸ் என்று சொல்வார்கள் அல்லவா? அது போல மரக்கட்டைக் கடத்தினாலும் மக்கட்டை தாதாவாக இருக்கிறார் கார்த்திகேயன்.

”திருக்குமரன் மேல சந்தேகமாக இருக்கு. அவனை நம்பாதே” என்று இன்னொரு முக்கியக் கையாள் கார்த்திகேயனிடம் ரெண்டு சீனுக்கு ஒரு தடவை சொல்லிக் கொண்டே இருக்கிறான்.

ஆனாலும் கார்த்திகேயன் சந்தேகப்பட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார். கொடுமை.

இன்னும் மலையாள வாசனை இல்லாமல் மம்முட்டியால் தமிழ் பேச முடியவில்லை. அவருக்கு ஸ்ரீ லீலாவின் தமிழ் எவ்வளவோ மேல். இந்திரன்ஸ் கூட முயன்று நன்றாக பேசி இருக்கிறார்.

ஆனால், மம்முட்டி மட்டும், “என்னை ஏன்டா தமிழ்ல நடிக்க கூப்பிடறீங்க?” என்று செவுலில் தொடர்நது பொளீர் பொளீர் என்று நாலு அப்பு அப்புவது போலவே நடிக்கிறார். கிரேட் மம்முக்கா.

அதுவும் கடைசியில் அவரைக் காப்பாற்ற தனுஷும் சாய் பல்லவியும் சண்டை போடும் காட்சியில்…

புது ஊரில் ஒரு கும்பலுக்குள் நுழைந்து என்ன செய்வது என்று தெரியாமல் பார்ப்பவர் போல, அடிப்பவர்கள் அடி வாங்குபவர்கள் இவர்களை பராக்கு பார்த்துக் கொண்டே நிற்கிறார் மம்முட்டி.

அந்த காட்சியில் அவர் பயப்படுவது போல நடிக்க வேண்டுமா? அல்லது தைரியமா இருக்க வேண்டுமா என்பதை இயக்குநர் சொல்லி இருக்க வேண்டும். அல்லது மம்முட்டியாவது முடிவு செய்திருக்க வேண்டும். இதெல்லாம் நியாயமானோ சாரே?

அந்தக்கால பீம்சிங் படங்களில் சிவாஜியும் ஜெமினியுமோ, சிவாஜியும் பாலாஜியுமோ, சிவாஜியும் எஸ்.எஸ்.ராஜேந்திரனுமோ படம் முழுக்க அடித்துக் கொள்ள,

கடைசியில் சாவித்திரியையோ, சவுகார் ஜானகியையோ, விஜயகுமாரியையோ கொன்றோ, விதவை ஆக்கியோ, அல்லது கை காலை உடைத்துப் போட்டோ, கண்ணனைக் குத்தியோ படத்தை முடித்து வைப்பார்கள்.

அன்றைக்கு அது பெரிய விஷயம். இன்று அது பெரியசாமி மகன் செய்ய வேண்டிய விஷயமா?

இதெல்லாம் கூடப் பரவாயில்லை.

செம்மரக் கடத்தலில் அநியாயமாக கொல்லப்பட்ட தமிழர்கள் பக்கம் நிற்பதாக பேர் பண்ணிக் கொண்டு, இந்தப் படம் அவர்களுக்கு செய்திருக்கும் துரோகம் அயோக்கியத்தனமானது.

ஒரு காட்சியில் மரம் வெட்டும் கூலித் தொழிலாளி ஒருவர் ”நாங்க பண்றது தப்புதான். ஆனா உங்கப்பா நல்லவரு” என்கிறார்.

வேலையின்மை, வறுமை, அடிப்படைப் பொருளாதாரத் தேவை காரணமாகவே அவர்கள் வேலைக்குப் போகிறார்கள்.

செல்வத்தில் கொழிக்க அந்த வேலைக்குப் போகவில்லை. உயிரைப் பணயம் வைத்துப் போகிறார்கள்.

அவர்கள் அந்நியமாக கொல்லப்படுகிறார்கள் என்ற உண்மையை பேசும் படத்தில், “நாங்க பண்றது தப்புதான்…” என்பதன் மூலம் யாரைத் திருப்பதிபடுத்த முயல்கிறார்கள் என்று தெரியவில்லை .

“அது உண்மைதானே? இல்லீகல் என்று தெரிந்ததுதானே போகிறார்கள்?” என்று கேட்கலாம்.

ஆனால் ‘பொய்மையும் வாய்மை இடத்த…” என்பது போல கிடைக்க வேண்டிய நியாயத்துக்கு எதிரான சில விஷயங்களை, சொல்லாமல் விடுவதுதான் பெரிய நியாயம்.

கொன்று புதைக்கப்பட்டவர்கள் செய்த சிறுசிறு தவறுகளைத் தோண்டி எடுத்து, துடைத்து, மேடையில் வைத்து வெளிச்சம் போட்டு ”பாருங்க பாருங்க…” என்பது குற்றவாளிக்குத் துணைபோகும் குறுக்கு புத்தியே.

தவிர, கொல்லப்பட்ட நபர்களின் குழந்தைகள், தங்களிடம் இருக்கும் செம்மரத்தால் செய்த பொம்மைகளை எல்லாம் நெருப்பில் போடுவது போல ஒரு காட்சி.

அதாவது, அந்த செம்மரக் கட்டைகளை சொந்த உபயோகத்துக்காக கடத்தி வந்த தவறையும் அந்த கூலித் தொழிலாளிகள் செய்கிறார்கள் என்று நிறுவுகிறார்கள்.

அதன்மூலம் அவர்கள் சுட்டுக் கொள்ளப்படும் அநியாயத்தின் வீரியத்தை நீர்த்துப் போகச் செய்கிறார்கள் (இப்படி எல்லாம் பண்ணா சுடத்தான் செய்வான். பிள்ளைக்கு பிளாஸ்டிக் பொம்மை வாங்கிக் கொடுக்க வேண்டியதுதானே?” என்ற வாதத்துக்கு ஒரு ரூம் போட்டுத் தரும் வேலை)

இன்னொரு காட்சியில், ஆந்திர போலீசின் கொடுமைகளால் பாதிக்கப்பட்ட ஒருவர் அது பற்றி பேசும் காட்சியில் “அது வரைக்கும் அடிக்கத்தான் செய்வாங்க. அப்பதான் முதன் முதலா சுட்டாங்க” என்று பொத்துனாப்புல குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கி,

பேசுகிறார் துப்பாக்கி சுட்டுக்கொன்ற சம்பவங்கள் ஒரு முறை மட்டும்தான் நிகழ்ந்ததா? இதுக்கு பேசாமல், “அவங்க துப்பாக்கியால் சுட்டபோது எங்களுக்கு அவ்வளவு சுகமா இருந்தது” என்று சொல்ல வச்சிருக்கலாமே?

பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேசுகிறேன் என்று சொல்லி அவர்கள் தரப்பை முனை மழுங்கடிப்பது என்ன நியாயம்?

தவிர, அப்படித் தமிழர்களைச் சுட்டுக் கொள்ளும் ஆந்திர அதிகாரி, ”இது என் மண். நான் மண்ணின் மைந்தன். என் மண்ணுக்கு மத்தவன் மரம் வெட்ட வந்தா அப்படித்தான் சுட்டுக் கொள்வேன்” என்கிறான்.

அதற்கு எதிர் வசனம் எதுவும் எழுதப்படாமல் அவர் பேசுவது குளோரிஃபை செய்யப்பட்டு காட்டப்பட்டுள்ளது.

பழனியிடம் மட்டும் ஆயிரம் வாதம் வைக்கும் யோக்கிய சிகாமணி நித்யா ரெட்டி. அந்த வன்ம போலீஸ் அதிகாரி பேசும்போது மட்டும் ஜஸ்ட் லைக் தட் காதில் வாங்கி கொண்டு கடந்து போகிறார்.

ஓம் தமிழ் ரசிகர்களுக்கான படமா?, ஆந்திராக்காரர்களைக் கொம்பு சீவி விடும் படமா?

ஜவ்வாது மலை மக்களை மலையாளி எனச் சொல்லும் ஒரு கேரக்டர் “மலையாளிகள் என்றால் கேரளாக்காரர்கள் இல்லை மலையில் வசிப்பதால் மலையாளிகள்” என்று விளக்கம் கொடுத்து விடுகிறார்.

ஆனாலும் அதற்கு பிறகு மூச்சுக்கு முன்னூறு தடவை மம்முட்டி, “நம்மோட மலையாளிகள காப்பாத்தனும்… நம்மோட மலையாளிகள காப்பாத்தனும்…” என்று படம் முழுக்க பாட்டாப் படிக்கிறார்.

கடத்தல் குற்றவாளிகள் யார் யாருன்னு சொல்லுங்க என்று நித்யா ரெட்டி கேட்கும்போது, “யாரைப்பத்தி சொல்றது? எங்க ஊரு (தமிழ்நாட்டு) ஆளுங்கட்சியைப் பத்தியா உங்க ஊரு (ஆந்திரம்) எதிர்க்கட்சி பற்றியா?” என்று கேட்கிறார் கார்த்திகேயன்.

அப்போ, தமிழ்நாடு ஆளுங்கட்சிகளைவிட ஆந்திர ஆளுங்கட்சிகள் வருத்தப்படக்கூடாது என்பதில்தான் படக்குழு குறியாக இருந்துள்ளது.

இத்தனைக்கும் பிறகு படத்தில் தமிழகப் பிரமுகர்களைக் காப்பாற்ற ஆந்திர அதிகாரிகள்தான் உயிர்த் தியாகம் செய்கிறார்கள். அப்படியே புல்லரிச்சுப் போச்சு.

திருவண்ணாமலையை ஆந்திரத் தெலுங்கர்கள் குறி வைக்கிறார்கள்; ஆக்கிரமிக்கிறார்கள் என்ற ஒரு பிரச்சனை போய்க் கொண்டு இருக்கும் சூழலில் ஸ்ரீலீலாவைக் கொண்டு வந்து திருவண்ணாமலைக்காரன் பொண்டாட்டியாக நடிக்க வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் இத்தனை தெலுங்கு, மலையாள நடிகர்கள் எதற்கு?

படம் நேரடித் தமிழ்ப் படம்தான். தெலுங்கில் டப்பிங் தான் செய்து உள்ளோம் என்கிறார்கள். ஆனால், படத்தில் மிகப் பல முக்கியக் காட்சிகளில் எல்லோரும் தெலுங்கில்தான் பேசுகிறார்கள். தமிழ் சப் டைட்டில் போடுகிறார்கள். தமிழ் படிக்கத் தெரியாதவர்களுக்கு இந்தப் படம் எப்படி புரியும்?

அதிலும் சில வசனங்களுக்கு அந்த சப் டைட்டில் கூட சரியாக இல்லை.

உண்மையில் இந்தப் படத்தைச் தெலுங்கில் எடுத்து தமிழில் டப் செய்து இருந்தால் படக் குழுவுக்கு வேலை மிச்சமாகி இருக்கும்.

ஒரு மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ பாதிக்கப்பட்ட ஒரு பிரச்சனையை எடுத்து இப்படி மழுங்கடித்து அவர்கள் மொழியில் போய் தமிழ் நடிக நடிகையரை நடிக்க வைத்து இப்படி எடுத்து ரிலீஸ் செய்வதைப் பற்றி யோசிக்கவாவது முடியுமா?

”இல்லை இல்லை… நடந்ததை அப்படியே உள்ளது உள்ளபடி சொன்னால் சென்சார் விடாது; பிரச்சனை வரும் மாநில உறவுகள் பாதிக்கும். எனவே, பொதுநலன் கருதி…” என்றெல்லாம் யாராவது சொன்னால் அதை ஏற்க முடியாது.

அப்போ எடுக்காதீங்க. ஒரு குமரனோ அல்லது சட்னி கடையோ எடுத்து இருக்கலாமே.

சமயம் வரும்போது யாராவது எடுக்கட்டும். இல்லை, எடுக்காமலே போனாலும் தவறான கற்பிதம் செய்வதற்கு அது எவ்வளவோ மேல்.

படமாவது சுவாரஸ்யமாக போகிறதா என்றால் அதுவும் இல்லை. சுமார் மூன்று மணி நேரம் வதவத என்று – உணர்வாக இல்லாமல் – பெரும்பாலும் ஸ்டேட்மெண்டுகள் போலவே போகும் காட்சிகள் பெரும் சோதனை.

மொத்தத்தில் ஓம் (Operation Mole)… ஓபி (Operation Pus).

– சு.செந்தில்குமரன்