அறிமுக இயக்குநர் ஸ்ரீவெற்றி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘நாற்கரப் போர்’. இந்தப் படம் சதுரங்க விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதில் அபர்ணதி, அஸ்வின், லிங்கேஸ், சுரேஷ் மேனன் உட்பட பலர் நடித்துள்ளனர்.
V6 பிலிம் சார்பில் எஸ். வேலாயுதம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு இயக்குநர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
தினேஷ் ஆண்டனி இசையமைத்துள்ளார். சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்பில் வெளியிடுகிறார்.
அண்மையில் நடைபெற்ற இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மீரா கதிரவன், சுப்பிரமணிய சிவா, லெனின் பாரதி, கவிதா பாரதி உட்பட பலர் கலந்துகொண்டனர். ஆனால் படத்தின் கதாநாயகி அபர்ணதி பங்கேற்கவில்லை.
நிகழ்ச்சியில் இதைப் பற்றிப் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, அபர்ணதி பங்கேற்காததற்கான காரணத்தைக் கூறினார்.

“சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம். நாம் நமது வேலையை சிறப்பாக செய்திருக்கிறோமா என்றுதான் பார்க்க வேண்டும். அபர்ணதி சிறந்த நடிகை. நடிகைகள் பட புரமோஷனுக்கு வர மாட்டார்கள் என்பது தமிழ் சினிமாவில் சாபக் கேடாகவே மாறிவிட்டது.
அபர்ணதியை விழாவுக்கு அழைத்த போது பணம் கேட்டுள்ளார். இது உண்மையிலேயே புதிதாக இருக்கிறது.
நிகழ்ச்சிக்கு ரூ.3 லட்சம் கொடுத்தால் மட்டுமே வர முடியும் என்று சொன்னதுடன் மேடையில் அவர் அருகில் யார் யார் உட்கார வேண்டும் என்பது போன்று அவர் போட்ட நிபந்தனைகளைச் சொன்னால் இன்னும் சர்ச்சையாக மாறிவிடும்.
இப்படி தயாரிப்பாளர்களை காயப்படுத்தி விட்டு அவர்கள் சினிமாவுக்கு வந்து என்ன நல்லது செய்யப் போகிறார்கள்?” என்றார். அவரது பேச்சு விழாவில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் இந்தக் குற்றச்சாட்டை நடிகை அபர்ணதி மறுத்துள்ளார். அதோடு, பட புரமோஷன் பணிகளுக்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.