சில்லுக்கருப்பட்டி, ஏலே ஆகிய திரைப்படங்களை இயக்கிய ஹலிதா ஷமீம் தற்போது இயக்கி வரும் படம் ‘மின்மினி’. இந்தப் படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் மகளும் பின்னணிப் பாடகியுமான கதீஜா ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
2015-ஆம் ஆண்டு தொடங்கிய ‘மின்மினி’ திரைப்படம் 7 ஆண்டுகளாகத் தயாரிப்பில் உள்ளது.
இந்தக் கால தாமதத்திற்கு, இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள், வளரும் வரை 7 வருடங்கள் காத்திருந்துள்ளது படக்குழு. திரையுலகில் இதுவரை யாரும் செய்திராத புதுமுயற்சியாகும் இது.
இப்படத்தில் எஸ்தர் அனில், கௌரவ் காளை மற்றும் பிரவின் கிஷோர் ஆகியோர் முன்னணிக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
படத்தை உலகளவில் டெண்ட் கொட்டா மற்றும் சிம்பா நிறுவனம் ஆகியவை வெளியிடவுள்ளது. மின்மினி திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளது.
சில மாதங்களுக்கு முன் படத்தின் சிறப்புத் திரையிடல் நடைப்பெற்று நல்ல விமர்சனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.
படத்தின் ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தை முரளி கிருஷ்ணனுடன் இணைந்து ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்துள்ளார்.
இதனிடையே, ‘மின்மினி’ பட ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில், படத்தின் இயக்குநர் ஹலிதா ஷமீம், தயாரிப்பாளர் மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளர் கதீஜா ரஹ்மான், கதாநாயகி எஸ்தர், மகாராஜா இயக்குநர் நித்திலன் சாமிநாதன், கதாநாயகன் கௌரவ் காளை, பாடகி ஸ்ரீஷா ஆகியோர் பங்கேற்றனர்.