‘துணிவு’ படத்தைத் தொடர்ந்து ‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்து வரும் புதிய படம் ‘விடாமுயற்சி’. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தை மகிழ் திருமேனி டைரக்டு செய்கிறார்.
இது அஜித்தின் 62-வது படம். இதன் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அஜித், திரிஷா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இந்தப் படத்தின், கலை இயக்குநராக மிலன் பணியாற்றிவந்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) படப்பிடிப்புக்கான வேலைகள் நடைபெற்றுகொண்டிருந்தன.
மிலன், தனது உதவியாளர்களை முடுக்கிவிட்டு வேலை வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது மிலனுக்கு வியர்த்துக் கொட்டியது. ‘அசவுகரியமாக உள்ளது’ என உதவியாளர்களிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து அவர் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால், வழியிலேயே மிலனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 54.
படக்குழுவினருக்கு இந்தத் தகவல் கிடைத்ததும் ஷுட்டிங் உடனடியாக நிறுத்தப்பட்டது. அதிர்ச்சியில் உறைந்து போன அஜித், இயக்குநர் மகிழ் திருமேனி, ஒளிப்பதிவாளர் நிரவ்ஷா ஆகியோர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர்.
உயிரற்ற மிலன் உடலைப் பார்த்து கண் கலங்கினர். சாபு சிரிலிடம் உதவியாளராக பணியாற்றிய மிலன், 2006 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான ‘கலாபக் காதலன்’ படம் மூலம் கலை இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
ரஜினிகாந்த், அஜித், விஜய் ஆகிய உச்ச நட்சத்திரங்களின் படங்களில் பனியாற்றியுள்ளார். பில்லா, வேலாயுதம், வீரம், வேதாளம், விவேகம், வேட்டைக்காரன், அண்ணாத்த, பத்து தல உள்ளிட்ட படங்கள், மிலன் கலை இயக்கத்தில் மெருகேற்றப்பட்டவை.
சூர்யாவின் ‘கங்குவா’ படத்திலும் அவர் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. மிலன் உடலை சென்னை கொண்டு வர அஜர்பைஜானில் உள்ள இந்தியத் தூதுரக அதிகாரிகளை லைகா பட நிறுவனம் தொடர்பு கொண்டு பேசி வருகிறது.
அவரது உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் நடைபெறும். மிலனுக்கு மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.
வெளிநாட்டுக்கு ஷுட்டிங் சென்ற இடத்தில் கலை இயக்குநர் மிலன் உயிரிழந்தது கோடம்பாக்கத்தைக் கலங்கச் செய்துள்ளது.
– பாப்பாங்குளம் பாரதி.
