Take a fresh look at your lifestyle.

மாயக்கூத்து – எளிமையாக இருந்திருக்கலாமோ?!

சிறிய அளவில் தயாரிக்கப்படுகிற சில திரைப்படங்கள் சீரிய முறையிலும் உருவாக்கப்பட்டதாக இருக்கும். அதற்கு, அப்படத்தோடு தொடர்புடைய ஒவ்வொரு கலைஞரது பங்கேற்பும் காதலுணர்வு நிறைந்ததாக இருக்க வேண்டும்.

அப்படியொரு படமாக இருக்குமா என்ற நம்பிக்கையை விதைத்தது ‘மாயக்கூத்து’ குறித்த தகவல்கள். சரி, அப்படம் தரும் திரையனுபவம் அந்த நம்பிக்கையை மெய்ப்பிக்கிறதா?

‘மாயக்கூத்து’ கதை!

வாசன் (நாகராஜன் கண்ணன்) என்கிற ஒரு எழுத்தாளர், விடாப்படியாகத் தனது பாணியிலேயே கதை எழுதுவது என்றிருக்கிறார். ‘சீரியல் எழுதலாமே’, ‘அதைச் செய்யலாமே இதைச் செய்யலாமே’ என்று சிலர் சொல்ல, அவற்றைப் புறந்தள்ளுகிறார்.

தனது கதைகளை விமர்சிப்பவர்களிடம், ‘இந்த கதாபாத்திரத்தை இப்படி முடித்துவிட்டீர்களே’ என்று வருத்தப்படுபவர்களிடம், ‘என் உலகத்திற்கு நானே கடவுள்’ என்று இறுமாப்பாகப் பேசுகிறார்.

வாசன் ஒரேநேரத்தில் மூன்று தொடர்கதைகளை வெவ்வேறு இதழ்களில் எழுதி வருகிறார். அதில் வருகிற பாத்திரங்கள் திடீரென்று அவரை நேரில் சந்திக்கின்றன. தங்களைப் படைத்தவிதம் சரியா என்று நியாயம் கேட்கின்றன.

அதனை வாசன் ஏற்றுக்கொண்டாரா, அவற்றின் நியாயங்களுக்குச் செவி சாய்த்து தனது படைப்புகளின் தன்மையை மாற்றிக் கொண்டாரா என்று சொல்கிறது ‘மாயக்கூத்து’ படத்தின் மீதி.

ஒரு எழுத்தாளரோடு அவர் படைத்த பாத்திரங்கள் உரையாடுகிற கருத்தாக்கம் புதிதல்ல என்றாலும், அவற்றின் வழியே இயக்குனர் நிறுவ முயல்கிற கருத்தாக்கம் சிறப்பானதாக உள்ளது. அதுவே ‘மாயக்கூத்து’ படத்தின் யுஎஸ்பி.

நாடக பாணி வசனங்கள்!

இப்படத்தில் நாகராஜன் கண்ணன் முதன்மைப் பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார். தொண்ணூறுகளில் வந்த பக்திப் படங்களில் நடிப்பவர் போல அவரது இருப்பு தெரிந்தாலும், திரைக்கதை நகர நகர அந்த எண்ணம் மெல்ல மாறுகிறது.

அவருடன் சமூகத்தில் சமகாலத்தில் வாழ்பவர்களாகச் சிலரும், அவர் உருவாக்கிய உலகில் உலவுகிற கதாபாத்திரங்களாகச் சிலரும் திரையில் வந்து போகின்றனர்.

மு.ராமசாமி, சாய் தீனா, கோபால், சரண்யா சிவசங்கர், ஐஸ்வர்யா ரகுபதி, பிரகதீஷ்வரன், மிருதுளா, தினேஷ் செல்லையா, ரேகா குமணன், எஸ்.கே.காயத்ரி என்று பலர் இதில் நடித்திருக்கின்றனர்.

இவர்கள் அனைவருமே ஒரு குறும்படத்தில் இடம்பிடித்த உணர்வையே திரையில் தருகின்றனர். மிகச்சிலர் ‘மிக யதார்த்தமாக’த் திரையில் வந்து போயிருக்கின்றனர். அவர்களது இருப்பு கதையோடு நம்மை ஒன்ற வைத்துவிடுகிறது.

இப்படத்தின் கதை, திரைக்கதையை இயக்குனர் ஏ.ஆர்.ராகவேந்திரா உடன் இணைந்து எம்.சீனிவாசன் எழுதியிருக்கிறார். நாயகன் தான் படைக்கிற கதாபாத்திரங்களை நேரில் சந்திப்பதாக வருமிடம், ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிற வைக்கிறது. அதேபோன்று அடுத்தடுத்த திருப்பங்களையும் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கலாம்.

முழுக்க வசனங்களின் வழியே நகர்கிற திரைக்கதை என்றபோதும், பூடகமாக வேறொரு உலகை உருவாக்க அவை உதவுகின்றன.

நாயக பாத்திரம் உலகை, சக மனிதர்களை நோக்கும் விதத்தை விமர்சிக்கிற வகையில் உள்ளது வசனங்கள். குறிப்பாக சாதி, மதம் சார்ந்த அவரது முன்னனுமானங்கள் எந்தளவுக்கு அவரது படைப்பில் பிரதிபலிக்கின்றன? அதனால் சமூகத்தில் ஏற்படுகிற தீமைகள் எத்தகையவை என்று சொல்கிறது. அதனை இன்னும் வெளிப்படையாக, தீவிரமாகச் சொல்லியிருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

இப்படியொரு படத்தின் வசனங்கள் எளிமையாக இருத்தல் அவசியம். ஆனால், ஒரு ‘சீரியசான’ மேடை நாடகத்தைப் பார்த்த ‘எபெக்ட்’ தருகிறது வசனம். நாயகனாக நடித்த நாகராஜன் கண்ணன் அதனைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.

’மாயக்கூத்து’ பட்ஜெட் 25 லட்சம் என்று சொல்லியிருக்கிறது படக்குழு. ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன் மற்றும் கலை இயக்குனர் கே.பி.நந்து இருவரும் அது குறித்த சிந்தனை மேலெழவிடாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

நாகூரான் ராமச்சந்திரன் கதையோட்டம் சீராக நகரும் வகையில் காட்சிகளை அடுக்கியிருக்கிறார்.

பெரும்பாலான காட்சிகளை ஒரு சரமாகக் கோர்க்க உதவியிருக்கிறது அஞ்சனா ராஜகோபாலனின் பின்னணி இசை.

ஒலி வடிவமைப்பாளர் துரை சீனு, அனிமேஷன் வடிவமைப்பாளர்கள், டிஐ கலைஞர்கள் என்று பலரும் இப்படம் தியேட்டரில் ‘ப்ரெஷ்’ஷான அனுபவம் கிடைக்க வழிவகை செய்திருக்கின்றனர்.

தீவிர சினிமா கலைஞர்கள் ஒரு படத்தைப் பார்த்து, அதிலிருக்கிற நுட்பமான விஷயங்களை அலசி ஆராய்வார்கள். அவர்களுக்கு ஏற்றாற்போல அமைந்திருக்கிறது ‘மாயக்கூத்து’.

கொஞ்சம் முயன்றிருந்தால், இதே கதையை இன்னும் எளிமையாகச் சொல்லியிருக்க முடியும். அது நிகழ்ந்திருந்தால், இப்படத்தின் வீச்சு வேறுவிதமாக இருந்திருக்கும்.

இன்றைய தலைமுறை சொல்கிறவாறு ‘வேற லெவலாக’ அது அமைந்திருக்கும். அது நிகழாமல் போனாலும், குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு வித்தியாசமான திரையனுபவத்தைத் தருகிற படம் என்கிற சிறப்பைப் பெறுகிறது ‘மாயக்கூத்து’..

– உதயசங்கரன் பாடகலிங்கம்