Take a fresh look at your lifestyle.

மேத்யூ தாமஸ் நடிக்கும் ‘3டி’ படம் ’லவ்லி’!

மலையாளத் திரையுலகில் தற்போது ‘வெற்றி நாயகனாக’ விளங்கும் மிகச் சில நாயகர்களில் ஒருவர் மேத்யூ தாமஸ். ‘கும்பளாங்கி’ நைட்ஸ் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடித்த இவர், ‘தண்ணீர் மாதன் தினங்கள்’ படத்தில் பள்ளி மாணவனாகத் தோன்றினார்.

அப்படத்தில் அவரே நாயகன். துள்ளுவதோ இளமையின் ‘சாஃப்ட் காப்பி’ போலிருந்த அந்தப் படம், அவருக்கு மட்டுமல்லாமல் நாயகி அனஸ்வரா ராஜனுக்கும் பெரிய மைலேஜ் தந்தது. 

தொடர்ந்து பிற நாயகர்களின் படங்களில் சிறு வேடங்களில் அல்லது முக்கியத்துவம் வாய்ந்த இளமையான பாத்திரங்களில் தோன்றிய மேத்யூ தாமஸ், இடையிடையே ‘கிறிஸ்டி’, ‘நெய்மார்’,‘ஜோ அண்ட் ஜோ’ போன்ற படங்களில் முக்கிய வேடம் ஏற்றிருந்தார். 

தமிழில் ‘லியோ’ படத்தில் அறிமுகமானவர், தற்போது வெளியான ‘நிலவுக்கு என்னடி என்மேல் கோபம்’ படத்தில் பவிஷ் உடன் இன்னொரு நாயகனாகத் தோன்றியிருந்தார். அந்தப் படத்தில் அவரது நகைச்சுவையே யுஎஸ்பி ஆகவும் இருந்தது. 

தான் நடித்த தமிழ், மலையாளப் படங்கள் மூலமாக ஓரளவுக்கு ரசிகர்கள் கூட்டத்தைப் பெற்றிருக்கும் மேத்யூ தாமஸ், தற்போது பரந்துபட்ட வரவேற்பைப் பெறும் நோக்கோடு ‘லவ்லி’ எனும் படத்தில் நடித்திருக்கிறார்.

மலையாளத்தில் தயாரானாலும், இப்படம் ‘பான் இந்தியா’ அந்தஸ்தைப் பெறும் வகையில் தமிழ், தெலுங்கு, இந்தியிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியிடப்பட இருக்கிறது. 

மேத்யூ தாமஸ் பெரிய நட்சத்திரம் இல்லை. அப்படியிருக்க, அவர் நடித்த ஒரு மலையாளப் படத்தை ஏன் பிற மொழிகளில் வெளியிட வேண்டும்?

அந்த அளவுக்கு அதில் என்ன விஷயம் இருக்கிறது? 

இதற்கான பதிலை, ‘லவ்லி’ பட டீசர் நமக்குத் தந்திருக்கிறது.

இதில் மேத்யூ தாமஸோடு ஒரு ‘ஈ’ வருவது போன்றும் உரையாடுவது போன்றும் காட்சிகளைத் தருகிறது இந்த டீசர். இது ஒரு பெண் ஈ என்பதால், படத்தில் அவருக்கு ஜோடியே அந்த ஈ தான் என்றும் கூறப்படுகிறது. 

‘நான் ஈ’ எபெக்ட்!

எஸ்.எஸ். ராஜமௌலியின் ‘ஈகா’ படமானது தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரில் ‘டப்’ செய்யப்பட்டு வெளியானது. நானி, சமந்தா நடித்த அந்தப் படத்தில் வில்லனாக சுதீப் தோன்றியிருந்தார்.

நானியை சுதீப் கொல்ல, ஒரு ஈயாக மறுஜென்மம் எடுத்து வரும் நானி அவரைக் கொல்ல முயற்சிப்பதாகவும், அந்த உண்மையை சமந்தா உணர்ந்து அதற்கு உதவுவதாகவும் அந்தக் கதை நகரும். 

கிட்டத்தட்ட ‘நான் ஈ’ டைப்பில் ‘விஎஃப்எக்ஸ்’ காட்சிகளைக் கொண்டிருக்கிறது ‘லவ்லி’. அதில் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் என்றால், இதில் ஈயை வைத்துக்கொண்டு சில சாகசங்கள், காதல் காட்சிகள் என்று இப்படம் இருக்குமென்று கட்டியம் கூறுகிறது ட்ரெய்லர். 

‘லவ்லி’ படத்தை திலேஷ் கருணாகரன் எழுதி இயக்கியிருக்கிறார். ஆஷிக் அபு இதற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார். 

விஷ்ணு விஜய் மற்றும் பிஜுபால் இதற்கு இசையமைத்திருக்கின்றனர். தயாரிப்பு வடிவமைப்பை ஜோதிஷ் சங்கரும், கிராபிக்ஸ் காட்சி வடிவமைப்பை அனீஷ் குட்டியும் கையாண்டிருக்கின்றனர். 

ஒருவேளை முழுக்க ‘நான் ஈ’ எபெக்டை ‘லவ்லி’ கொண்டிருந்தால், நாயகி இதில் ஈ ஆக வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியான திரைக்கதை அமைந்தால், எதற்காக அவர் ஈ ஆனார் என்பதும் சொல்லப்படலாம். 

அப்படியான கதை இதில் இல்லை என்றாலும் கவலை இல்லை. மேத்யூ தாமஸோடு ஒரு ஈ ஒன்றாக பயணிக்கிறது எனும் கதையே நிச்சயம் சுவாரஸ்யமூட்டுவதாகத்தான் அமையும். 

அந்த வகையில் ஒரு புதுமாதிரியான ‘பயணம்’ லவ்லியில் இருக்குமென்று நம்பலாம். அது மட்டுமல்லாமல் இந்தப் படம் 3டியில் வேறு திரையிடப்படும் என்பதால் குழந்தைகளோடு கண்டுகளிக்கும் விதமாகவும் இருக்குமென்று எதிர்பார்க்கலாம்.

விதவிதமான கதைகள், கதாபாத்திரங்களோடு, இப்போது தொழில்நுட்பரீதியிலும் ஒரு படி முன்னே நிற்கத் தொடங்கியிருக்கிறது மலையாளத் திரையுலகம்.

தமிழ், தெலுங்கு திரையுலகம் இதனை உணர்ந்து சுதாரித்துக் கொள்வது அவசியம். அதற்கான எச்சரிக்கை மணியை ஒலிக்க விட்டிருக்கிறது ‘லவ்லி’!

– மாபா