Take a fresh look at your lifestyle.

நம்பாத முடியாத விஷயத்தை கண்டு அஞ்ச வைக்கும் ‘மர்மர்’!

தமிழ்த் திரையுலகில் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம் என்ற வகையில் மர்மர் சாதனை படைக்க இருக்கிறது. இந்தப் படத்தை ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கியுள்ளார்.

புதுமையான படங்களை விரும்பும் சினிமா ரசிகர்களுக்கு மர்மர் சிறப்பான திரை அனுபவத்தை வழங்கும் எனலாம். கதாபாத்திரங்கள் வழியே ஆழமான மற்றும் மர்மங்கள் நிறைந்த கதையம்சம் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

உண்மைக்கும், கற்பனைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அழிக்கும் வகையில், பிரத்யேக ஸ்டைல் மற்றும் நுணுக்கங்களை கொண்டு இந்தப் படம் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்கும். இந்தப் படம் வருகிற மார்ச் 7 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் மர்மர் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அதில், திரைப்படத்தின் இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், ஒளிப்பதிவாளர் ஜேசன் வில்லியம்ஸ், ஒலி வடிவமைப்பாளர் கெவின் ஃபிரடெரிக், படத்தொகுப்பாளர் ரோஹித் மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

படம் பற்றிப் பேசிய இயக்குநர் ஹேம்நாத் நாராயணன், “மர்மர் தமிழ் திரையுலகின் முதல் ஃபவுண்ட் ஃபூட்டேஜ் ஹாரர் திரைப்படம்.  

உதாரணத்திற்கு ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறினால், அதுபற்றிய விசாரணைக்கு முதலில் அங்கிருக்கும் சி.சி.டி.வி. வீடியோக்களை தான் முதலில் ஆய்வு செய்வார்கள். அந்த சிசிடிவி வீடியோவில் இருக்கும் காட்சிகள் அவர்கள் தரப்பு ஆவணமாக இருக்கும்.

அதைப் படமாக காண்பிக்கும்போது, அந்த ஆவணத்தை தான் நாங்கள் படமாக காண்பிக்கிறோம்.

அமானுஷ்ய விஷயங்கள் சார்ந்த தகவல்களை பதிவிடும் ஏழு யூடியூபர்கள் ஜவ்வாது மலையில் இருக்கும் ஏழு கன்னிசாமிகள் மற்றும் மங்கை எனும் சூனியக்கார ஆவி சுற்றித் திரிவதை நேரடியாக பதிவு செய்ய செல்கிறார்கள்.

அவர்களுக்கு என்ன ஆனது, அவர்கள் செல்லும் வழியில் காணால் போகின்றனர். அவர்களை கண்டுபிடிக்க செல்லும் காவல்துறையினர் உடைந்து கிடக்கும் கேமராக்களை பறிமுதல் செய்கின்றனர்.

அவ்வாறு கேமராக்களில் உள்ள காட்சிகளை ஆவணப்படமாக வெளியிடுகிறார்கள். அதைத் தான் இந்தப் படத்தின் கதையாக வைத்திருக்கிறோம்.

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை அதிகம் சிரமப்படுத்தியிருக்கிறேன். முதலில் ஒளிப்பதிவாளரிடம் இருந்து ஆரம்பிக்கிறேன். 12 நிமிடங்கள் ஒரே ஷாட் காட்சி. அதை படமாக்கும் போது பயிற்சி செய்தோம்.

எல்லா படங்களிலும் காட்சியை படமாக்கும் முன் நடிகர்கள் பயிற்சி எடுப்பார்கள். ஆனால், இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளரும் பயிற்சி எடுத்துக் கொண்டார். டிரெய்லரில் நடிகர்கள் கேமராவை அவர்களாகவே பிடித்து இயக்கியபடி பார்த்திருப்பீர்கள்.

உண்மையில், அவற்றை படம்பிடித்தது ஒளிப்பதிவாளர் தான். அவர்களின் கை அசைவுகளுக்கு ஏற்ப ஒளிப்பதிவாளர் கேமராவை இயக்க வேண்டும்.

இந்த ஒரே ஷாட் காட்சி எடுப்பதற்காக ஒருநாள் இரவு முழுக்க படப்பிடிப்பு நடத்தினோம். அதற்கு ஒளிப்பதிவாளர் குழுவை சேர்ந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

எனக்கு தனிப்பட்ட முறையில் பேய் நம்பிக்கை இல்லை. நான் நம்பாத ஒரு விஷயத்தை அனைவரும் கண்டு அஞ்சும் அளவுக்கு இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்.

எனக்கு பேய் மீது நம்பிக்கையில்லை. இந்தப் படத்தின் மீது நம்பிக்கை உள்ளது. என் மீது நம்பிக்கை உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் இந்தப் படத்தை எடுத்திருக்கிறேன்” என்று கூறினார்.