Take a fresh look at your lifestyle.

மரணமாஸ் – ’கொலவெறி’யுடன் ஒரு ‘காமெடி’ கதை!

ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாத வகைமைகளை ஒன்றாகக் கலக்கும்போது, திரையில் எப்படிப்பட்ட ‘ரிசல்ட்’ கிடைக்கும் என்பது திரையுலகினருக்கே தெரியாத ஒரு கேள்வி.

பழச்சாறு கடையில் இரண்டுக்கும் மேற்பட்ட சாறுகளையும் இத்யாதிகளையும் கலந்து புதிய சுவையொன்றை நமக்குத் தருவார்களே.. கிட்டத்தட்ட அப்படியொரு ‘மிக்ஸிங்’கை தரும் முயற்சியில் திரையுலகினரும் சிலகாலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதனால், ரசிகர்களுக்குச் சில நேரங்களில் விருந்துகளும், சம்பந்தப்பட்ட படக்குழுவினருக்கு விருதுகளும் கிடைக்கின்றன.

அப்படியொரு ‘மிக்ஸிங்’கை கொண்டிருக்கிறது மலையாளத் திரைப்படமான ‘மரணமாஸ்’.

சிஜு சன்னி கதையாக்கத்தில் சிவபிரசாத் இயக்கத்தில் வெளியாகியிருக்கிற இப்படத்தில் பசில் ஜோசப், அனிஷ்மா அனில்குமார், ராஜேஷ் மாதவன், பாபு ஆண்டனி, சுரேஷ் கிருஷ்ணா, பூஜா மோகன்ராஜ், புலியானம் பௌலோஸ் உடன் சிஜு சன்னி உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.

பேருந்தொன்றில் ஒரு சைக்கோ கொலைகாரர் ஒருவர் ஏறும்போது என்னவாகும் என்ற கேள்வியை எழுப்புவதாக அமைந்தது ‘மரணமாஸ்’ பட ட்ரெய்லர்.

விஷு வெளியீடாக தியேட்டர்களை வந்தடைந்திருக்கிற இப்படம், அதற்கேற்ற பதிலைத் திரையில் நமக்குத் தருகிறதா?

 ‘மரணமாஸ்’ கதை!

டைட்டிலுக்கு ஏற்றாற் போல, ஒரு மரணத்தை ‘மாஸ்’ ஆக்‌ஷன் த்ரில்லர் பின்னணியில் சொல்ல வருகிற கதையே இதில் இருக்கிறது.

ஆனால், அது ‘காமெடியாக’ தெரியும் வகையில் ‘திரைக்கதை ட்ரீட்மெண்ட்’டை கையாண்டிருக்கிறது ’மரணமாஸ்’.

ஒரு இன்சூரன்ஸ் ஏஜெண்ட் கொலை வழக்கில் சந்தேகத்திற்கு உரியவர்களாகக் கருதப்பட்டவர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுகின்றனர். அந்தக் குற்றம் நிகழ்ந்து சில ஆண்டு காலம் கழித்து இந்தக் கொலைகள் நடக்கின்றன.

கொலையான மூவரது சடலங்களும் கொடூரமாகத் தாக்கப்பட்டு, வாயில் பூவன் வகை வாழைப்பழம் திணிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்படுகின்றன.

அந்தக் கொலைகளைச் செய்தவர் பெயர் ஸ்ரீகுமார் (ராஜேஷ் மாதவன்). அவர் அரசுத் துறையொன்றில் ஊழியராக இருக்கிறார்.

அவரது இலக்குக்கு ஆளாகிற கடைசி நபர் கேசவ குரூப் (புலியானம் பௌலோஸ்) எனும் ஒரு முதியவர்.

வயதானவர் என்றாலும் பெண்களைக் கண்டால் சபலப்பட்டு எல்லைமீறுகிற குணம் அவரிடத்தில் உண்டு. அதனாலேயே, அவரை ஒரு முதியோர் இல்லத்தில் சேர்க்கிறார் அவரது ஒரே மகன்.

வள்ளிக்குன்னு பகுதியில் தன்னை ‘ரெபல்’ ஆக கருதிக்கொள்கிற இளைய தலைமுறையினரின் பிரதிநிதியாகத் திரிபவர் லூக் (பசில் ஜோசப்).

அவரது தொல்லை தாங்காமல் கிராமத்தினரே காசு வசூல் செய்து, அவரை செக்கோஸ்லோவோக்கியா அனுப்ப ஏற்பாடு செய்கின்றனர்.

அது, அவரது காதலி ஜெஸ்ஸியை (அனிஷ்மா அனில்குமார்) காயப்படுத்துகிறது. ‘நாம் இருவரும் பிரேக் அப் செய்துவிடுவொம்’ என்று லூக்கிடம் சொல்லிவிட்டு அவர் ‘டாடா’ காட்டுகிறார். அதனை ஏற்க முடியாமல் தவிக்கிறார் லூக். ஜெஸ்ஸியின் பின்னாலேயே சுற்றுகிறார்.

இவர்களைத் தவிர்த்து முதிர்கன்னனாகத் திரிகிற ஜிதின்குமார் (சுரேஷ் கிருஷ்ணா) எனும் ஒரு தனியார் பேருந்து ஓட்டுநரும், சிறுவயதில் ராமேஸ்வரத்தில் தனது தந்தையைத் தொலைத்துவிட்டுப் பல ஆண்டுகளாகத் தேடி வருகிற அருவி (சிஜு சன்னி) எனும் நடத்துனரும் இக்கதையில் உண்டு.

குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழலில் இவர்கள் அனைவரும் ஒன்றிணைய நேர்கிறது. அப்போது, கேசவன் பிணமாகக் கிடக்கிறார். அவரைக் கொலை செய்த குற்றவுணர்வில் புழுங்கித் தவிக்கிறார் ஜெஸ்ஸி.

‘போலீஸ் ஸ்டேஷன் போகலாம்’ என்கிறார் ஜிதின். ‘இவர் என்னோட அப்பா’ என்கிறார் அருவி. ‘என்கிட்ட கேசவன் பிணத்தை கொடுத்திருங்க, நான் பார்த்துக்கறேன்’ என்கிறார் ஸ்ரீகுமார்.

அவர்கள் அனைவரையும் பார்த்துச் சிரியாய் சிரிக்கிற அளவுக்குப் ‘போதையில்’ திளைக்கிறார் லூக்.

இதற்கிடையே, அந்த சைக்கோ கொலைகாரர் லூக் தான் என்ற முடிவுக்கு வருகின்றனர் போலீசார். அவரைத் தேடுகிற முயற்சிகள் தொடங்குகின்றன.

கேசவன் பிணமாகிற சூழல் ஏன் உருவானது? அனைவரது கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு அப்பிணத்தை ஸ்ரீகுமார் தூக்கிச் சென்றாரா? இந்தக் கதையில் போலீசின் பங்கு என்ன? இது போன்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது ‘மரணமாஸ்’ படத்தின் மீதி.

ரத்தினச் சுருக்கமாக அமைந்த அந்தப் பதில்கள், விலாவாரியாக நாம் மனதில் விரியும் கேள்விகளுக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறதா என்பதை அறிய முழுப்படத்தையும் கண் இமைக்காமல் பார்த்தாக வேண்டும்.

விஜய் ரசிகராகநாயகன்’!

‘மரணமாஸ்’ திரைக்கதை குறிப்பிட்ட வகைமையில் அடங்காமல் திரிவதை உணர்ந்தே திரைக்கதை வசனத்தை சிஜு சன்னி – இயக்குநர் சிவபிரசாத் இணை ஆக்கியிருக்கிறது.

அதனால் சில இடங்களில் சிரிக்க முடிகிறது; சில இடங்களில் வெறுமையோடு கடக்க வேண்டியிருக்கிறது.

இயக்குநரின் திரைக்கதை ட்ரீட்மெண்ட் கூட அதனை உத்தேசித்தே அமைக்கப்பட்டிருக்கிறது. அது போக, இக்கதையில் சில லாஜிக் மீறல்களும் உண்டு.

இதுபோன்ற சில அம்சங்கள், ‘நல்லதொரு பொழுதுபோக்கு படம் பார்க்கலாமா’ என்பவர்களை எரிச்சலில் ஆழ்த்தக்கூடும்.

அதேநேரத்தில், இதுபோன்ற பரீட்சார்த்த முயற்சிகள் நாம் இதுவரை காணாத திரையனுபவத்தைத் தரவல்லவை என்பதையும் மறந்துவிடக் கூடாது.

ஒளிப்பதிவாளர் நீரஜ் ரவி, படத்தொகுப்பாளர் சமன் சாக்கோ, தயாரிப்பு வடிவமைப்பாளர் மானவ் சுரேஷ் உட்படப் பலரது தொழில்நுட்ப உழைப்பு இப்படத்தில் அடங்கியிருக்கிறது.

இசையமைப்பாளர் ஜேகேவின் பின்னணி இசை இப்படத்தின் காட்சிகளோடு நம்மை ஒன்ற வைத்திருக்கிறது.

இன்றைய தலைமுறை எதிர்பார்க்கிற ‘சிக்மா மேல்’ (sigma male) ஆக இதில் தோன்றியிருக்கிறார் பசில் ஜோசப். ஆனால், மனதில் அப்படியொரு நினைப்பைத் தாங்கியிருந்தாலும் அவரது இயல்பு அப்படிப்பட்டதில்லை எனும்படியான பாத்திர வார்ப்பு நமக்குச் சிரிப்பூட்டுவதாக உள்ளது.

இதில், அவர் விஜய் ரசிகராகவும் வருகிறார். ‘தலைவா’ பாணியில் கைகளை உயர்த்தி அவர் ‘ஹாய்’ சொல்வது வெடிச்சிரிப்புக்கு வழி வகுக்கும்.

சமீபகாலமாகத் தனது படங்களின் வழியே சிரிக்க வைப்பதோடு, ‘செமயா நடிச்சிருக்காருப்பா’ எனும்படியான ‘பெர்பார்மன்ஸையும்’ தந்து வருகிறார் பசில். இதிலும் அது நிகழ்ந்திருக்கிறது.

நாயகி அனிஷ்மா அழகாகத் தெரிவதோடு, அழுவதோடு, சிரிப்பதோடு, முக்கியமான தருணங்களில் சிறப்பாகவும் நடித்திருக்கிறார்.

வில்லனாக வரும் ராஜேஷ் மாதவன் நம்மைச் சிரிக்க வைத்திருப்பதோடு, ‘சைக்கோ கில்லராக’ பயமுறுத்தவும் செய்கிறார். சிஜு சன்னி, சுரேஷ் கிருஷ்ணா இருவரில் இரண்டாமவர் அதிகம் நம்மைச் சிரிப்பில் ஆழ்த்துகிறார்.

அதுவும் மொபைலில் பேசிக்கொண்டிருக்கும் வருங்கால மனைவியிடம் ‘ஐ லவ் யூ’வை விதவிதமான சூழல்களில் சொல்ல நேர்வது சிரிப்பை வரவழைக்கிறது.

இப்படத்தில் பாபு ஆண்டனியும் வருகிறார். ‘கெத்தாக’ திரியும் அவரைக் கூட ‘காமெடி பீஸ்’ ஆக்கியிருக்கின்றனர்.

இதுபோக பூஜா மோகன்ராஜ், புலியானம் பௌலோஸ், பிரசாந்த் அலெக்ஸ் உள்ளிட்ட சிலர் இதிலுண்டு.

இந்தக் கும்பலின் ‘அட்ராசிட்டி’ போதாதென்று ‘ஆளுக்கொரு ஷாட்’ என்று முறை வைத்து டொவினோ தாமஸும் குரு சோமசுந்தரமும் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.

வித்தியாசமான பாத்திர வார்ப்புகளைக் கொண்ட ஒரு காமெடி கதையில் ரொம்பவே கொடூரமான ஒரு சைக்கோ கொலைகாரரை திணித்தால் என்னவாகும் என்பதைச் சிரிக்கச் சிரிக்க சொல்ல முயன்றிருக்கிறது இப்படம்.

மொத்தத்தில், ‘சீரியசான கதை சொல்லலை’க் கொண்ட ஒரு ‘காமெடி படம் பார்த்த உணர்வைத் தருகிறது ‘மரணமாஸ்’.

அது வேண்டும் என்பவர்கள் மட்டும் இயக்குநர் சிவபிரசாத்தின் இப்படைப்பைக் காணலாம்!

– உதயசங்கரன் பாடகலிங்கம்