மண்ணில் விதையாய் விழுந்து முளைத்தது முதல் விண்ணுக்கு பறந்தது வரையிலான விஜயகாந்த் பயணத்தின் சில தடங்களை இங்கே பார்க்கலாம்.
விஜயகாந்தின் தந்தை அழகர்சாமிக்கு சொந்த ஊர் இப்போதைய விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள ராமானுஜபுரம்.
மதுரைக்கு வந்த அவர் கீரைத்துறை என்ற கிராமத்தில் அரிசி ஆலை ஆரம்பித்து நடத்தினார். அங்கு 1952 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி பிறந்தவர் இன்று விஜயகாந்த் என அழைக்கப்படும் விஜயராஜ்.
மதுரை தெற்குவாசலில் உள்ள நாடார் வித்யாலயா பள்ளியில் ஆரம்பக் கல்வியை கற்றார்.

நெல்லை மாவட்டம் விக்கிரசிங்கபுரம் புனித மரியன்னை உயர்நிலைப் பள்ளியில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு படித்தார்.
அங்கே அவருக்கு நண்பர்கள் கூட்டம் அதிகம். விடுமுறை நாட்களில் குற்றால அருவிகளிலும், பாபநாசம் தாமிரபரணி ஆற்றிலும் குளித்து மகிழ்வது வழக்கம்.
பாபநாசம் பள்ளியோடு படிப்புக்கு முழுக்கு போட்டார் விஜயராஜ்.
30 வயது வரை மதுரையில்தான் வாசம். பகலில் கீரைத்துறையில் உள்ள தங்கள் அரிசி ஆலையில் வேலை.
மாலையில் நண்பர் பட்டாளத்துடன் சினிமாக்கள் என கழித்த விஜயராஜ், பின்னர் சினிமா கனவில் சென்னைக்கு வந்து விட்டார்.
வாய்ப்பு தேடிச்சென்ற இடங்களில் எல்லாம் அவமானமே மிஞ்சியது.
சுதாகர் – ராதிகா நடித்த ‘இனிக்கும் இளமை’ படத்துக்காக முதன் முறையாக அரிதாரம் பூசினார் விஜயராஜ்.
அவருக்கு, வில்லன் வேடம் கொடுத்தார், இயக்குநர் எம்.ஏ.காஜா. விஜயராஜ் என்ற பெயரை விஜயகாந்த், என மாற்றிவரும் அவரே.
1979 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் ஓடவில்லை. அகல் விளக்கு படத்தில் ஹீரோவாக நடித்தார். அடுத்து, நீரோட்டம் சாமந்தி பூ ஆகிய இரண்டு படங்கள், அவர் நடித்து ரிலீஸ் ஆகின. அவைகளும் தேறவில்லை.
விஜயன் இயக்கிய ‘தூரத்து இடி முழக்கம்’ விஜயகாந்தை ஓரளவு ஜனங்களிடம் தெரிய வைத்தது. எஸ்.ஏ.சந்திரசேகர் டைரக்ஷனில் உருவான ‘சட்டம் ஒரு இருட்டறை’ படம்’ விஜயகாந்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்தப்படம் ரீ-மேக் செய்யப்பட்டது.
இதன் இந்தி மறு ஆக்கமான ‘அந்தா கானூன் ‘ படத்தில் விஜய்காந்த் ரோலில் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
நெஞ்சிலே துணிவிருந்தால், சாதிக்கொரு நீதி, பட்டணத்து ராஜாக்கள், சாட்சி, நீதியின் மறுபக்கம், வசந்த ராகம் என எஸ்.ஏ. சந்திரசேகரின் அடுத்தடுத்த படங்களில் நடித்து நட்சத்திர அந்தஸ்து பெற்றார், விஜயகாந்த்.
1984 ஆம் ஆண்டில் மட்டும் 18 படங்களில் ஹீரோவாக நடித்து ‘ரிகார்டு பிரேக்’ ஏற்படுத்தினார். நூறாவது நாள், வைதேகி காத்திருந்தாள் போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
சிவாஜியுடன் ‘வீரபாண்டியன்’ படத்தில் நடித்த விஜயகாந்த், கமல்ஹாசனுடன், ‘மனக்கணக்கு’ படத்தில் இணைந்து நடித்தார்.
விஜயை கிராம மக்களிடம் கொண்டு போய் சேர்த்த செந்தூரபாண்டி, சூர்யா முகத்தை பட்டிதொட்டி எங்கும் பரப்பிய ‘பெரியண்ணா’ ஆகியவை விஜயகாந்த் நட்புக்காக நடித்தவை.
ஒரு கட்டத்தில் போலீஸ் அதிகாரி வேடங்கள் அவரை தேடித்தேடி துரத்தி வந்தன.
தர்மம் வெல்லும், புலன் விசாரணை, மாநகர காவல், சேதுபதி ஐபிஎஸ், ஹானஸ்ட் ராஜ், வீரம் வெளைஞ்ச மண்ணு, தாய்மொழி, சத்ரியன், வல்லரசு, வாஞ்சிநாதன் போன்ற படங்களில் காக்கி சட்டை போட்டுக்கொண்டு, எதிரிகளை துரத்தி துரத்தி அடித்தார்.
விருதகிரி எனும் படத்தை இயக்கி நடித்த விஜயகாந்த், 2015 ஆம் ஆண்டு தனது மகன் ஹீரோவாக நடித்த ‘சகாப்தம்’ படத்தில் கவுரவ வேடத்தில் தோன்றினார்.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரிடம் பாசம் அல்ல – பக்தியே வைத்திருந்தவர் விஜயகாந்த்.
அவரது துணைவியார் ஜானகி அம்மாவிடம், பேரன்பு வைத்திருந்தார். ‘அம்மா’ என்றே அவரை அழைப்பார்.
எம்.ஜி.ஆர். தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்திய, வெளிர்நீல நிற பிரச்சார வேனை, ஜானகி அம்மாளிடம் 1996 ஆம் தனக்கு பரிசாக அளிக்குமாறு கேட்டுக்கொண்டார், விஜயகாந்த்.
ஜானகி அம்மாவும் அந்த வேனை அன்பளிப்பாக வழங்கினார்.
மதுரையில் நடந்த தேமுதிக தொடக்க விழாவுக்கு அந்த வேனிலேயே வந்த விஜயகாந்த், பின்னர் பல ஆண்டுகள் தேர்தல் பிரச்சாரத்துக்கும் அந்த வேனையே பயன் படுத்தினார்.
-பாப்பாங்குளம் பாரதி.