Take a fresh look at your lifestyle.

“விஸ்வநாதன் வேலை வேண்டும்”!

திரைத் தெறிப்புகள் – 85 :

*

ஜாலியான ஒரு திரைப்படத்தில் வரும் ஜாலியான பாட்டு : என்று இந்தப் பாட்டைச் சொல்லலாம்.

ஸ்ரீதரின் இயக்கத்தில் 1964-ல் அப்போதே ‘ஈஸ்ட்மென் கலர்ப் படம்’ என்று விளம்பரப்படுத்தப்பட்டு, வெளிவந்த ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தில், “மாடி மேல மாடி கட்டி, கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே…” என்று உற்சாகம் பொங்கும் குரலில் இந்தப் பாடலைப் பாடியிருப்பவர் பி.பி. ஸ்ரீனிவாஸ்.

இந்தப் படத்தில் தன்னை, வேலையை விட்டுத் தூக்கிவிட்ட எஸ்டேட் முதலாளி டி.எஸ். பாலையாவைப் பார்த்து அறிமுக நடிகரான ரவிச்சந்திரன் கோரஸுடன் பாடுகிற மாதிரி அமைந்திருக்கும் இந்தப் பாடல் காட்சி.

“மாடி மேல மாடி கட்டிக்
கோடி கோடி சேர்த்து விட்ட சீமானே
ஹலோ ஹலோ கம் ஆன்
கம் அவுட் சீமானே,

ஆளு அம்பு சேனை
வெச்சு காரு வெச்சு
போர் அடிக்கும் கோமானே,
ஹலோ ஹலோ கம்
ஆன் கம் அவுட் கோமானே…”

என்று குழுவினருடன் ஆடிப் பாடியபடி, ரவிச்சந்திரன் வெவ்வேறு முகபாவங்களைக் காட்ட, அதற்கு மாடிவீட்டு பால்கனியில் நிற்கும் பாலையா காட்டும் முகபாவங்களைப் பார்க்க ரகளையாக இருக்கும்.

காஞ்சனாவும் ராஜஸ்ரீயும் அதே காட்சியில் நடித்திருப்பார்கள்.

“பொண்ணுங்க பேச்சுக்கு
புத்தியை மாத்திக்கும் மூளை இல்லாதவரே!
வேட்டிய மாத்திக்க, சேலைய கட்டிக்க,
வெட்கமில்லாதவரே…”

என்று நீளும் இந்தப் பாட்டுக்கு எம்.எஸ்.விஸ்வநாதனும், ராமமூர்த்தியும் கனகச்சிதமாக அருமையாக இசையமைத்திருப்பார்கள்.

வழக்கமாக மென்மையான குரலில் பாடும் பி.பி. ஸ்ரீனிவாஸ், இந்தப் பாடலில் வழக்கத்திற்கு மாறாக தன் குரலை பல்வேறு ஏற்ற இறக்கங்களுடன் புதுத் தினுசாகப் பாடியிருப்பார்.

“ராத்திரி நேரத்தில் தூக்கத்தில்
நான் ஒரு ராட்சசன் போல் வருவேன்,
நாளைக்கு வேலைக்கு வா
வென்று நீ சொல்லும்
நாள் வரை போரிடுவேன்!

வானம் வந்து சாய்ந்தாலும்
மேகம் வந்து வீழ்ந்தாலும்
வேங்கை போல பாய்ந்து
வந்து வேலை வாங்குவோம்.”

என்று பாடல் காட்சி முடியும் வேளையில், பாடி ஆடிய ரவிச்சந்திரனின் தலையில் சிறு காயம் ஏற்பட்ட மாதிரி அவர் நாடகம் ஆட அந்தக் காட்சி, இளமைத் துள்ளலுடன் முடிவடையும்.

வெளிவந்தபோது பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்ட இந்தப் பாடலைத் தன்னுடைய இசை நிகழ்ச்சி நிறைவடையும்போது பாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் கே.ஜே. ஜேசுதாஸ்.

இந்தப் பாடலை ஏக வித்தையுடன் குரலில் அவர் பாடுவதைக் கேட்பது, இன்னும் ரகளையாக இருக்கும். ஒரு பாடலில் தான் எத்தனை ஜாலங்கள்!

*

– மணா.