காமெடியில் கவுண்டமணியும் செந்திலும் ஒன்றுசேர்ந்து கலக்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில், தனி ஒருவனாக நின்று அமர்க்களம் செய்தவர் ‘வைகைப் புயல்’ வடிவேலு. 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருபவர்.
வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனிப்பாணியை உருவாக்கிக் கொண்டவர். குறுகிய காலத்திலேயே ரஜினி, கமலுடன் பாரதிராஜா படங்களில் நடித்தவர்.
வடிவேலு, கதாநாயகனாகவும் வெற்றிக்கொடி நாட்டியவர். அதுவே அவர் கொஞ்ச காலம் சினிமை விட்டுக் காணாமல் போக வழி வகுத்தது.
இயக்குநர் ஷங்கர் தயாரித்த ‘இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி’ திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். பிரமாண்ட டைரக்டர் தயாரித்த அந்தச் சின்ன பட்ஜெட் படம் பெரிய அளவில் வெற்றி கண்டது. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் ஷங்கரே தயாரித்தார்.
அந்தப் படத்துக்கு ஒழுங்காக கால்ஷீட் கொடுக்காமல் சொதப்பியதால், வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட் கார்டு’ போட்டு, திரைப்படங்களில் நடிக்கத் தடை விதித்தது.
‘லைகா’ நிறுவனம் ஷங்கருக்கு அபராதம் செலுத்தி, தனது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலுவை கதாநாயகனாக நடிக்க வைத்தது. படம் ஓடவில்லை.
இதனைத் தொடர்ந்து வடிவேலு நடித்த ‘மாமன்னன்’ படம் மட்டும் வெற்றிப்படமாக அமைந்தது. ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தைத் தொடர்ந்து வடிவேலு நடித்த ‘சந்திரமுகி – 2’ படமும் படுதோல்வி அடைந்தது.
இந்த நிலையில் வடிவேலுவின் இரண்டு படங்கள் அடுத்தடுத்து ரிலீஸ் ஆக உள்ளன. தனது படங்களில், காமெடிக்கு உத்தரவாதம் அளிக்கும் சுந்தர்.சி., சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வடிவேலுவுடன் இணைந்துள்ள படம் ‘கேங்கர்ஸ்’. இந்தப் படம் அடுத்த மாதம் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
அதேபோல் ‘மாமன்னன் திரைப்படத்தில் இணைந்து நடித்து வெற்றி கண்ட பகத் பாசில் – வடிவேலு கூட்டணி நடித்துள்ள படம் ‘மாரீசன்’. இதை சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார்.
சூப்பர் குட் நிறுவனத்தின் 98-வது தயாரிப்பு. யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள ‘மாரீசன்’ ஜுலை மாதம் வெளியாகிறது.
இரண்டு படங்களும் வடிவேலுவுக்கு ‘ரீ – என்டரி’யாக இருக்கும் என நம்பப்படுகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.