Take a fresh look at your lifestyle.

ரஜினியிடம் நஷ்ட ஈடு கேட்கும் ‘லைகா‘ நிறுவனம்!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் கடந்த 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார்.

மஞ்சு வாரியர், ராணா, ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தின் பட்ஜெட் ரூ.250 கோடி.

‘வேட்டையன்’ படத்தின் கருத்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், ரஜினிக்கான மாஸ் காட்சிகள் செயற்கையாக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன.

வசூல் நிலவரம் திருப்தியாக இல்லை. கடந்த 11 நாட்களில் இந்தப் படம் 230 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளது. வசூல் குறைந்ததற்கு மழை ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

ரஜினியின் முந்தையப் படமான ‘ஜெயிலர்’ 600 கோடி ரூபாயை வசூலித்த நிலையில் அதில் பாதியைக்கூட ‘வேட்டையன்’ தாண்டவில்லை.

‘லைகா’ நிறுவனம் இதற்கு முன் தயாரித்த லால் சலாம், இந்தியன் – 2 ஆகிய படங்களும் தோல்வியை தழுவின.

ரஜினியின் படம், அந்த நஷ்டத்தை ஈடு கட்டும் என பட நிறுவனம் நினைத்த நிலையில், இதுவும் கை கொடுக்கவில்லை.

இதனால் ரஜினியிடம், ‘லைகா’ நிறுவனம் நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அப்படி இல்லாவிட்டால், சம்பளத்தைக் குறைத்துக் கொண்டு, தங்கள் நிறுவனத்துக்கு மற்றொரு படம் நடித்து தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது லைகா.

ஏற்கனவே தான் தயாரித்த ‘பாபா’ போன்ற படங்கள் தோல்வி அடைந்தபோது, விநியோகஸ்தர்களுக்கு ரஜினி, பணத்தைத் திருப்பி கொடுத்து, ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளார்.

– பாப்பாங்குளம் பாரதி.