சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
இந்தத் தொடரை உருவாக்கிய இயக்குநர் பாலாஜி மோகன், அன்றாட உறவுகளில் இருக்கும் உண்மையான விஷயங்களை தனக்கே உரிய நகைச்சுவையான பார்வையில் சொல்லும் திறமை கொண்டவர்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான கதை சொல்லும் பாணியை உருவாக்கிய இயக்குநர்.
‘காதலில் சொதப்புவது எப்படி?’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், பின்னர் ‘வாயை மூடி பேசவும்’, ‘மாரி’, ‘மாரி 2’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது.
சென்னையில் நடைபெற்ற ‘#Love’ தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய சௌந்தர்யா ரஜினிகாந்த்:
“மும்பையில் ‘#Love’ தொடருக்கான வாசிப்பு நிகழ்வு நடைபெற்றபோது மோனிகாவுடன் இருந்த அனுபவம் சிறப்பானது. என்னை ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும், சிறந்த கதை சொல்லியாகவும் உருவாக அவர் அளித்த உத்வேகம் மறக்க முடியாதது.
நான் அதிகமான விஷயங்களால் எளிதில் வியப்படைவதில்லை. ஏனென்றால், நான் தலைவரின் மகள். அனைவராலும் போற்றப்படும் ஒருவருடன் வாழும்போது, மற்றவர்களைப் பார்த்து வியக்கும் பழக்கம் குறைந்துவிடும்.

ஆனால் மோனிகா என்னை மிகவும் வியக்க வைத்தவர். அவர் ஒரு சிறந்த தலைவர், மிகப்பெரிய உத்வேகம் தருபவர். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரிப்பாளராகவும் ஷோ-ரன்னராகவும் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியதற்கு நன்றி.
அதேபோல், ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் பயணித்த அபிஷேக் மற்றும் சுதான்ஷு ஆகியோருக்கும் நன்றி.
நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் தொடரின் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு.
‘ஸ்பைடர்மேன்’ படத்தில் வரும் ‘With great power comes great responsibility’ என்ற வசனம் உண்மைதான்.
ஒரு கதையை ஆரம்பத்திலிருந்து இறுதிக் கட்டம் வரை கொண்டு செல்வது என்னுடைய பொறுப்பாக மாறியது. அந்தப் பயணத்தில் பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது.
எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பதோடு, தேவையான நேரத்தில் அவற்றை மாற்றிக்கொள்ளவும் கற்றுக்கொண்டேன்.
இறுதியில், இந்தத் தொடரை நாங்கள் நினைத்த இடத்திற்கு சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கமாக இருந்தது.
இந்தப் பயணத்தில் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய விஷயம், முடிவுகளை எடுப்பது கடினமாக இருந்தாலும், சரியான நேரத்தில் அந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுதான்.
இயக்குநர் பாலாஜி மோகன் :
“காதல் என்பது உலகில் யாராலும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயம். அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் காதலைப் பற்றி கதைகள் சொல்லி வருகிறேன்.
ஆண்கள் பெண்களைப் பற்றியும், பெண்கள் ஆண்களைப் பற்றியும் தெரிந்துகொள்வது என்பது பல தலைமுறைகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பயணம்.
இன்னும் பல ஆண்டுகள் சென்றாலும் காதலை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் அதன் சிறப்பு.
காதலைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்பதற்காக நான் தொடர்ந்து அதைப் பற்றி பேசவில்லை. உண்மையில், எனக்கும் காதலைப் பற்றி முழுமையாக எதுவும் தெரியாது.
மற்ற அனைவரையும் போலவே நானும் தொடர்ந்து அதை புரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் காதலை எப்போதும் சுவாரஸ்யமாகவும், புதுமையாகவும் வைத்திருக்கிறது.
அதனால்தான் காதல் கதைகளை தொடர்ந்து திரையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது.
என்னுடைய படைப்புகளைப் பார்த்து ரசிகர்கள் காதல் குறித்து பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள் என்று கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
அதே நேரத்தில், திரைப்படங்களில் வரும் காதல் கதைகளைப் பார்த்து நிஜ வாழ்க்கையிலும் அதேபோன்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.
முடிந்தவரை என்னுடைய கதைகளை நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாகவும், அதே நேரத்தில் பார்வையாளர்கள் கனவு காணவும், தங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் முடியும் வகையிலும் உருவாக்க முயற்சிக்கிறேன்.
அந்த வகையில்தான் ‘Love’ தொடரையும் உருவாக்கியுள்ளோம். காதலைப் பற்றிய சில கனவுகளையும், நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான உணர்வுகளையும் இணைத்து இந்தக் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறோம்.
பார்வையாளர்கள் இந்தத் தொடரைப் பார்க்கும்போது தங்களது அனுபவங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்” என்றார்.
நிஜ வாழ்க்கையில் காதலுக்கு இரண்டில் எது முக்கியம் என்று கேட்டபோது, அர்ஜுன் தாஸ் கம்ஃபோர்ட்டிபிலிட்டிதான் முக்கியம் என்றார். கெமிஸ்ட்ரி சில காலம் மட்டுமே நீடிக்கலாம்; அதன் பிறகு உறவு தொடர கம்ஃபோர்ட்டிபிலிட்டி அவசியம் என்றார்.

ஐஸ்வர்யா லட்சுமியோ “கெமிஸ்ட்ரிதான் முதலில் உருவாகி, அதன் மூலம் கம்ஃபோர்ட்டிபிலிட்டியை நோக்கி உறவு செல்லும்” என்று தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டார்.
இன்றைய காலகட்டத்தில் காதல் என்பது நேரில் சந்தித்து தொடங்குவதைத் தாண்டி, டேட்டிங் ஆப்களில் ஸ்வைப், மேட்ச், மெசேஜ் என டிஜிட்டல் உலகத்திலேயே ஆரம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த நவீன காதல் மற்றும் உறவுகளின் மாற்றத்தை மையமாக வைத்தே ‘Love’ தொடர் உருவாகியுள்ளது.
காதல், நட்பு, குடும்பம், லட்சியம் என உறவுகளின் பல்வேறு பரிமாணங்களைப் பேசும் ‘Love’ வெப் சீரிஸ் அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.