உச்ச நட்சத்திரங்களின் படங்கள் பெரும்பாலும் தீபாவளி, பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு போன்ற பண்டிகை தினங்களில் ரிலீஸ் ஆவது வழக்கம்.
அப்போது ரசிகர்களுக்காக அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் திரையிடப்படும்.
இந்த ஆண்டு ஆயுத பூஜையை முன்னிட்டு விஜய் நடித்த ‘லியோ’ திரைப்படம் 19 ஆம் தேதி வெளியாகிறது.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் ஆகும் இந்தப் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கு போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் ‘வாரிசு’, அஜித்தின் ‘துணிவு’ ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ஒரே நாளில் வெளியானது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள மல்டி தியேட்டர் வளாகத்தில் இரு படங்களும் திரையிடப்பட்டன.
அதிகாலை சிறப்புக் காட்சியின் போது, இரு தரப்பு ரசிகர்களும் மோதிக்கொண்டனர்.
குலை நடுங்கச் செய்யும் விதமாக, ‘துணிவு’ படத்தைப் பார்க்க வந்த அஜித் ரசிகர் ரோட்டில் ஆட்டம் போட்டபோது லாரி மோதி துடிதுடித்து இறந்து போனார்.
இதுபோன்ற அசாம்பாவிதங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கத் தயக்கம் காட்டியது.
ஆளும் கட்சிக்கு நெருக்கமான சன் பிக்சர்ஸ் தயாரித்து, ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ படத்துக்கும் கூட அதிகாலை சிறப்புக் காட்சிக்கு அனுமதிக்கப்படவில்லை.

‘லியோ’ திரைப்படம் 19-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், அன்று அதிகாலையில் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிகளை திரையிட அனுமதி கேட்டு, பட நிறுவனம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.
அதனை ஏற்று ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கீரின் ஸ்டூடியோஸ் நிறுவனம் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரியது.
இதனை அரசு பரீசிலனை செய்து, ‘லியோ’ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. 19-ம் தேதி முதல் 24-ஆம் தேதி வரை சிறப்புக் காட்சிகள் திரையிடலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களின் பாதுகாப்பை திரையரங்குகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே லியோ திரைப்பட டிரைலரில் விஜய் பேசும் தகாத வார்த்தை ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு, அந்த தகாத வார்த்தை உள்ளிட்ட 13 இடங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கண்டிப்புடன் கூறியது.
அதனை ஏற்று விஜய் ஆபாச வார்த்தை பேசும் இடத்தில் ‘பீப்’ ஒலியை இடம் பெறச்செய்துள்ளது படக்குழு. தணிக்கை அறிவுறுத்திய அனைத்து திருத்தங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
எனினும் இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியாகும் லியோ படத்தின் காட்சிகளில் திருத்தம் ஏதும் செய்யப்படவில்லை.
– பாப்பாங்குளம் பாரதி.