Take a fresh look at your lifestyle.

தமிழகத்தில் ‘நோ’, புதுச்சேரியில் ‘ஓகே’!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் நாளை (அக்டோபர்-19) தமிழகத்தில் 850 திரையரங்குகளில்  வெளியாக உள்ளது.

‘லியோ’ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. நேரம் குறிப்பிடாமல் நாளொன்றுக்கு  ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் படத்தைத் தயாரித்த செவன் ஸ்கிரின்ஸ் ஸ்டூடியோஸ் நிறுவனம், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது.

‘லியோ’ படத்தின்  சிறப்புக் காட்சியை காலை 4 மணிக்கு திரையிட அனுமதிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு  நீதிபதி அனிதா சுமந்த் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது.

பட நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீநாத் ஸ்ரீதேவன் ‘லியோ’ திரைப்படம் 2.45 நிமிட நேரம் ஓடும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.

அரசு அனுமதி அளித்துள்ள நேரத்தில் திரையிட்டால் 5 காட்சிகளை திரையிட இயலாது. எனவே முதல்நாளில் சிறப்புக் காட்சியை காலை 4  மணிக்கும், அடுத்த காட்சியை 7 மணிக்கும் ஆரம்பிக்க உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா எதிர்ப்பு தெரிவித்தார்.

அவரது வாதம் வருமாறு:

அதிகாலை 4 மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி அளிப்பதில் சிக்கல்கள் உள்ளன. எந்தப் படத்துக்கும் 4 மணி மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அரசு அனுமதியளிக்கவில்லை.

9 மணிக்கு காட்சிகளை தொடங்க வேண்டும் என்பது தான் அரசின் விதி, அதனை மீற முடியாது. கடந்த முறை (பொங்கல்) ஒரு படத்திற்கு 4 மணி காட்சிக்கு சென்ற ரசிகர் ஒருவர் உயிரிழந்தார்.

இதில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளது. அதனை நாங்கள் பார்க்க வேண்டும். லியோ படத்தின் டிரைலரை வெளியிட்டபோது ஒரு தியேட்டர் சேதப்படுத்தப்பட்டது.

இவ்வாறு அரசு தரப்பு விளக்கம் அளித்த நிலையில் நீதிபதி அனிதா சுமந்த், உடனடியாக தனது தீர்ப்பை வழங்கினார்.

‘லியோ’ படத்துக்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது. 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு படத்தைத் தொடங்க அனுமதி கேட்கப்பட்டது. இது குறித்து அரசிடம் மனு அளித்து முறையிடலாம் என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

புதுச்சேரியில் அனுமதி:

நமது அண்டை மாநிலமான புதுச்சேரியில் 15 தியேட்டர்களில் லியோ திரைப்படம் வெளியாகிறது. நாளை காலை 7 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி கோரி, புதுச்சேரி விஜய் ரசிகர்கள் சார்பில் அரசிடம் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து புதுச்சேரியில் காலை 7 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் வல்லபன் பிறப்பித்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், புதுச்சேரியை சேர்ந்தவர். அங்குள்ள புஸ்ஸி சட்டமன்ற தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக ஒருமுறை தேர்வு செய்யப்பட்டவர்.

புதுச்சேரியில் தனக்குள்ள அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, அந்த மாநிலத்தில் லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு புஸ்ஸி ஆனந்த் அனுமதி பெற்றுள்ளார் என தகவல்.

இயக்குநர் பிரார்த்தனை:

இதனிடையே லியோ படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படம் வெற்றி பெற வேண்டி ராமேஸ்வரம் கோயிலில் சிறப்பு பூஜையில் ஈடுபட்டார்.

லோகேஷ் கனகராஜ் தலைமையில் 10 பேர் கொண்ட படக்குழுவினர் நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வந்தனர்.

ராம நாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதியில் லியோ படத்தின் வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

– பாப்பாங்குளம் பாரதி.