Take a fresh look at your lifestyle.

முதல் நாளில் ரூ. 64 கோடி வசூலித்த ’எம்புரான்’!

2019 ஆம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படம் லூசிபர். அவருடன் மஞ்சு வாரியார், விவேக் ஓபராய், டவினோ தாமஸ், உள்ளிட்டோர் நடித்திருந்தனர். நடிகர் பிரித்திவிராஜ் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இது, பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 200 கோடி ரூபாய் வசூலித்து, சாதனை படைத்தது.

6 ஆண்டுகளுக்குப் பிறகு லூசிபர் படத்தின் 2 ஆம் பாகம் – ‘எம்புரான்’ என்ற பெயரில் உருவாகி உலகம் முழுவதும் நேற்று திரை அரங்குகளில் ரிலீஸ் ஆனது.

பிரித்திவிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திலும், மோகன்லாலுடன் டொவினோ தாமஸ், மஞ்சுவாரியார் ஆகியோர் நடித்துள்ளனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ‘பான் இந்தியா’ படமாக வெளிவந்துள்ள ‘எம்புரான்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. ‘ஓஹோ’ என்று பாராட்டப்படவும் இல்லை. ‘மட்டம்  என இகழப்படவும் இல்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘எம்புரான்’ திரைப்படம், முதல் நாள் வசூலில் குறை வைக்கவில்லை. கேரளாவில் இந்தப் படம், இதுவரை இல்லாத வகையில் சுமார் 750 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. அங்கு மட்டும் நேற்று ஒரே நாளில் 15 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

கேரளவையும் சேர்த்து இந்தப் படம் இந்தியா முழுவதும் 24 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

வெளி நாடுகளில் 40 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. ஆக முதல் நாளில் உலகம் முழுவதும் 64 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது.

வார இறுதியில் 80 கோடி ரூபாய் வசூலை தாண்டி விடும் – மொத்தமாக ரூ. 225 வசூலிக்கும் என்கிறார்கள், எம்புரானை வாங்கிய விநியோகஸ்தர்கள்.

இந்தப் படத்தின் திரை அரங்க உரிமை மட்டும் 100 கோடி ரூபாய்க்கு விலைபோயுள்ளது. சேட்டிலைட், ஓடிடி உரிமை தனி.

– பாப்பாங்குளம் பாரதி.