Take a fresh look at your lifestyle.

ராஷ்மிகா உயிருக்கு அச்சுறுத்தல்?

அண்மையில் பெங்களூருவில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. கர்நாடக மாநில அரசு இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.

விழாவில் கலந்துகொள்ள பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கன்னட சினிமா மூலம், தனது திரை உலகப் பயணத்தை ஆரம்பித்த ராஷ்மிகா, இப்போது தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களில் ‘பிஸி’யாக இருக்கிறார்.

கன்னட சினிமாவின் வாயிலாக திரைத்துறைக்கு வந்த ராஷ்மிகா மந்தனா, பெங்களூரு திரைப்பட விழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை.

அந்த விழாவில் பேசிய ஆளும் காங்கிரஸ் எம்.எல்.ஏ ரவிக்குமார் கவுடா கனிகா, ராஷ்மிகாவை மேடையில் வெளுத்து வாங்கி விட்டார்.

‘ராஷ்மிகா மந்தனா தனது சினிமா வாழ்க்கையை, ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னட படம் மூலம் கர்நாடகாவில் தொடங்கினார் – பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ளுமாறு அவரை அழைத்தபோது மறுத்துவிட்டார்.

‘என் வீடு ஐதராபாத்தில் இருக்கிறது – கர்நாடகா எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியாது – எனக்கு நேரமில்லை. என்னால் வர முடியாது’ என்று முகத்தில் அடித்த மாதிரி ராஷ்மிகா கூறிவிட்டார்.

எனக்குத் தெரிந்த சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், பத்து பதினைந்து முறை, ராஷ்மிகாவின் வீட்டுக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்தார் – ஆனால், அவர் வர மறுத்துவிட்டார்.

தன்னுடைய சினிமா வாழ்க்கையை இங்குத் தொடங்கி வளர்ந்தபோதும், கன்னடத்தை அவர் புறக்கணித்துவிட்டார். அதற்கு நாம் பாடம் புகட்ட வேண்டும்’ என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆவேசமாக கூறினார்.

அவரது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஷ்மிகா சார்ந்த சமூகமான கோடவா தேசிய கவுன்சில் என்ற அமைப்பின் தலைவர் நாச்சப்பா, எம்.எல்.ஏ. ரவிக்குமாரின் பேச்சுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கர்நாடகா உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா ஆகியோருக்கு ஒரு கடிதமும் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘சட்டமன்ற உறுப்பினர் ஒருவரால் ராஷ்மிகா மந்தனா அச்சுறுத்தப்படுகிறார் – கோடவா பழங்குடியினத்தைச் சேர்ந்த அவரை அச்சுறுத்துவது, எங்கள் ஜாதியையே அச்சுறுத்துவது போன்றது – எனவே, ராஷ்மிகாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

கர்நாடக எல்லை தாண்டியும் எம்.எல்.ஏ. ரவிக்குமார் பேச்சு விவாதமாகியுள்ள நிலையில், ‘நான், ராஷ்மிகாவின் உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கவில்லை’ என அவர் மறுத்துள்ளார்.

‘விழா மேடையில், ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்று பேசியது, அவரது உயிரை எடுக்க வேண்டும் என்ற பொருளில் அல்ல – அவரை தாக்க வேண்டும் என்றும் சொல்லவில்லை – ஏறி வந்த ஏணியை எட்டி உதைக்க வேண்டாம் என்ற அர்த்தத்தில் தான் பேசினேன்.

கர்நாடகம் எனது மண். எனது மாநிலம் – எனது மொழி – அதனை மதிக்க வேண்டும் என்றுதான் சொன்னேன். இப்போதும் நான் ராஷ்மிகாவின் படங்களைப் பார்க்கும் ரசிகன்தான்’ என விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் காங்கிரஸ் எம்.எல்.ஏ.

இந்த விவகாரம் ராஷ்மிகாவுக்கு தெரியுமா என்பது தெரியவில்லை.

அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ என்ற இந்திப் படத்தில் நடித்து முடித்து விட்டு, தனுஷின் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

– பாப்பாங்குளம் பாரதி.