யோகி பாபு, லவ்லின் சந்திரசேகர், ரேச்சல் ரெபக்கா, ராம கிருஷ்ணன், ஜார்ஜ் மரியான் நடிப்பில் மறைந்த சுரேஷ் சங்கையா எழுதி இயக்கி இருக்கும் படம்.
ஆர்.பி டாக்கீஸ், பாக்ஸ் ஆபீஸ் ஸ்டுடியோஸ் சார்பில் ரமேஷ் பாபுவும் ஜெகன் பாஸ்கரனும் தயாரித்துள்ளனர்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், கோடாங்கிபட்டி கிராமத்தில் நீண்ட காலமாகவே குடிநீருக்கு கடும் போராட்டம்.
எம்.ஜி.ஆர் ஆட்சியில் எப்படியாவது தண்ணீர் தர வேண்டும் என்று பல இடங்களில் தீவிரமாக போர் போட்டும் காற்று மட்டுமே வந்தது; தண்ணீர் வரவில்லை என்ற அளவுக்கு வறண்ட பூமி.

மற்ற அடிப்படை வசதிகளும் இல்லை. வயதான தியாகி (கவிஞர் விக்ரமாதித்தன்) ஒருவரின் வழிகாட்டலில் மக்கள், அரசுக்கு பல்வேறு மனுக்கள் கொடுத்தும் பலன் இல்லை.
தெய்வங்களிடம் முறையிட்டும் பலன் இல்லை.
தியாகிக்கு ஒரு பேத்தி மற்றும் சிற்ப வேலைப்பாடு செய்து கொண்டே கோவில் பூசாரியாக இருக்கும் ஒரு பேரன் ( யோகிபாபு).
தண்ணீர் கிடைக்கும் வெளியூர் மாப்பிள்ளைகளைத்தான் கட்டிக் கொள்வோம் என்று ஊர் இளம்பெண்கள் செல்வதாலும், வெளியூர் பெண்கள் அதே வறட்சி காரணமாக இந்த ஊருக்கு வாழ்க்கைப்பட மறுப்பதாலும் பேரனுக்கு கல்யாணம் ஆகவில்லை.
பக்கத்து ஊர்ப் பெண் ஒருத்தியும் (லவ்லின் சந்திரசேகர்) இவனும் விரும்பியும் கூட, பெண்ணின் அப்பா மறுக்கிறார்.
ஒரு நிலையில், சாமி மேல் பாரத்தைப் போட்டு, கோவில் திருவிழாவை நடத்தி விட்டு ஊரில் நீரோட்டம் பார்க்கும் ஒருவர் மூலம் நீரோட்டம் பார்க்க,

தியாகிக்கும் பேரனுக்கும் சொந்தமான சிறு குடிசை இருக்கும் இடத்தை ஒட்டி உள்ள இடத்தில் நீரோட்டம் இருப்பது தெரிகிறது.
போர் போடலாம் என்று ஊர் சொல்ல, ”கிணறே வெட்டுங்கள் இடம் தருகிறேன்” என்கிறார் தியாகி.
கிணறு வெட்ட, பத்தடி ஆழத்தில் டைனோசரின் படிமம் ஒன்று இருப்பது தெரிகிறது.
உடனே அரசு அந்த இடத்தை கையகப்படுத்துகிறது. கிணற்றுக்கும் வழி இல்லை. தியாகியின் பேரனுக்கு என்று இருந்த இடமும் போச்சு.
தவிர அகழ்வாராய்ச்சியின் போது தியாகி வசித்த மண் வீடு இடிந்து, அவரும் இறக்கிறார்.
தோண்டுவதை நிறுத்த வேண்டும் என்கிறது ஊர்.
அகழ்வாராய்ச்சி அதிகாரிகளில் ஒருவர் (ரேச்சல் ரெபக்கா) வரலாறு முக்கியம் என்கிறார்.
இன்னொருவர் (ராம கிருஷ்ணன்) இப்போது வாழும் மக்கள் நலமே முக்கியம்” என்கிறார்.
இந்நிலையில் மழை வர, பள்ளத்தில் நீர் நிரம்ப, அடுத்த நாள் போய் பார்த்தால் பள்ளத்தில் இருந்த டைனோசர் எலும்புப் படிவங்களை காணவில்லை.
டெல்லி வரை விஷயம் போய், போலீஸ் படை வந்து எலும்புகள் எங்கே என்று ஊர் மக்களை அடி வெளுக்கிறது.

டைனோசர் எலும்பு என்ன ஆனது. சிற்பியின் காதல் என்ன ஆனது? ஊருக்கு தண்ணீர் வசதி நிரந்தரமாகக் கிடைத்ததா? என்பதே படம்.
படத்தின் துவக்கத்தில் மறைந்த இயக்குனர் சுரேஷ் சங்கையா, டைரக்ட் செய்த காட்சித் தொகுப்புகளை பார்க்கும்போது மனம் கனக்கிறது.
தண்ணீர் இல்லாத அச்சு அசல் கிராமத்தை உயிர்ப்பாகப் படம் பிடித்து இருக்கிறார் இயக்குனர்.
நாமே அந்த கிராமத்துக்குள் இருக்கும் உணர்வு ஏற்படுகிறது.
கிரமாத்துப் பேச்சு சொலவடைகள் என்று வசன மொழி அருமை.
தண்ணீருக்காக திருவிழா நடக்கும் சமயத்திலும் நடுக்காட்டில் புரஜெக்டரில் பலான படம் பார்க்கும் பெரிசுகள், நீரோட்டம் பார்க்கும் விஷயத்தில் நடக்கும் நகைச்சுவைகள் என்று ஆர்கானிக்கான காமெடி ஆங்காங்கே இருக்கிறது.
பெரிதாகக் காமெடி செய்யாத சீரியஸ் கதாபாத்திரம் யோகி பாபுவுக்கு.
லவ்லின், ரேச்சல் ரெபெக்கா, ராம கிருஷ்ணன் ஆகியோர் குணச் சித்திரங்களாக வந்து போகிறார்கள்.
நிவாஸ் கே பிரசன்னாவின் இசையும் தியாகராஜனின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன.

சீரியசாக இருக்க வேண்டிய பல படங்கள் காமெடி தொனியிலும் காமெடியாக இருக்க வேண்டிய சில பகுதிகள் சீரியஸ் தொனியிலும் போவதால், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு கிடைக்க வேண்டிய உணர்வுக்கு கூட்டல் கிடைக்கவில்லை.
மிகப் பெரிய காமெடியாக வர வேண்டிய கிளைமாக்ஸ் ஜஸ்ட் ஒரு தகவலாக கடந்து போகிறது.
எனினும் விவாதத்தை உருவாகும் கதை என்பதும் அச்சு அசல் பக்கா கிராமியப் படம் என்பதும் இந்தப் படத்தின் பலம்.
மொத்தத்தில் கெணத்தக் காணோம்… சேர்ந்து தேடலாம்
— சு. செந்தில் குமரன்