‘ஆண்டவன் கட்டளை’, ‘கடைசி விவசாயி’ படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதியும் இயக்குநர் மணிகண்டனும் ‘முத்து என்கிற காட்டான்’ வெப் தொடரில் இணைந்துள்ளனர். இதை மணிகண்டனுடன் இணைந்து அஜித்குமாரும் இயக்கியுள்ளார்.
இதை விஜய் சேதுபதி தனது ‘விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார்.
மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், வடிவேல் முருகன், வி.ஜே.பார்வதி என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு உள்பட பல்வேறு மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டாரில் மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது.
இதன் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, “நான் தயாரித்த அனைத்து படங்களுமே எனக்கு பெரிய நஷ்டத்தைக் கொடுத்தன. ‘சங்கு தேவன்’ என்ற படம் பாதியில் கைவிடப்பட்டது. இதனால் ரூ.1.75 கோடி நஷ்டம் ஏற்பட்டது.
பிறகு, ஆரஞ்சு மிட்டாய், மேற்குத் தொடர்ச்சி மலை, ஜூங்கா மற்றும் லாபம் ஆகிய படங்களைத் தயாரித்தேன். அவை அனைத்தும் நஷ்டத்தையே தந்தன.
இந்தப் படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும், எனக்கு எந்த வருத்தமும் இல்லை, ஏனென்றால் அவை அனைத்தும் எனக்குப் பிடிக்கும்.
இப்போது, காட்டான் தொடரை நான் ஜியோ ஹாட்ஸ்டாருடன் இணைந்து தயாரித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.