1980-களின் பிற்பகுதி துவங்கி தமிழ் சினிமாவில் பல படங்களில் பிரபலமான பாடல்களை எழுதிய கவிஞர் காமகோடியன், சில படங்களுக்கு வசனங்களையும் எழுதி உள்ளார் .
1990-ம் ஆண்டில் வெளியான ‘வாழ்க்கைச் சக்கரம்’ என்ற படத்தின் மூலம் பாடலாசிரியராக தன் கலைப் பயணத்தை தொடங்கியவர் கவிஞரும் பாடலாசிரியருமான காமகோடியான்.
‘கண்ணாத்தாள்’, தொடரும், ‘கும்பகோணம் கோபாலு’, ‘பாட்டாளி’, ‘மௌனம் பேசியதே’, ‘மதுமதி’, உளியின் ஓசை, ‘வல்லமை தாராயோ’, ‘மாப்பிள்ளை’ உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கிறார்.
இதில் கடந்த 2002-ம் ஆண்டு சூர்யா நடித்த மெளனம் பேசியதே படத்தில் இடம்பெற்ற அன்பே என் அன்பே என் பாடல் மிகவும் பிரபலம். இளைஞர்களின் மனதை கவரும் வகையில் காதல் பாடல்களை எழுதுவதில் கைதேர்ந்தவர் கவிஞர் காமகோடியன்.
2015-ம் ஆண்டு திருட்டு ரயில் என்ற படத்திற்கு ஒரே ஒரு பாட்டெழுதுவதற்காக அழைக்கப்பட்ட காமகோடியன், அந்த பாடல் எதிர்பார்த்ததை விட நன்றாக அமைந்ததால், அந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களையும் எழுதும் வாய்ப்பை பெற்றார்.
எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், பரத்வாஜ், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட மூன்று தலைமுறை இசையமைப்பாளர்களுடன் கவிஞர் காமகோடியன் பணியாற்றியுள்ளார்.
‘கலை வித்தகர்’, ‘கற்பனை சுடரொளி’, ‘கவியரசு கண்ணதாசன் விருது’ ஆகிய விருதுகளை வென்றிருக்கும் இவருக்கு தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் 2019-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
– மணி அமுதன்