திரைத் தெறிப்புகள் – 29 :
*
இனிய மாலை நேரத்தில் முகம் தொடும் தென்றலுடன் இந்தக் குரலை ஒப்பிடலாம். அவ்வளவு மென்மையான குரல்.
அந்தக் குரலுக்கு சொந்தமானவர் கர்நாடக இசையுலகில் தனக்கென்று தனித்துவமான அடையாளத்தைப் பெற்றிருந்தவரான எம்.எஸ். சுப்புலட்சுமி.
1945-ம் ஆண்டு வெளிவந்த ‘மீரா’ படத்தில் எம்.எஸ் பாடிய வரிகளை எழுதியவர் ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி.
‘மீரா’ திரைப்படத்திலும் எம்.எஸ். சுப்புலட்சுமியே நடித்துப் பாடிய பாடல் தான் இது.
“காற்றினிலே வரும் கீதம்
கண்கள் பனித்திடப் பொங்கும் கீதம்
கல்லும் கனியும் கீதம்…”
– என்று தொடங்கும் பாடலை எம்.எஸ். பாடிய விதம் அப்போது மட்டுமல்ல, எப்போதும் இப்பாடலைக் கேட்கும் யாரையும் லயித்துப் பூரிப்புடன் கேட்க வைக்கும்.
“பட்ட மரங்கள் தளிர்க்கும் கீதம்
பண் ஒலி பொங்கிடும் கீதம்
காட்டு விலங்கும் கேட்டே மயங்கும்
மதுர மோகன கீதம்
நெஞ்சினிலே… நெஞ்சினில் இன்பக்
கனலை எழுப்பி
நினைவழிக்கும் கீதம்…”
– என்று கீதத்திலேயே பலதரப்பட்ட கீத வகைகளைப் பட்டியலிட்டிருப்பார் பொன்னியின் செல்வனைப் படைத்தவரான கல்கி.
“நிலா மலர்ந்த இரவினில் – தென்றல்
உலவிடும் நதியில்
நீல நிறத்துப் பாலகன் ஒருவன் குழல் ஊதி
நின்றான்
காலமெல்லம் காலமெல்லாம் அவன்
காதலை எண்ணி
உருகுமோ என் உள்ளம்…
காற்றினிலே வரும் கீதம்…”
– என்று நிறைவடையும் இந்தப் பாடலை சிந்து பைரவி ராகத்தில் எம்.எஸ் சுப்புலட்சுமி பாடியிருக்கும் இந்தக் கிறங்க வைக்கும் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.
கேட்கும் பொழுது உங்கள் மனதை அமைதிப்படுத்தும் ரம்யமான பொழுதாக மாறியிருக்கும்.
– மணா