திரைத் தெறிப்புகள் – 73 :
*
தமிழ் சினிமாவின் அந்தக் காலத்திய அற்புதம் என்று தான் ‘வஞ்சிக்கோட்டை வாலிபன்’ படத்தைச் சொல்ல வேண்டும்.
ஜெமினி அதிபரான எஸ்.எஸ். வாசன் தயாரித்து, இயக்கி, 1958-ம் ஆண்டில் வெளிவந்த இந்தப் படத்தில், ஜெமினி கணேசன், பத்மினி, வைஜெயந்தி மாலா, பி.எஸ். வீரப்பா போன்ற பலர் பங்கேற்று மாயஜால வித்தையை நடத்தியிருபார்கள். இதில் இடம் பெற்ற ஒரு பாடல் தான் இப்படத்தின் ஹைலைட்.
இதில், கொத்தமங்கலம் சுப்பு எழுதிய “கண்ணும் கண்ணும் கலந்து” என்று துவங்கும் பாடல், படத்திற்குப் பெரிய பலம்.
“ஏனோ இன்பமே
புதுமையாய்க் காண்பதேன்.
காதல் என்பது இது தானோ
இது தானோ அறியேனே…”
என்று பாடலின் முன்னோட்டம் ஒலிக்க, ‘ஜில்’ என்று ஒரு புயலைப் போன்று நடன வீச்சுடன் வெளிப்படுவார் ‘நாட்டியப் பேரொளி’ பத்மினி.
மக்கள் திரண்ட பெரிய அரங்கம் ஒன்றில் பத்மினி ஆடியபடி வர, பார்வையாளர்கள் வரிசையில் ரசனையோடு அமர்ந்திருப்பார்கள் ஜெமினியும், வீரப்பாவும்.
“கண்ணும் கண்ணும் கலந்து
சொந்தம் கொண்டாடுதே.
எண்ணும்போதே உள்ளம் பந்தாடுதே.
கன்னியென்றேனடி கைகளைப் பிடித்தார்.
காதலியென்றென்னை கொஞ்சியே அழைத்தார்.”
என்று படு வேகமான நடன அசைவுகளுடன் பத்மினி ஆடி முடிப்பதற்குள், பின் அரங்கிற்குப் போய், தன் ஒப்பனையைச் சரிசெய்து கொண்டு, இன்னொரு மின்னலைப் போன்று வேகத்துடன் வெளிப்படுவார் வைஜெயந்தி மாலா.
அந்தக் காட்சியின் நடனத் துடிப்பைப் பார்க்கவே அபாரமாக இருக்கும். அதற்குக் கேற்றபடி அவருக்கே உரித்தான கரகரத்த குரலில் புன்கையோடு “சபாஷ் சரியான போட்டி” என்று பி.எஸ். வீரப்பா சொல்லும் வசனம் – அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான ‘பஞ்ச் டயலாக்’.
“ஜிலு ஜிலு ஜிலு ஜிலுவென்று நானே.
ஜெகத்தை மயக்கிடுவேனே
கலகலகலகலவென்று ஜோராய்
கையில் வளைவீசும் பாராய்!
ஆடுவேன் பாரடி.. பாடுவேன் கேளடி
ஆடுவேன் பாரடி. இனி அனைவரும் மயங்கிட…”
சி.ராமச்சந்திரா அவர்களின் இசையில், துடிப்பான இந்தப் பாடலை நடனத்திற்கு இணையான வேகத்துடன் பாடியிருப்பார்கள் பி. லீலாவும், ஜிக்கியும்.
குறிப்பிட்ட காட்சியில் வைஜெயந்தி மாலா மற்றும் பத்மினியின் உடை அமைப்பும், ஆபரண அலங்காரமும் அமர்க்களமாய் இருக்கும்.
வைஜெயந்தி மாலா நடனக் களத்தில் இருக்கும்போது பத்மினி சும்மா இருப்பாரா? அவரும் அதைவிட வேகத்துடன் களத்தில் நடனமாடியிருப்பார்.
இவர்கள் இருவரும் பரதநாட்டிய ஆசிரியரான வழுவூர் ராமையா பிள்ளையிடம் நடனம் கற்றுக்கொண்டவர்கள் என்பதையும் இந்த நடனப் போட்டி இடையே தெரிந்துகொள்ள வேண்டும்.
“ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்.
அன்பின் பாதையில் அணையிடலாமோ?
பேதைமையாலே மாது இப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே…”
என்று தொடரும் இந்தப் பாடலை இயல்பான கவிநயத்துடன் எழுதியிருப்பார் கொத்தமங்கலம் சுப்பு.
“சாதுர்யம் பேசாதேடி.
என் சலங்கைக்கு பதில் சொல்லடி.
நடுவிலே வந்து நில்லடி
நடையிலே சொல்லடி…”
என்று பாடல் சற்றே எல்லை மீறிப் போகும்போது, பத்மினியும் அதை அளவுக்கு ஈடுகொடுத்து இப்படிப் பாடி ஆடுவார்,
“ஆடுமயில் எந்தன் முன்னே
என்ன ஆணவத்தில் வந்தாயோடி?
பாடுங்குயில் கீதத்திலே பொறாமை கொண்டு
படமெடுத்து ஆடாதேடி
நீ படமெடுத்து ஆடாதேடி…”
என்று பத்மினி ஒரு புறம் ஆட, மோகினி ஆட்டத்தைப் போல மிகத் தெளிவாக வைஜெயந்தி மாலா ஆடும் போது, அவருடைய கண் அசைவுகள்கூட அவ்வளவு அழகாக இருக்கும்.
“இன்னொருத்தி நிகராகுமோ?
எனக்கின்னொருத்தி நிகராகுமோ?
இடி இடித்தால் மழையாகுமோ?
பேதைப் பெண்ணே
இன்னொருத்தி நிகராகுமோ?.”
என்று பாடல் நீளும்போது மிருதங்கத்தின் தாள கதி உச்சத்தில் இருக்கும்.
“இந்த மின்னலுக்கு அஞ்சேனடி! வீண்வாதமென்ன
முன்னேவந்து நீ ஆடடி.”
என்று பாடல் நிறைவு பெறும்போது பத்மினி – வைஜெயந்தி இருவரும் கைகோர்த்தபடி படுவேகமாக, ஆட்டத்தில் உச்ச நிலை அடையும்போது, ஜெமினி விரைந்து போய், மேடையில் மேல் புறத்தில் தொங்கும் சரவிளக்கைக் கீழே வீழ்த்துவதோடு அந்த நடன இசைப் போட்டி முடிவுக்கு வரும்.
இப்பாடல் காட்சியில் பங்குபெற்ற பத்மினி – வைஜெயந்தி மாலா இருவரும் பல நாட்கள் நடன ஒத்திகைப் பார்த்து அதன் பின்னரே, தனித் தனியாகவும் இணைத்தும் இக்காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது.
இப்போதும் இந்த நடனக் காட்சியை ஒரு முறை பாருங்கள். பாட்டும், பரதமும் ஒருசேரக் களியாட்டம் போடுவதைக் கலை உணர்வோடு ரசிக்க முடியும்.
*
-மணா.
*