Take a fresh look at your lifestyle.

19 வயதில் அழுதேன்; இப்போதும் கண்ணீர் வரும்!

கண்ணதாசன் பாடல் பற்றிச் சொல்லி அழுத கமல்ஹாசன்!

தமிழ் சினிமாவில், மனிதனின் உணர்ச்சிகள் அனைத்திற்கும், பாடல்கள் எழுதி இன்றுவரை தனது எழுத்துக்கள் மூலம் நிலைத்திருப்பவர் தான் கண்ணதாசன், அவர் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ஒரு படத்திற்கு, பாடல் எழுதப் போய் தூங்கிவிட்டு, அவரை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளார்.
 
கடந்த 1975-ம் ஆண்டு, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான படம் ‘அபூர்வ ராகங்கள்’. கமல்ஹாசன், ரஜினிகாந்த் இணைந்து நடித்து முதல் படம் இதுதான் என்றாலும் ரஜினிகாந்த் இந்தப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.
 
ஸ்ரீவித்யா முக்கிய கேரக்டரில் நடித்திருந்த இந்தப் படத்திற்கு எம்.எஸ்.வி இசையமைக்க, கண்ணதாசன் பாடல்களை எழுதியுள்ளார். இந்தப் படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடந்துகொண்டிருந்தபோது ஒரு சம்பவம் நடந்துள்ளது.
 
படத்திற்கு பாடல் எழுதுவதற்காக வந்த கண்ணதாசன், படப்பிடிப்பு நடைபெறும் வீட்டின் மாடியில் படுத்துத் தூங்கியுள்ளார்.
 
இது தெரியாத பாலசந்தர், இசையமைப்பாளர் எம்.எஸ்.வியிடம், சென்று “பாடல் பதிவு செய்யலாமா” என்று கேட்க, அவரோ “நாளைக்கு வைத்துக் கொள்ளலாமே” என்று கூறியுள்ளார்.
 
இதைக் கேட்ட பாலசந்தர், ஏன் என்னாச்சு என்று கேட்க, அவர் கண்ணதாசன் பற்றி கூறியுள்ளார். இதனால் கடுப்பான பாலசந்தர் கவிஞர் என்றால் எதுவேண்டுமானாலும் செய்யலாமா என்று கேட்டுக் கோபப்பட்டுள்ளார்.
 
ஒரு கட்டத்தில் கடுப்பான அவர், கமல்ஹாசனை சென்று பார்த்துவரச் சொல்ல, கமல்ஹாசன் பார்த்துவிட்டு அவர் தூங்கிக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.
 
இவருக்கான நான் ஷூட்டிங் நடத்தாமல் இருக்கிறேன். இவருக்கு என்ன தூக்கம் என்று கேட்டுவிட்டு ஷூட்டிங்கைத் தொடங்கியுள்ளார்.
 
சிறிது நேரம் கழித்து எதையாவது எழுதிக் கொடுக்கச் சொல்லுயா என்று சொல்ல, கமல்ஹாசன் மேலே சென்று பார்த்தால் கண்ணதாசன் அங்கு இல்லை.
 
அவர் எழுதி வைத்துவிட்டு அப்போதே புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்று கண்ணதாசனின் உதவியாளர் கூறியுள்ளார்.
 
அரை தூக்கத்தில் இருந்த கண்ணதாசன், பாலசந்தர் பேசியதைக் கேட்டுவிட்டு, பாடலை எழுதிவிட்டு சொல்லாமல் சென்றுள்ளார்.
 
குடித்துவிட்டு தூக்கத்தில் எழுதியது எப்படி இருக்கப் போகிறது என்று அலச்சியமாக பார்த்த கமல்ஹாசன் பாடலைப் படித்துவிட்டுக் கண் கலங்கியுள்ளார்.
 
ஒரே கவிதையாக எழுதி வைத்திருந்த கண்ணதாசனின் வரிகளில் எதை எடுப்பது எதை விடுவது என்றே தெரியவில்லை.
 
அதில் அவர் எழுதிய பாடல் தான் “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்” என்ற பாடல். இந்த பாடல் பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
 
இந்த சம்பவம் குறித்து ஒரு நேர்காணலில் பேசியுள்ள கமல்ஹாசன், இந்தப் படம் எடுக்கும்போது எனக்கு 19 வயது. அப்போதும் இந்தப் பாடலைப் பார்த்து எனக்கு கண்ணீர் வந்தது. இப்போதும் இந்தச் சம்பவத்தை சொல்லும்போது கண்ணீர் வருகிறது. அதுதான் கண்ணதாசன் என்று கூறியுள்ளார்.
 

– நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ்