திரைத் தெறிப்புகள்-23:
*
தமிழ்த் திரை இசையுலகில் இசைப்பாளரான கே.வி. மகாதேவன் – வெண்கல குரல் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் இணைப்பில் உருவான பல பாடல்கள் கவனம் பெற்றிருக்கின்றன.
அதிலும் தத்துவார்த்தமான சில பாடல்களை சீர்காழி கோவிந்தராஜனின் கணீர் குரலில் கேட்கும்போது – கேட்கும் தருணம் பரவசம் ஊட்டக்கூடியதாக இருக்கும்.
அப்படி நம்மைப் பரசவப்படுத்தும் பாடலில் இதுவும் ஒன்று.
1967-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்த ‘திருவட்செல்வர்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கிறது இப்பாடல்.
எளிமையான கவித்துவத்துடனும், பட்டினத்தார், பத்திர கிரியார் பாணியிலான ஆன்மிகம் கலந்த இந்தப் பாடலை எழுதியிருப்பவர் கவியரசர் கண்ணதாசன்.
“இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத் தங்கமே…”
– என்று நகரும் பாடலில் அடுத்து வரும் வரிகளைப் பாருங்கள்:
“உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தான் உரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே!
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத் தங்கமே…
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத் தங்கமே!
அவன் நாடகம் என்ன சொல்வேன் – ஞானத் தங்கமே”.
என்று நிறைவடையும் இந்தப் பாடல் வாழ்வின் அபத்ததையும், ஆன்மீகச் செறிவையும் ஒருசேர ஒருங்கிணைக்கிறது.
இந்தப் பாடலை சீர்காழியின் குரலில் கேட்டுப்பாருங்கள், அந்தக் கணம் கேட்பவர்களின் நினைவுக்குள் புதைகிற கணமாக இருக்கும்.