Take a fresh look at your lifestyle.

அன்பையும், மரியாதையையும் மட்டுமே எதிர்பார்க்கிறேன்!

நெகிழ்ந்த நடிகை ‘சௌகார்' ஜானகி

ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்தவர் சங்கரமஞ்சி ஜானகி. தந்தை காகித மில் அதிபர்.

தொழில் காரணமாக இவர்கள் பல்வேறு இடங்களில் வசிக்க வேண்டிய சூழல் உருவானது. சென்னையில் வசித்தபோது, சாரதா வித்யாலயாவில் சேர்க்கப்பட்டார் ஜானகி.

அப்போது குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். வானொலி நாடகங்களிலும் பங்கேற்றார்.

வானொலி நாடகத்தைக் கேட்ட சினிமா தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, ‘குணசுந்தரி கதா’ என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தார்.

இதில் பெற்றோருக்கு விருப்பம் இல்லாததால், உறவுக்காரப் பையனுக்கு இவரை மணமுடித்து வைத்தனர்.

கணவருடன் விஜயவாடாவில் வசித்தார் ஜானகி. கணவர் வேறு நல்ல வேலைத் தேடி சென்னைக்கு வந்தார்.

சினிமா ஆசை துளிர்த்ததால் ஜானகியும் சென்னை வந்து, தயாரிப்பாளர் பி.என்.ரெட்டியை சந்தித்தார். ஜானகியை தன் தம்பி நாகிரெட்டியிடம் சிபாரிசு செய்தார் பி.என்.ரெட்டி.

விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் என்.டி.ராமாராவ் நடித்த ‘சௌகார்’ என்ற தெலுங்கு படத்தில் 19-வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார் ஜானகி.

தோற்றமும், நடிப்பும் இயல்பாக இருந்ததால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். இதனால் ‘செளகார் ஜானகி’ ஆனார்.

மாடர்ன் தியேட்டர்ஸின் ‘வளையாபதி’ படத்தில் பாரதிதாசன் எழுதிய வசனத்தைப் பேசி நடித்தார்.

தொடர்ந்து ஜெமினி, ஏவிஎம் என முன்னணி நிறுவனங்களின் படங்களில் வாய்ப்புகள் குவிந்தன.

அற்புத நடிப்பாற்றல், அபாரமாக வசனம் பேசும் திறன் கொண்ட இவர், ‘பாக்கியலட்சுமி’, ‘படிக்காத மேதை’, ‘பாலும் பழமும்’ என பீம்சிங்கின் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, சிவகுமார், எம்.ஆர் ராதா துவங்கி ரஜினி வரை பல முன்னணி நடிகர்களுடனும் நடித்திருக்கிறார் சௌகார்.

‘பார் மகளே பார்’, ‘புதிய பறவை’, ‘நீர்க்குமிழி’, ‘பாமா விஜயம்’, ‘எதிர் நீச்சல்’, ‘இரு கோடுகள்’, ‘தில்லுமுல்லு’ உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்குப் பெயர் வாங்கிக் கொடுத்தன.

சோகக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பே அதிகம் கிடைத்தாலும், காதல், வீரம், பாசம், கோபம், நகைச்சுவை என அனைத்து பாவங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தக் கூடியவர் ‘செளகார்’ ஜானகி.

தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் என முன்னணி நாயகர்களுடன் நடித்தார்.

அதிலும் எம்.ஜி.ஆருடன் நடித்த பணம் படைத்தவன், ஒளி விளக்கு போன்ற படங்கள் குறிப்பிடதக்கது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உட்பட 385-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எந்த மொழியானாலும் அவரே டப்பிங் பேசுவார். கே.பாலசந்தரின் நாடகங்களிலும் நடித்துள்ளார். 300-க்கும் மேற்பட்ட முறை மேடையேறியவர்.

காவியத் தலைவி, ரங்க ராட்டினம் ஆகிய 2 படங்களைத் தயாரித்த இவர், தெலுங்கு திரைப்பட விருதுகள் கமிட்டித் தலைவராகவும் இருந்துள்ளார்.

நடிப்பு தவிர சமையல், தோட்டக் கலையில் கை தேர்ந்தவர் ‘செளகார்’ ஜானகி. சென்னையில் 1965-ல் சத்ய சாய்பாபாவை சந்தித்த பிறகு, அவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார்.

அவரால் தன் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்துள்ளதாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார் ‘செளகார்’ ஜானகி.

“ரசிகர்களிடம் இருந்து உண்மையான அன்பையும், மரியாதையையும் இத்தனை ஆண்டுகளாகப் பெற்றுவரும் நான் உண்மையில் ‘சௌகார்’தான் (பணக்காரன்)” என்று கூறுகிறார் ஜானகி.