Take a fresh look at your lifestyle.

பாராட்டுக்கள்தான் கலைஞனை சிறப்பாக இயங்க வைக்கும்!

லாந்தர் இசையமைப்பாளர் எம். எஸ். பிரவீன்

விதார்த் நாயகனாக நடித்திருக்கும் ‘லாந்தர்’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் பேசிய படத்தின் இசையமைப்பாளர் எம்.எஸ்.பிரவீன், தன்னுடைய பள்ளிப் பருவ அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஒரு சுதந்திர தினத்தில், பள்ளியில் மாணவர்கள் முன்னிலையில் என்னை மேடையேற்றி, பாடலைப் பாடுமாறு ஆசிரியர்கள் சொல்கிறார்கள். ஆனால் என்னால் பாட முடியவில்லை.‌

அப்போது அந்த ஆசிரியர், ‘இன்று இல்லை என்றாலும், என்றாவது ஒருநாள் நீ நன்றாகப் பாடுவாய்’ என ஊக்கமளித்துவிட்டு சென்றுவிட்டார்.

ஆனால், எனக்கு அது மிகப்பெரிய தோல்வியாக மனதில் பட்டது. மேடை ஏறுவதற்கு முதல் நாள் முழுவதும் பயிற்சி அளித்தார்கள். மேடை ஏறி ஒரு வரியைக் கூட பாடாமல் இறங்கி விட்டேன்.‌ இதனால் எனக்கும், இசைக்கும் தொடர்பே இல்லை என நினைத்து விட்டேன்.

சிறிது நாள் கழித்து நான் விடுதியில் தங்கி இருந்தேன். அப்போது அங்கு ஒருவர், பழைய ஹார்மோனிய இசைக்கருவியை இசைத்துக் கொண்டிருந்தார். நான் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

அவர் என்னைப் பார்த்து “இசைக்கிறாயா?” என கேட்டார். “இல்லை எனக்கும், இசைக்கும் வெகு தூரம்” என்று சொல்லிவிட்டு, அவர் வாசிப்பதை தொடர்ந்து கவனிக்க தொடங்கினேன்.

அவர் சிறிது நேரம் வாசித்து விட்டு வெளியே சென்று விட்டார்.‌ அப்போது ஹார்மோனியத்தை வாசித்துப் பார்க்கலாமே என வாசிக்கத் தொடங்கினேன்.

அருகில் இருக்கும் ஆலயத்தில் ஒலித்துக் கொண்டிருக்கும் பக்தி பாடலுக்கு ஏற்ப என்னுடைய கைவிரல்கள் தானாகவே ஹார்மோனியத்தில் வாசிக்கத் தொடங்கின.

ஒரு புள்ளியில்தான் நான் அதனை கவனித்தேன், எனக்கும் இசை வருமென்று.‌ பாடல்களைக் கேட்டு வாசிக்க முடியும் என நம்பினேன். அப்போதுதான் என்னுடைய இசைப் பயணம் தொடங்கியது.

என்னுடைய பெற்றோர்கள், “இசையை கற்றுக்கொள். ஆனால் ஒருபோதும் படிப்பை கைவிடாதே” என்றனர்.

கல்லூரிப் படிப்பை நிறைவு செய்தவுடன், இசையில் ஏதாவது சாதிக்கலாம் என நினைத்தேன். அப்போதுதான் பாடலாசிரியர் தேவாவின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது. இருவரும் இணைந்து பாடல்களை உருவாக்கத் தொடங்கினோம். பிறகு திரைப்பட இயக்குநர்களைச் சந்தித்து வாய்ப்பு கேட்கத் தொடங்கினோம்.

ஒரு நாள் ‘ராட்சசன்’ பட வெளியீட்டின்போது இயக்குநர் ஷாஜி சலீமை சந்தித்தோம். அவரிடம் வாய்ப்பு கேட்டபோது, முதலில் எங்களது பாடல்களைக் கேட்டார். ஒரு பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டார்.

அப்போது ‘இந்த இடம் நன்றாக இருக்கிறது. இந்த வரி நன்றாக இருக்கிறது’ என தொடர்ச்சியாக பாராட்டிக் கொண்டிருந்தார்.

ஒரு கலைஞருக்கு பாராட்டு தான் சிறப்பாக இயங்க வைப்பதற்கான எனர்ஜி.

அதன் பிறகு நிறையப் பாடல்களை நானும், தேவாவும் இணைந்து உருவாக்கினோம். எல்லா பாடல்களையும் இயக்குநர் ஷாஜி சலீம் கேட்டு தன் கருத்துகளை பகிர்ந்து கொள்வார்.

ஆறு வருடத் தேடலுக்குப் பிறகு அவர் இயக்கும் ‘லாந்தர்’ படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை வழங்கினார் ஷாஜி சலீம். இந்தப் படத்திற்கான முதல் பாடலை இசையமைத்து அவரிடம் வழங்கியபோது, அதைக் கேட்டு அவர் மெலிதாக புன்னகைத்தவுடன் வெற்றிபெற்று விட்டோம் என்ற எண்ணம் எங்களுக்குள் ஏற்பட்டது” என்றார்.