தமிழ்த் திரையுலகில் அதிகம் விரும்பப்படும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். பெரிய சினிமா நிறுவனங்கள் இவருக்காக காத்திருக்கின்றன. உச்ச நட்சத்திரங்களும் லோகேஷ் கனகராஜ் எப்போது கால்ஷீட் கேட்டாலும் கொடுக்கத் தயாராக உள்ளனர்.
கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என வரிசையாக வெற்றிப் படங்களை அளித்தவர், இப்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படத்தை டைரக்டு செய்து வருகிறார்.
ஹாலிவுட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியொன்றில், மனம் திறந்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
ரஜினி மற்றும் கமல் இருவருக்கும் இடையேயான வித்தியாசம் என்ன என்பது குறித்து கேட்டபோது லோகேஷ் கனகராஜ் அளித்த பதில்:
‘கமல்’ சார் மற்றும் ரஜினி சார் இருவருடனும் பணிபுரிந்ததைப் பெருமையாக கருதுகிறேன் – கமல் சாரின் தீவிர ரசிகன் நான் – அப்படிப்பட்ட கமல் ரசிகன், ரஜினி சார் படத்தை இயக்கினால் எப்படியிருக்கும் என்பதைக் காட்ட இருக்கிறேன்.
ரஜினி சாருடைய படங்களும் எனக்கு பிடிக்கும் – அவருடன் ஒரு ஆண்டாகப் பேசி, 2 மாதங்களாக படப்பிடிப்பு நடத்தி வருகிறோம்.

‘ரஜினி’ சார் ஒரு இயக்குநரின் நடிகர். திரையிலும், வெளியிலும் அவருடைய மேஜிக் பெரியது – ஒரு காட்சியை மூளைக்குள் புகுத்தி ஓட்டிக் கொண்டே இருப்பார்.
நடிகர் என்பதைத் தாண்டி கமல் சார் ஒரு தொழில்நுட்பக் கலைஞர் – மொத்தத்தில் இருவருமே திரைத்துறை மேதைகள்’ என குறிப்பிட்ட லோகேஷ், அவர்கள் இருவரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க தான் மேற்கொண்ட முயற்சிகளையும் பகிர்ந்து கொண்டார்.
‘கொரோனா’ பெருந்தொற்றுக் காலகட்டத்தில் ஒரு கதையை தயார் செய்து ரஜினி சாரையும், கமல் சாரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க முயற்சி மேற்கொண்டேன். ஆனால் அது நடக்கவில்லை. எனினும் இருவரையும் வைத்து தனிப்படங்கள் இயக்க முடிந்ததில் மகிழ்ச்சி’’ என்றார் லோகேஷ் கனகராஜ்.
இரு உச்ச நட்சத்திரங்களையும் ஒரே படத்தில் நடிக்க வைக்க மீண்டும் முயற்சி மேற்கொள்ளப்படுமா? என்பது குறித்து அவர் ஏதும் சொல்லவில்லை. ஆனாலும் மனதுக்குள் அந்த ஆசை இருக்கும் என்றே தோன்றுகிறது.
-பாப்பாங்குளம் பாரதி.