Take a fresh look at your lifestyle.

வாய்ப்பு கிடைத்தால் படம் இயக்குவேன்!

- மனம் திறந்த நடிகை பிரியாமணி

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவரான நடிகை பிரியாமணி தமிழில் அது ஒரு கனா காலம், மலைக்கோட்டை, நினைத்தாலே இனிக்கும், தோட்டா, ராவணன், சாருலதா, பருத்தி வீரன் உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் தெலுங்கில் கஸ்டடி, இந்தியில் ஜவான் என  மற்ற மொழிப் படங்களிலும் நடித்திருக்கிறார்.

2007-ல் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த ‘பருத்திவீரன்’ படத்திற்காக தேசிய விருதையும் பெற்றார் பிரியாமணி.

அதன்பின் 2017ம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சிறுசிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் பிரியாமணி, நடன நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழில் விவேக் கண்ணன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கொட்டேஷன் கேங்க்’ என்ற படத்தில் நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

இந்த நிலையில், அண்மையில் அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணலின்போது, தமிழில் நடிக்க நீண்ட இடைவெளி ஏற்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு பிரியாமணி பதிலளித்துள்ளார். அதன்படி  “தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழிகளில் இருந்தும் எனக்கு நடிக்க அழைப்புகள் வந்தன. நிறைய பேர் கதை சொன்னார்கள். அந்தக் கதைகள் எனக்கு பிடிக்கவில்லை.

இனிமேல் ஏதோ வந்து போவது மாதிரி, முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை. எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பேன்.

‘கொட்டேஷன் கேங்க்’ கதையைக் கேட்டபோது எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருந்தது தெரிந்தது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். காண்டிராக்ட் கொலைகாரர்கள் பற்றியக் கதை.

நானும் பணத்துக்கு கொலை செய்யும் கொலைகாரியாக நடித்துள்ளேன். சண்டைக் காட்சிகளிலும் நடித்து இருக்கிறேன். இந்தப் படம் எல்லோருக்கும் பிடிக்கும். எனக்கு இயக்குநராக வேண்டும் என்று விருப்பம் உள்ளது. வாய்ப்பு கிடைத்தால் படம் இயக்குவேன்” என பிரியாமணி தெரிவித்துள்ளார்.