Take a fresh look at your lifestyle.

நம்பிக்கையானவர்களுடன் இருப்பது தான் நம் பலம்!

நடிகர் கவின்

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் வெளியான ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை பிலோமின் ராஜ் மேற்கொண்டுள்ள நிலையில், கலை இயக்கத்தை எஸ். கண்ணன் கவனித்துள்ளார்.

முழுக்க முழுக்க குடும்பத்துடன் ரசிக்கும் வகையிலான ஃபேமிலி என்டர்டெய்னராக வெளிவந்த இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் மற்றும் எஸ்.எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

வினோத் சி.ஜே. மற்றும் கே. எஸ். மயில்வாகனன் இணை தயாரிப்பாளர்களாகவும், வி. கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர்.

ஆகஸ்ட் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளியான ‘ஹாய்’ திரைப்படம், தற்போது ரசிகர்களின் உற்சாகமான வரவேற்புடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினர் ஊடக நண்பர்களைச் சந்தித்து தங்களது நன்றியைத் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் விஷ்ணு எடவன்:

“என் ஆரம்பகால சினிமா பயணத்தில் எனக்கு அடையாளம் கிடைக்க காரணமாக இருந்தவர்களுக்கும், என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஆதரித்தவர்களுக்கும் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

இந்தப் படத்தில் நடித்த ஒவ்வொரு கலைஞரும் என் மீது நம்பிக்கை வைத்து, தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

மூத்த நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாகக் கொண்டு வந்தனர்.

இசையமைப்பாளர் ஜென் மார்ட்டினுடனான நட்பு பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்கிறது. பள்ளி நாட்களிலேயே ‘நான் இயக்குநராவேன், நீ இசையமைப்பாளராவாய்’ என்று பேசிக் கொண்டிருந்தோம்.

இன்று, எனது முதல் படத்திற்கு அவரே இசையமைத்திருப்பது எனக்கு மிகவும் உணர்வுப்பூர்வமான மகிழ்ச்சியை அளிக்கிறது.

அதேபோல் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் சுக்லா, படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருந்தனர். அவர்களின் பங்களிப்பு இல்லாமல் நான் வழி தெரியாமல் இருந்திருப்பேன்.”

நடிகை ராதிகா சரத்குமார்:

“இன்றைய சூழலில் ஒரு படம் வெற்றிகரமாக ஓடுவது என்பது மிகவும் சவாலான விஷயம்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் இந்தப் படத்தை உருவாக்கி, ரசிகர்களிடம் கொண்டு சேர்த்து வெற்றி பெற்றிருக்கும் படக்குழுவினருக்கு பாராட்டுகள். இயக்குநர் விஷ்ணு பல சவால்களைக் கடந்து இந்த வெற்றியைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

‘டாடா’ படத்தைப் பார்த்தபோதே கவினுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக நினைத்தேன். ‘ஹாய்’ படத்தின் வெற்றிக்கும், அவரது பயணத்திற்கும் வாழ்த்துகள். விஷ்ணுவுக்கும் அவரது வெற்றிக்கும் புதிய வாழ்க்கைப் பயணத்திற்கும் வாழ்த்துகள்.

நடிகை காவ்யா:

“கல்லூரி காலத்தில் ராதிகா மேடத்தைப் பார்த்து, அவரைப் போல ஒரு பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டேன். இன்று அவருடனேயே திரையைப் பகிர்ந்து நடித்திருப்பது எனக்கு கனவு நனவான தருணமாக உள்ளது.

‘மைதிலி’ கதாபாத்திரத்தில் நடிக்க என்மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினருக்கும், அந்தக் கதாபாத்திரத்திற்கு அன்பு அளித்து வரும் ரசிகர்களுக்கும் நன்றி. இது எனது பயணத்தின் தொடக்கம் மட்டுமே; இனி மேலும் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் அன்பைப் பெற வேண்டும்.” 

நடிகர் கவின்:

பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால்தான் ஒருவருடைய வாழ்க்கை மாறும் என்று சொல்வார்கள்.

ஆனால், ‘ஹாய்’ படத்தின் பயணமும் விஷ்ணுவின் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணமும் இணைந்தே நகர்ந்தது.

படம் தொடங்கிய காலகட்டத்தில் அவருடைய திருமண ஏற்பாடுகளும் நடைபெற்றன. படப்பிடிப்பு ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் தனது வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயத்திற்கும் அவர் தயாராகிக் கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில் மிக வேகமாகத் தொடங்கிய படப்பிடிப்பு, பல்வேறு காரணங்களால் நீண்ட பயணமாக மாறினாலும், இன்று படம் வெற்றிபெற்று அனைவரும் ஒன்றாகக் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எப்போதும் இலக்கை அடைவதைவிட, அந்த இலக்கை நோக்கிய பயணம்தான் முக்கியம் என்று நம்புவேன். ஒரு படம் வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா என்பது ஒரு கட்டம் மட்டுமே.

ஆனால், அந்தப் பயணத்தில் நாம் சந்திக்கும் மனிதர்கள், நமக்காக நிற்பவர்கள், நமக்கு ஆதரவாக இருப்பவர்கள்தான் வாழ்க்கை முழுவதும் நம்முடன் வரும் உண்மையான பலம்.

அந்த வகையில் ‘ஹாய்’ படத்தின் பயணம் எனக்கு மிகவும் அழகான அனுபவமாக அமைந்தது.”