இசைஞானி இளையராஜாவின் இசையில், யோகேஷ் சோஹானி, இஷிதா தேஷ்முக், கிஷோர் கடம், நிஷத் போயிர், அனுஜ் பிரபு, சுரேஷ் விஸ்வகர்மா நடிப்பில், சந்தோஷ் திவாகர் எழுதி தயாரித்து இயக்கி இருக்கும் மராத்தி படத்தின் தமிழ் மொழி மாற்று வடிவம்.
இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் இந்தப் படம் கலந்து கொள்ளும் நிலையில் தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு இப்போது ரிலீஸ் ஆகி இருக்கிறது.
கோந்தல் என்ற மராத்தி சொல்லுக்கு பாரம்பரிய வழிபாட்டுச் சடங்கு என்று பெயர்
உண்மையில் தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை கதையாக, களமாக இந்தப் படம் எல்லாம் சும்மா ஜுஜுபி.
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் ஜி.சீனிவாசன், கவுண்டமணி, ரதி அக்னிஹோத்ரி அந்த கூத்துப் பின்னணி, சதிகள் ஞாபகம் இருக்கா? அதில் நியாயம், தர்மம், பெண்ணுரிமை, மறுமலர்ச்சி, எல்லாம் இருக்கும்.
அவை எதுவும் இல்லாமல் நிறைய பாட்டு, இன்னும் கொஞ்சம் கேரக்டர்கள் என்று விரித்து, இன்றைக்கு சாத்தியப்படுகிற நேர்த்தியை மேக்கிங்கில் காட்டினால் அதுதான் ‘கோந்தல்’.
ஆக, இதை எல்லாம் நம்ம தாத்தனுங்க 45 வருஷம் முன்னாடியே பண்ணிட்டானுங்க. ஆக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கோந்தல், எப்போதோ வெட்டிப் போட்ட கூந்தல்தான்.
பொதுவில் படம் எப்படி இருக்கு? ஆஸ்கரில் தேறுமா?
திருமண தின இரவு முழுக்க நடக்கும் சடங்கும் அது தொடர்பான கூத்தும்தான் இந்தப் படம்
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளடங்கிய ஊர் நாட்டுக் கிராமம் ஒன்றில், திருமணத்தை ஒட்டி நடத்தப்படும் கோந்தல் சடங்கை நடத்துபவர், முன்னாள் ஊர்த்தலைவரான பைபவா (கிஷோர் கடம்).
பைபாவாவின் மகன் இறந்ததற்கு பிறகு, அவரது பேரன் விஷ்ணுவும் (மாஸ்டர் துருவ் தோக்) அவருக்கு உதவுகிறான்.
பைபாவாவின் மகன் இறப்புக்கு அந்த ஊரின் தற்போதைய தலைவரும் கந்து வட்டி வாங்குவது உள்ளிட்ட அடாவடி செயல்களை செய்யும் பட்டீல் தான் (சுரேஷ் விஸ்வகர்மா) காரணம் என்பது மறுக்க முடியாத பேச்சு.
பட்டீலின் மகன் சார்ஜேராவ் (நிஷத் போயிர்) பார்க்கிற பெண்களை எல்லாம் அனுபவிக்க நினைக்கும் மைனர். அப்பாவுக்கு பிறகு ஊர்த்தலைவனாக வர வேண்டியவன்.
பக்கத்து ஊர் பெண்ணான சுமன் (இஷிதா தேஷ்முக்) மீது ஆசை வைத்து அவளை கல்யாணம் செய்து கொள்ள விரும்புகிறான் சார்ஜேராவ்.
ஆனால், வரதட்சணை தர முடியாத குடும்பத்தில் பெண் எடுப்பது கவுரவக் குறைச்சல் என்று அப்பா பட்டீல் உறுதியாக சொல்லிவிட கல்யாணம் செய்து கொள்ள முடியவில்லை.
சரி வேறு மாதிரி கரெக்ட் செய்யலாம் என்று பார்த்தால் அதற்குள் அவள் இதே ஊருக்கு ஆனந்தா (யோகேஷ் சோஹானி) என்ற ஓர் அசடு அம்மாஞ்சி சப்பை நபருக்கு வாக்கப்பட்டு மனைவியாக வருகிறாள்.
”ஆனந்தா பொண்டாட்டியை வைத்துக் கொண்டு என்ன பண்ணப் போறான்?” என்று ஊரில் உள்ள எல்லோரும் கல்யாண சடங்கு சமயத்திலேயே வாய் விட்டு பேச,
மைனர் சார்ஜேராவ் சுமனை இன்னும் உரிமையாக கூத்தும் சடங்கும் நடந்து கொண்டிருக்கும் அதே இரவில் நெருங்குகிறான்.
தன் சக சபலப் போட்டியாளர்களிடம் இரவுக்குள் அவளுக்கு முத்தம் கொடுக்கிறேன் என்று சவால் விடுகிறான். இப்படி ஒரு கேடு கெட்ட கூட்டம்… அப்படி ஒரு சப்பை கணவன்.. அய்யோ பாவம், அந்த அப்பாவி அபலை என்ன ஆவாளோ என்று பார்த்தால்…
கோந்தல் கூத்தில், சிவபெருமானின் இன்னொரு அவதாரமான கண்டோபாவுக்கு தன்னை அர்ப்பணித்து கொண்ட முரளி என்ற பெண் கதாபாத்திரத்தின் வேடம் கட்டி ஆடுவதில் அந்த ஏரியாவிலேயே வல்லவனும், இங்கும் அதே கூத்தாட வந்திருப்பவனுமான சாஹேப்ராவ் (அனுஜ்பிரபு) என்பவனின் காதலிதான் இந்த சுமன்.
சாஹேப்ராவுக்கும் சுமனுக்கும் இருந்த காதலை பிரித்துதான் சுமனை ஆனந்தாவுக்கு கட்டிக்க கொடுக்கின்றனர் சுமனின் அம்மாவும் (பூனம் பட்டீல்) அப்பாவும் (சரத் ஜாதவ்).
காதலனைக் கண்ட சந்தோஷத்தில் அவனோடு ஓடிப்போக திட்டமிடுகிறாள் சுமன்.
மைனர் சார்ஜேராவை கூத்து நடக்கும் கும்பலில் இருந்து விலக்கி, தனி இடத்துக்கு வரச் சொல்கிறாள். முத்தம் கொடுத்து சவாலில் ஜெயிக்க நல்ல வாய்ப்பு என்று சார்ஜேராவ் அங்கே போகிறான்.
தன்னைத் தேடி வரும் சார்ஜேராவிடம் சுமன், “என் கணவனை விடிவதற்குள் கொன்று விட்டு என்னை கல்யாணம் செய்து கொள்” என்று சொல்கிறாள்.
அப்படி ஆனந்தாவை கொன்று விட்டு சார்ஜேராவும் ஜெயிலுக்கு போய் விட்டால், காதலனை திருமணம் செய்து கொள்ளலாம் என்பது அவள் எண்ணம். அது புரியாமல் சார்ஜேராவும் சம்மதிக்கிறான்.
காதலன் சாஹேப் ராவிடம் திட்டத்தை சொல்லும் சுமன், “எப்படியும் சார்ஜேராவ் என் கணவனை கொன்று விடுவான். இல்லாவிட்டால் நீ எப்படியாவது கொன்று விடு” என்று சொல்கிறாள்.
அதாவது “அவனும் ராவ் தான்; நீயும் ராவ்தான். எவனாவது ஒரு ராவ் இந்த ராவுக்குள் என் புருஷனை கொல்லுங்கடா…” என்கிறாள்.
இதற்கிடையில் தான் கல்யாணம் பண்ணிக்கொள்ள விரும்பும் சுமனுக்கு தனது அப்பனும் ரூட் போடுவதை அறிந்த சார்ஜேராவ் தன் அப்பன் பட்டீலை வெட்டித் தள்ளுகிறான். அடுத்த ஊர்த் தலைவர் ஆகி சுமனை அடைவது அவன் திட்டம்.
இந்த நிலையில் கோந்தல் சடங்கில் இதுவரை இல்லாத வழக்கமாக, ஒரு சொம்பு நிறைய நீரைக் கொடுத்து தனியாக ஆற்றுக்குப் போய் ஊற்றி விட்டு வரச் சொல்கிறார்கள். ‘தனியே வருவான் வெட்டி விடலாம்’ என்ற மைனர் சார்ஜேராவ் பிளான் அது.
ஆனந்தா போக, சாஹேப் ராவ் பின் தொடர, நடந்தது என்ன என்பதே கோந்தல்.
படத்தின் ஆரம்பக் கதையை சொல்லும் பயணம், வருகை, சடங்கு நடைபெறும் இடம், கூட்டம், கும்பல், பேச்சு, குறுக்கும் மறுக்கும் செல்லும் ஆட்கள், இண்டு இடுக்கு, சந்து பொந்து என்று கேமரா புகுந்து, நுழைந்து, வளைந்து, நெளிந்து, விலகி, கடைசியில் தனி அறையில் சுமனுக்கு அந்த ஊரில் பாலியல் சிக்கல்களை சொல்லி முடிக்கும் முதல் இருபத்தைந்து நிமிஷமும் ஒரே ஷாட்.
இரவின் நிழல் படத்தில் பார்த்திபன் 96 நிமிடத்துக்கு ஒரே ஷாட் எடுத்திருக்கிறார். ஆனால், அது 75 ஏக்கர் பரப்பளவுள்ள இடத்தில் 50-க்கும் மேற்பட்ட உட்புற வெளிப்புற அரங்குகள் அமைத்து, தடை படாத ஒளி அமைப்பு முறைகளை வடிவமைத்து, நாடக மேடை போல மாறும் பின்புறங்கள் மற்றும் சூழல்களை உருவாக்கி எடுக்கப்பட்டது.
இந்த கோந்தல் பட சிங்கிள் ஷாட் மின்சாரமே இல்லாத இரவு நேர கிராமிய வெளிப்புறச் சூழலில் இயற்கையான இரவு வெளிச்சம், லாந்தர்கள், இயல்பான கும்பல், மக்கள் நடமாட்டம் இவற்றோடு மிகுந்த நேர்த்தியாக எடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்தப் படம் ஆஸ்கர் போக இதை ஷாட்தான் காரணம் என்கிறார்கள்.
பின்புல உருவாக்கம், கதை நிகழும் சூழல் எல்லாம் அற்புதமாக இருப்பதால் பார்வையாளர்களும் கதை நிகழும் இடத்துக்குள் இயல்பாக நுழைய முடிகிறது.
மராட்டியத்தில் கிராமப்புற சடங்குகளை எல்லோரும் உணரும் அளவுக்கு படமாக்கி இருக்கிறார்கள்.
பல சடங்குகள் தமிழ்நாட்டு சடங்குகளோடு ஒத்திருக்கிறது. நம்ம ஊரில் நடக்கும் வேட்டி சேலை கட்டுவது, துண்டு போர்த்துவது போன்ற சடங்குகள் அங்கும் இருக்கின்றன.
காசு கொடுத்து சிலரை புகழ்ந்து பாடச் சொல்வது நம்மூர் கிராமிய கூத்து மரபு. அங்கே காசு கொடுத்து பிடிக்காதவரை கிண்டல் செய்து பாட வைக்கும் மரபு இருப்பது தெரிகிறது.
”வயக்காட்டுக்கு ஒதுங்கப் போனவன் கழுவ நீர் இல்லாமல் தரையில தேய்ச்சுக்கிட்டானாம்” என்ற நகைச்சுவை நம்மூர் நாடோடிப் பாடலிலும் உண்டு.
இது போல இந்தப் படத்தில் வரும் சில அப்படி இப்படி.. அரசல் புரசல், விரச சரச நகைச்சுவைகளும் நமது நாடோடிப் பாடல்களில் இருக்கிறது.
இந்தப் படம் சொல்லும் மகாராஷ்டிரா புராணப்படி சிவனின் அவதாரம் கண்டோபா. அந்த கண்டோபானின் மகன் கந்தரேயா.
கந்தரேயா (எனக்கு, நமக்கு) கந்தரய்யா என்ற வார்த்தையை அது ஒத்திருப்பதால் கந்தர் அய்யா, கந்தசாமி, கந்தன் என்று சிந்தனை போகிறது.
‘ஒரு காலத்தில் மராட்டியம்வரை தமிழர்களே வாழ்ந்தனர்’ என்று மேற்குவங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசு சொன்னது வேறு நினைவுக்கு வருகிறது.
மொழி மாற்றத்தில் தென் தமிழ்நாட்டு பேச்சு வழக்கை பயன்படுத்தி இருக்கிறார்கள். சில சமயம் குளோசப்பில் ஏஐ முறையில் தமிழ் வசனங்களுக்கு ஏற்ப உதட்டசைவை மாற்றி இருக்கிறார்கள்.
அதோடு மராட்டிய மொழியின் உதட்டசைவுகளுக்கும் சிறப்பாக தமிழ் வசனங்களையும் எழுதி இருக்கிறார்கள். சபாஷ்.
அந்த இடைவேளை திருப்பமும் அபாரம். அங்கே வைத்திருக்கும் நீளமான ஷாட்டும். இந்த டைரக்டர் சந்தோஷ் திவாகருக்கு சினிமாவிலேயே பிடிக்காத வேலை கட் சொல்வதுதான் போல.
ஆனால், ஒரு தயாரிப்பாளராகவும் இருந்து கொண்டு அதை செய்து இருப்பதுதான் சிறப்பு.
அமலேந்து சவுத்ரியின் ஒளிப்பதிவு நம்மையும் அந்த இருண்ட பகுதிக்குள் நடமாட வைக்கிறது.
நீண்ட ஷாட்கள் உள்ள படத்தில் தனக்கு கிடைத்த மற்ற ஏரியாவில் செதுக்கி இருக்கிறார் படத் தொகுப்பாளர் ஆஷிஷ் மாத்ரே.
இளையராஜாவின் இசையை படம் முழுக்க கொண்டாடி இருக்கிறார்கள். ஆனால் நமக்கு எல்லாம் “அடுக்கு மல்லி எடுத்து வச்சு தொடுத்து வச்சேன் மால…” கணக்காக, அந்த பழைய மிதப்புதான்.
‘ஒரு அயோக்கியன் அயோக்கியன்தான்; புத்திசாலி புத்திசாலி தான்; ஆனால், அசடு போல இருப்பவனெல்லாம் அசடும் இல்லை. நல்லவர் போல் நடிப்பவர் எல்லாம் நல்லவருமில்லை.” என்பதே படம் சொல்ல வரும் கருத்து.
பெரும்பாலான நடிகர்கள் வழக்கமான வடக்கத்திய நடிப்பு நடித்திருக்க, சுமனாக நடித்திருக்கும் இஷிதா தேஷ்முக் ஆரம்பம் முதல் இறுதி வரை நடிப்பில் அசத்துகிறார்.
ஐயோ பாவம் சூழல், அதிலும் தைரியம், விலக்குவது மாதிரியே ஈர்க்கும் பெண் ஜாலம், உற்சாகம், சுயநலத்துக்காக எதையும் செய்யும் கோரம், அப்புறம் கடைசியில்…
என்று ஆரம்பம் முதல் இறுதிவரை பின்னிப் பெடல் எடுத்து இருக்கிறார் இஷிதா தேஷ்முக் (பெண்களில் நாம் எப்போது பேதம் பார்த்தோம்?)
கடைசி காட்சிகளில், ‘தக்காளி, யாருகிட்ட?” என்னும் அளவுக்கு பிரம்மாதப்படுத்தி இருக்கிறார் யோகேஷ் சோஹானி.
படத்தின் முடிவு பெண்ணுரிமைக் கருத்தாளர்களுக்கு கடுப்படிக்கலாம். ஆனால், அதைப்பற்றி எல்லாம் படக்குழுவுக்கு கவலையே இல்லை. உண்மையில் ஆஸ்கர் விருது பெறும் படங்கள் கூட அதைப்பற்றி கவலைப்படுவது இல்லை.
இதுவரை ஆஸ்கர் விருது பெற்ற பல படங்களின் அதே டெம்ப்லேட்டில்தான் இந்தப் படமும் இருக்கு.
படத்தில் போகிற போக்கில் சும்மா வந்து போகும் ஒரு சீனை வைத்து கடைசியில் படத்தை முடிப்பதற்கு எல்லாம் கைத்தட்டி கைதட்டி சலிச்சுப்போச்சு. (அந்த கோழி கொடாப்பு ஷாட். அதுவும் கோழியை கொடாப்புல அடைச்சாச்சு என்ற பெருமிதம் எல்லாம் எரிச்சல்)
ஆக, பொதுவில் ஆஸ்கருக்கு வாய்ப்பில்லை ராஜா தான்.
ஆனால், இன்னொரு கோணம் உண்டு.
பொதுவாக வெள்ளையர்களை உயர்த்திப் பிடித்து, மற்ற நிற இனத்தவர்களையம் கிழக்கத்திய மற்றும் மூன்றாம் உலக நாடுகளையும் அசிங்கப்படுத்தி, அந்த நாடுகளில் இருந்தே படங்கள் வந்தால் ஆஸ்கர் மாமாவின் வாய் அகல இளித்துத் திறக்கும். அவார்டும் கொடுக்கும்.
இந்தக் கொடுமையை எதிர்த்து ஆப்பிரிக்க, ஆசிய நாடுகள் ஒன்றிணைந்து, வெள்ளையர்களை கழட்டி அடிக்கும் படங்களுக்கு விருது கொடுக்க உருவாக்கப்பட்டதுதான் ஆசிய ஆப்பிரிக்க அவார்டு.
ஆஸ்கர் விருதுக்கு போட்டியாக அதை முயன்று உருவாக்கியவர் அன்றைய எகிப்து அதிபர் கமால் அப்துல் ஹுசைன் நாசர் (1918-1970). வீர பாண்டிய கட்டபொம்மனில் சிறப்பாக நடித்ததற்காக சிவாஜிக்கு அந்த விருதை 1960-ல் கொடுத்தார்கள். சிவாஜியை உலக அளவில் புரமோட் செய்தார் நாசர்.
அதை முழுக்க புறக்கணிக்க முடியாமல்தான் 1962-ம் ஆண்டு சிவாஜியை அமெரிக்காவுக்கு அழைத்து நாயகராவின் ஒருநாள் மேயர் பதவி கொடுத்தார்கள். மார்லன் பிராண்டோ, சார்ல்டன் ஹெஸ்டன் எல்லாம் சிவாஜியின் நடிப்பை வியந்து பாராட்டினார்கள்.
பின்னர் வெள்ளைக்காரர்கள் உள்ளே புகுந்து அந்த ஆசிய ஆப்பிரிக்க அவார்டு. விழா தொடர்ந்து நடக்காமல் ஒழித்துக் கட்டினார்கள்.
ஸ்லம்டாக் மில்லியனர் ஆஸ்கர் வாங்கியது கூட அப்படி இந்தியாவின் வறுமையை அழுக்கை காட்டியதால்தான்.
சத்யஜித்ரேவுக்கு ஆஸ்கர் கிடைத்தது கூட, அவர் இந்தியாவின் வறுமையை வெளிச்சம் போட்டுக் காட்டியதற்காகத்தான் என்ற கருத்து புறக்கணிக்கத்தக்கது அல்ல.
லகான் மட்டும் தப்பிக்க காரணம் அது கிரிக்கெட். தவிர அதில் வெள்ளையர்களை இந்தியர்கள் போரில் வெல்லவில்லை. கடைசியில் வெள்ளையர்கள்தான் விட்டுக் கொடுக்கிறார்கள். அந்தப் பெருமை.!
இந்த ரூட்டில் பார்த்தால், மகாராஷ்டிராவில் எல்லாரும் தண்ணீர் ஊற்றிக் கழுவாமல் துடைப்பார்கள், மகன் விரும்பும் பெண்ணுக்கே அப்பனும் ரூட் விடுவான், பிடிக்காத கல்யாணத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வக்கில்லாமல் பெண்கள் காதலனோடு சேர்ந்து புருஷனையே போட்டுத் தள்ளுவார்கள் என்று எல்லாம் மகாராஷ்டிரா பற்றி இந்தியா பற்றி எல்லாம் ‘பெருமையாக’ சொல்வதற்காக இந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருது கொடுத்தாலும் கொடுப்பார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம்.
— சு.செந்தில் குமரன்
