சினிமாவில் திறமை இருந்தாலும் சில நேரங்களில் உருவத்தை வைத்து ஒருவரை நிராகரித்து விடுவார்கள்.
ஆனால், அந்த நிராகரிப்பே ஒருநாள் தன்னுடைய வெற்றிக்கு முன்னால் நிற்க முடியாமல் போகும். அதற்கு ஒரு நல்ல உதாரணம் நடிகர் ஜார்ஜ் மரியான்.
விளாத்திக்குளம் சொந்த ஊர். அப்பா, அம்மா கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்கள். 1985-ல் பிளஸ்-டூ முடித்த பிறகு, லயோலா கல்லூரியில் பாதிரியார் அகஸ்டின் நடத்தி வந்த வீதி நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
நாடகத்தின் மீது இருந்த ஆர்வம் அவரை கூத்துப்பட்டறை வரை அழைத்துச் சென்றது.
முத்துச்சாமி மாஸ்டரின் கூத்துப்பட்டறையில் இணைந்த அவர், 1989 முதல் 2002 வரை சுமார் 120 நாடகங்களில் நடித்திருக்கிறார்.
அந்த நாடக அனுபவம்தான் பின்னாளில் சினிமாவில் அவருடைய நடிப்புக்கு மிகப்பெரிய அடித்தளமாக அமைந்தது.
2002-ல் நாசர் நடித்த ‘மாயன்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.
அதன் பிறகு ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தில் ஜார்ஜ் மரியானை நடிக்க வைத்த இயக்குநர் ஏ.எல்.விஜய், அவருடைய நடிப்புத் திறமையை நன்றாகப் புரிந்துகொண்டார்.
தொடர்ந்து மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், சைவம் என நல்ல கதாபாத்திரங்களை அவருக்குக் கொடுத்தார்.
ஆனால், இவருடைய சினிமா வாழ்க்கையில் நடந்த ஒரு நிராகரிப்பு சம்பவம் சுவாரஸ்யமானது.
சரத்குமார் நடித்த ‘கம்பீரம்’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்திற்காக முதலில் ஜார்ஜ் மரியான் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இயக்குநர் இவருடைய நடிப்பைப் பற்றி கேள்விப்பட்டு, நேரில் பார்க்காமலேயே ஒப்பந்தம் செய்திருந்தார்.
ஆனால், படப்பிடிப்புக்கு முந்தைய நாள் இவருடைய உயரத்தை நேரில் பார்த்ததும், சரத்குமாருக்கு அருகில் போலீஸ் கதாபாத்திரத்தில் இவர் பொருத்தமாக இருக்க மாட்டார் என்று சொல்லி நிராகரித்துவிட்டார்.
ஆனால், காலம் என்ன ஒரு அழகான திருப்பத்தைக் கொடுத்தது.
பின்னாளில் தமிழ் சினிமாவில் போலீஸ் கதாபாத்திரம் என்றாலே ஜார்ஜ் மரியானைத் தேடும் அளவுக்கு, அந்த வேடங்களில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கினார்.
நிராகரித்த அதே கதாபாத்திர வகைதான் அவருடைய பலமாக மாறியது.
மதராசப்பட்டினம் படத்தில் வாத்தியார் கதாபாத்திரத்தில் ஆர்யா குழுவிடம் மாட்டிக்கொண்டு ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் காட்சிகள் இன்றைக்கும் ரசிக்கக் கூடியவை.
பயந்துபோன முகபாவனை, தடுமாறும் பேச்சு, தனக்கே உரிய உடல் மொழி என அந்தக் கதாபாத்திரத்தை மிக இயல்பாகக் கொண்டு வந்திருப்பார்.
‘சைவம்’ படத்தில் ஆங்கிலம் தெரியாமல் திணறுவது, குடும்பத்தினருக்குள் பிரிவு ஏற்பட்டிருக்கும்போது பொய் சொல்லி அனைவரையும் அழைப்பது, ஐயாவிடம் உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவது என நகைச்சுவை, சென்டிமென்ட் இரண்டிலும் தன்னுடைய நடிப்பை அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.
கலகலப்பு படத்தின் கிளைமாக்ஸில் காமெடி போலீஸாக வரும் ஜார்ஜ் மரியான், போலீஸ் அதிகாரிகளின் குரல் மாடுலேஷனை அப்படியே கலாய்த்து, தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.
குறிப்பாக, இடுப்பில் கையை வைத்துக்கொண்டு பேசும் அந்த போலீஸ் ஸ்டைலும், வசன உச்சரிப்பும் பார்க்கும்போதே சிரிப்பை வரவழைக்கும்.
ஆனால், இவருடைய நடிப்புத் திறமையை இன்னொரு உயரத்துக்குக் கொண்டு சென்ற படம் ‘கைதி’. அதற்கு முன்பே பல படங்களில் நடித்திருந்தாலும், கைதி இவருடைய சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது.
கமிஷனர் அலுவலகத்தைப் பார்த்துக்கொள்ளச் சொன்னதும் யூனிஃபார்மை மாட்டிக்கொண்டு ஓடிவருவது, கதவை இழுத்து மூடச் சொல்லி கத்துவது, “டேய் பசங்களா, உங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை… இந்தப் பொண்ணுக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக்கணும்!” என்று பொறுப்புடன் பேசுவது என, ஒரு பெரிய ஹீரோவுக்கு இணையான முக்கியத்துவம் கொண்ட கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார்.
அந்தப் படத்தில் ஜார்ஜ் மரியான் வரும் ஒவ்வொரு காட்சியும் ஒரு தனி மாஸ்!
அவருடைய உயரம், தோற்றம், குரல், உடல் மொழி என எதையும் குறையாகப் பார்க்காமல், அதையே தனக்கான தனித்துவமாக மாற்றிக்கொண்டவர்.
அதன்பிறகு வெளியான டிராகன், ஹேப்பி ராஜ், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்திலும் இவரின் நடிப்பு சிறப்பாக இருக்கும்.
சமீபத்தில் வெளியான ‘லெனின் பாண்டியன்’ படத்தில் இவர் நடித்த நீதிபதி கதாப்பாத்திரம் சமூகவலைதளங்களில் பெரிதும் கவனிக்கப்பட்டது. கல்வியின் முக்கியத்துவம் அதன்மூலம் அடித்தளத்திலிருந்து மேலெழும் நம்பிக்கை என அற்புதமாக நடித்திருப்பார்.
ஒரு காலத்தில் உருவத்தைப் பார்த்து நிராகரிக்கப்பட்டவர், இன்று அதே சினிமாவில் தன்னுடைய நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறார்.
திறமைக்கு உருவம் தடையில்லை, விடாமுயற்சிதான் வெற்றிக்கான அடையாளம் என்பதை ஜார்ஜ் மரியான் தனது பயணத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார்.
நன்றி: எண்டர்டெய்ன்மெண்ட் கம்பெனி முகநூல் பதிவு.
