Take a fresh look at your lifestyle.

‘கேங்கர்ஸ்’: என்னாச்சு ‘சுந்தர்.சி – வடிவேலு’ காம்போ!?

வின்னர், கிரி, லண்டன், ரெண்டு, தலைநகரம், நகரம் மறுபக்கம் படங்களில் சுந்தர்.சி – வடிவேலு காம்பினேஷன் நிகழ்த்திய மாயாஜாலத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

ஒவ்வொரு முறையும் அப்படங்களைப் பார்க்கும்போதும் வாய்விட்டுச் சிரித்துவிட்டு, ‘எப்படி இது சாத்தியமானது’ என்ற எண்ணமே தோன்றியிருக்கிறது.

அதனாலேயே, அந்தக் கூட்டணி மீண்டும் ஒன்றிணைகிறது என்ற வகையில் எதிர்பார்ப்பினைக் கிளப்பியது ‘கேங்கர்ஸ்’.

இப்படத்தின் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருப்பதோடு நாயகனாகவும் நடித்திருக்கிறார் சுந்தர்.சி.

அவரோடு வடிவேலு, கேத்தரீன் ட்ரெசா, வாணி போஜன், பக்ஸ், ஹரீஷ் பேரடி, மைம் கோபி, முனீஸ்காந்த், அருள்தாஸ், விச்சு விஸ்வநாத் உட்படப் பலர் நடித்துள்ளனர்.

சி.சத்யா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு இ.கிருஷ்ணசாமி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

எப்படி இருக்கிறது ‘கேங்கர்ஸ்’?

‘கேங்கர்ஸ்’ கதை!

ஒரு ஊர். அங்கு ஒரு பள்ளி இயங்கி வருகிறது. அந்த ஊருக்கான பஞ்சாயத்து சேர்மனாக இருக்கும் மலையரசன் (மைம் கோபி), தீமைகளின் மொத்த வடிவமாக இருக்கிறார்.

அந்தப் பள்ளியில் படித்துவரும் ஒரு மாணவி திடீரென்று காணாமல் போகிறார். ஏற்கனவே இது போன்று சில சம்பவங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், அந்த மாணவியைத் தனிப்பட்ட முறையில் அறிந்தவர் என்ற காரணத்தால் இது பற்றி காவல் துறை உயரதிகாரிக்குக் கடிதம் எழுதுகிறார் ஆசிரியை சுஜிதா (கேத்தரீன் ட்ரெசா).

அதையடுத்து, காவல் துறையில் இருக்கும் ஒருவர் அப்பள்ளிக்கு ‘அண்டர்கவர் ஆபரேஷனுக்காக’ அனுப்பி வைக்கப்படுகிறார்.

இந்த நிலையில், அந்தப் பள்ளிக்குப் புதிய ‘பி.டி.’ மாஸ்டராக வேலைக்குச் சேர்கிறார் சரவணன் (சுந்தர்.சி). பள்ளியின் தாளாளரான மலையரசனை எதிர்த்து சுஜிதா குரல் கொடுக்கும்போது, ரகசியமாக அவருக்கு உறுதுணையாக இருக்கிறார் சரவணன்.

மலையரசனையும் அவரது சகோதரரையும் ஒரு சந்தர்ப்பத்தில் தாக்குகிறார் சரவணன். அவர்களது மூத்த சகோதரர் மகன் அப்பள்ளியில் படித்து வருகிறார்.

ஒருமுறை அவரையும் தாக்குகிறார். அதனால், அவர் கோமா நிலைக்குச் செல்கிறார்.

இந்த சம்பவங்கள் நிகழ்கிறபோது இன்னொரு பி.டி. மாஸ்டரான சிங்காரம் (வடிவேலு), கணக்கு வாத்தியார் (பக்ஸ்), ஒரு பார் உரிமையாளர் (முனீஸ்காந்த்) மற்றும் சுஜிதா ஆகியோர் சாட்சிகளாக இருக்கின்றனர்.

அதுநாள் வரை மலையரசனின் மூத்த சகோதரர் உயிரிழந்துவிட்டதாக அந்த ஊர் நம்பிக் கொண்டிருக்கிறது. ஆனால், அவரோ வெளிநாட்டில் இருந்து தனது மகனைப் பார்க்க ஓடோடி வருகிறார்.

அதன்பிறகுதான், சரவணன் யார் என்ற உண்மை சுஜிதா உள்ளிட்ட நால்வருக்கும் தெரிய வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, அவர்கள் ஐவரும் ஒரு ‘பெரிய திருட்டில்’ ஈடுபட முடிவு செய்கின்றனர்.

எதற்காக அதனைச் செய்கின்றனர்? அது சரியாக நடந்து முடிந்ததா? முடிவில் என்னவானது என்று சொல்கிறது ‘கேங்கர்ஸ்’ஸின் மீதி.

பழைய ‘வடிவேலு’ எங்கே?

குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு சில நகைச்சுவை நடிகர்களைத் திரையில் பார்க்கிறபோது, முன்னர் நமக்குக் கிடைத்த ‘திருப்தி’ திரும்பக் கிடைப்பதில்லை.

டி.ஆர்.ராமச்சந்திரன், தங்கவேலு, கவுண்டமணி உள்ளிட்ட சில ஜாம்பவான்கள் அந்த நிலையைச் சந்தித்திருக்கின்றனர். அந்த வகையில், ‘பழைய வடிவேலு எங்கே’ என்று கேட்க வைத்திருக்கிறது ‘கேங்கர்ஸ்’.

ஏற்கனவே கத்திச்சண்டை, சிவலிங்கா, மெர்சல் உள்ளிட்ட சில படங்களில் நடித்தபோதும் இதுவே நிகழ்ந்தது. இப்படம் அவற்றுக்குப் பரவாயில்லை என்பதால் கொஞ்சம் ஆசுவாசப்படலாம்.

அதையும் மீறி ‘என்னாச்சு சுந்தர்.சி – வடிவேலு காம்போ’ என்பது போன்ற கமெண்ட்களை கேட்கத்தான் வேண்டியிருக்கிறது.

தான் நாயகனாக நடிக்கிற படங்களில் தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று ஒரு ‘பார்முலா’ வைத்திருக்கிறார் சுந்தர்.சி. இதிலும் அப்படியொரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

‘ஏன் இப்படியொரு நடிப்பை வெளிப்படுத்துகிறார் சுந்தர்.சி’ என்ற கேள்விக்குப் பதிலளிக்கிறது இப்படத்தின் கிளைமேக்ஸ்.

நாயகியாக வரும் கேத்தரீன் ட்ரெசாவை அழகாகத் திரையில் காட்டியிருக்கிறார் சுந்தர்.சி. மற்றபடி இதற்கு முன்னர் அவர் நடித்த படங்களில் எப்படியிருந்தாரோ, அது போலவே இதிலும் வந்து போயிருக்கிறார்.

நகைச்சுவையைப் பொறுத்தவரை முனீஸ்காந்த், பக்ஸ் ஆகியோருக்கு முன்பாதியில் பெரிதாக வாய்ப்பு தரப்படவில்லை. பின்பாதி அந்தக் குறையைப் போக்குகிறது.

வில்லன்களாக வரும் மைம் கோபி, அருள்தாஸ், ஹரீஷ் பேரடிக்கு முக்கியத்துவம் குறைவு. இப்படத்தின் மிகப்பெரிய பலவீனம் அது.

வாணி போஜன், மதுசூதன்ராவ் ஆகியோர் பிளாஷ்பேக் காட்சிகளில் வந்து போயிருக்கின்றனர்.

இப்படத்தில் விமலும் ஒரு கௌரவ தோற்றத்தில் தலைகாட்டியிருக்கிறார்.

ஒரு கமர்ஷியல் படத்தில் இருக்க வேண்டிய வண்ணமயமான பிரேம்கள், அழகியலுடன் கூடிய கேமிரா நகர்வுகள் என்று இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் கிருஷ்ணசாமி.

காட்சிகளில் வருகிற களங்கள் வழக்கமான கமர்ஷியல் படங்களுக்கே உரியதாக இருப்பதால், அதற்கேற்ற பின்னணியை அமைத்திருக்கிறார் கலை இயக்குநர் குருராஜ்.

கதையைப் புரிந்துகொள்வதில் எந்தக் குழப்பமும் நேர்ந்துவிடக் கூடாது என்று கவனத்துடன் படத்தைத் தொகுத்திருக்கிறார் பிரவீன் ஆண்டனி.

அதேநேரத்தில் சில கதாபாத்திரங்கள் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாமல் வருவதும் போவதுமாக இருப்பதை ‘அப்படியே’ விட்டிருக்கிறார். அவற்றுக்கான காட்சிகளால் படத்தின் நீளம் அதிகமாகிவிடக் கூடாது என்று அவர் கருதியிருக்கலாம்.

சத்யா இசையில் பாடல்கள் ‘ஓகே’ ரகம். ‘என் வான்மதியே’ மெலடியாக அமைந்திருக்கிறது.

‘குப்பன் பொஞ்சாதி குருவம்மா’ பாடல் சமீபத்தில் ஹிட்டான சில தெலுங்கு பாடல்களை நினைவூட்டுகிறது. இது போக இன்னும் நான்கு பாடல்கள் இதிலுண்டு. அவற்றைக் காட்சிகளோடு பிணைத்திருக்கிறார் சுந்தர்.சி.

பின்னணி இசையைப் பொறுத்தவரை இரண்டாம் பாதியில் நம்மைப் படத்தோடு ஒன்ற வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் சத்யா.

இப்படத்தின் மூலக்கதையை வேறொருவரிடம் இருந்து வாங்கி திரைக்கதை அமைத்திருக்கின்றனர் இயக்குநர் சுந்தர்.சி மற்றும் வேங்கட் ராகவன்.

வேங்கட் ராகவனின் வசனங்கள் சில இடங்களில் வாய்விட்டுச் சிரிக்க வைக்கின்றன.

ஆனால், முன்பாதியில் அந்த ‘மேஜிக்’ நடக்கவே இல்லை. அதற்குச் சேர்த்து வைத்து பின்பாதி சிரிக்க வைத்து நம்மை வழியனுப்பி வைக்கிறது.

‘கேங்கர்ஸ்’ படத்தில் லாஜிக் மீறல்கள் ஏராளம். பள்ளி தாளாளரை நேரடியாக எதிர்க்கும் கேத்தரீன் பாத்திரம், எப்படித் தொடர்ந்து அங்கு பணியாற்ற முடிகிறது என்ற கேள்வி பலருக்குள் முளைக்கும்.

ஆனால், ‘லாஜிக் கிலோ என்ன விலை’ என்று கேட்கும் சுந்தர்.சி படங்களில் அப்படிப்பட்ட எதிர்பார்ப்புகள் ‘தேவையற்ற ஆணி’ என்று அவர்களுக்கும் தெரியும்.

கிளைமேக்ஸில் தியேட்டரில் ஒரு கலாட்டா நிகழ்வதாகச் சில காட்சிகள் வருகின்றன. ஒரு தேர்ந்த இயக்குநரால் மட்டுமே அதனை அத்தனை லாவகமாக ‘ஹேண்டில்’ செய்ய முடியும்.

அது போன்ற இடங்களில் ‘நான் ஒரு கில்லி’ என்று மீண்டுமொரு முறை இயக்குநராகத் தன்னை நிரூபித்திருக்கிறார் சுந்தர்.சி.

முன்பாதியைச் சரிவரச் செப்பனிட்டிருந்தால், பின்பாதியில் இன்னும் கொஞ்சம் வேகத்தை அதிகப்படுத்தியிருந்தால், வில்லன் பாத்திரங்களை இன்னும் வலுவானதாகப் படைத்திருந்தால், ‘கேங்கர்ஸ்’ தரும் திரையனுபவம் ‘அபாரமானதாக’ மாறியிருக்கும்.

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. இதன் இரண்டாம் பாதியைப் பார்ப்பதற்காகவே குறிப்பிட்ட அளவில் ரசிக கூட்டம் தியேட்டர்களுக்கு படையெடுக்கத்தான் செய்யும்!

– உதயசங்கரன் பாடகலிங்கம்