தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருபவர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் கடந்த 2022-ம் ஆண்டு வௌியான ‘சீதா ராமம்’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் கவனம் ஈர்த்தது.
இதைத் தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லக்கி பாஸ்கர்’.
சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் பார்ச்சூன் போர் சினிமாஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்திருக்கிறார்.
ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்தத் திரைப்படம் வரும் 31ம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில், இப்படத்தின் இயக்குநர் வெங்கட் அட்லுரி, நடிகர் துல்கர் சல்மான் உள்ளிட்டோர் நேற்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, நடிகர் ராம்கி உள்ளிட்டோர் படத்தைப் பற்றி பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான் “லக்கி பாஸ்கர் திரைப்படம் இந்தியக் குடும்பங்களின் கதையாக உருவாகி உள்ளது. பாஸ்கர் என்கிற கதாபாத்திரத்தை நாம் அடிக்கடி பார்த்திருப்போம்.
இந்தாண்டில் எனது உடல்நிலையில் பிரச்னை ஏற்பட்டது. அதனால், தெலுங்கு மற்றும் மலையாளத்தின் டப்பிங் முடித்துவிட்டேன். தமிழ் டிரைலரில் நான் டப்பிங் பேசவில்லை. ஆனால், திரைப்படத்தில் என் குரல்தான் இருக்கும்.” என்றார்.
இதனிடையே, “மங்காத்தா படத்தை நினைவுப்படுத்தும் விதமாக டிரைலரில் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அஜித்தைப் பின்தொடர்ந்து வருகிறீர்களா?” என துல்கர் சல்மானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு, பதிலளித்த துல்கர் சல்மான், “நான் நடிகர் அஜித்தின் மிகப்பெரிய ரசிகன். எதுவும் திட்டமிட்டு செய்ய முடியாது. அஜித்குமார் மாதிரி யாரும் வரமுடியாது. என்னாலும் முடியாது. அவர் அப்படியே இருக்க வேண்டும்” என தெரிவித்தார்.