30 ஆண்டுகளுக்கு முன் அச்சு ஊடகங்கள் மட்டுமே இருந்தன. அப்போது பத்திரிகையாளர்களிடம் ஒரு ஒழுங்கு முறை இருந்தது. காட்சி ஊடகங்கள் வந்த பின், காட்சிகள் மாறி விட்டன.
அரசியல் நிகழ்வுகளில் சுழன்று சுழன்று படம் பிடிப்பதெல்லாம் சரி. ஆனால் இழவு வீட்டிலும் அவர்கள், சினிமா ஷுட்டிங் நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
அண்மையில் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியின் வீட்டில் டிவி. கேமிராமேன்கள் ஆடிய ஆட்டம், ஊடக அறத்தை கேள்விக்குறியாக்கி விட்டது.
அவரது மகள் மீரா மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொண்டார். சடலம் வைக்கப்பட்டிருந்த ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 50 கும் மேற்பட்ட நிருபர்கள், வீடியோ கிராபர்கள் குவிந்தனர்.
பிணத்தை போட்டா எடுக்க கழுகு போல் வட்ட மிட்டு, அந்த இடத்தை சந்தைக்காடாக்கினர்.
விஜய் ஆண்டனியின் வீட்டுக்கு, மீராவின் உடல் கொண்டு வரப்பட்டபோதும் பின் தொடர்ந்தனர்.
உடலை இறக்க விடாமல், விதவிதமாக காமெராக்களில் சுட்டனர். உறவினர்கள் கதறலை பதிவு செய்து ‘லைவ்’ வில் காட்டினர்.
துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் எல்லாம் மைக் நீட்டினார்கள். மீராவின் சக தோழிகளின் வாய் கிளறினர்.
மொத்தத்தில், அவர்களின் செயல்கள், எல்லை மீறிப்போனது.
இயக்குநர் பாரதிராஜா இந்த செயலை வன்மையாக கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மரணம் கொடுமையானது. அதிலும் அகால மரணங்கள் மிகக் கொடுமையானது.
அப்படியொரு நிகழ்வை சந்திக்கும்போது சொந்த பந்தங்கள், உடன் நட்புகள் கலங்கிப்போகும். செய்வதறியாது திகைத்துப் போகும்.
அந்த நேரம் ஆறுதல் சொல்லுதலே இயலாத காரியம். தேற்றுவதற்கு வார்த்தைகள் இருக்காது. உடன் நிற்பது மட்டுமே சாத்தியமாகும். அந்நேரத்தைக் கூட நம்மால் தர முடியாத நிலைக்குத் தள்ளிவிடுகின்றன சமீப கால மீடியாக்களின் செயல்.
புகழ் பெற்றவர்களின் வீட்டு இழப்பை இவர்கள் படம் எடுத்துப் போடுவதால் தேவையற்ற கூட்டம் சேர்கிறது. வந்து உடன் நிற்க நினைக்கும் பலரை துக்க வீட்டிற்கே வரவிடாமல் செய்துவிடுகிறது அல்லது வந்ததும் ஓட வைத்துவிடுகிறது. முன்பெல்லாம் ஊடக தர்மம் இருந்தது.
எந்நிகழ்வை படமாக்க வேண்டும். கூடாதென்று. இப்போது சமூக வலைதளங்கள் பெருகிய பின் எல்லாமே மாறிவிட்டது. அறநிலை பிறழ்ந்துவிட்டது. ஊடகங்கள் மரண வீட்டின் உள்ளே வரை நுழைந்து காட்சித் திருடுவதை செய்கின்றன’’ என குமுறியுள்ளார்.
“நம் அனுமதி இல்லாமல், இரக்கமற்று, கையறு நிலையில் நிற்கும் முகங்களை படம் பிடித்துக் காட்டுகின்றனர். இது எந்தவிதத்தில் நியாயம் எனத் தெரியவில்லை.

சினிமாக்காரர்களின் வீடு என்ன திறந்த மடமா? அவர்களின் துக்கம் கேலிச் சித்திரமா? நேற்றும்.. இதற்கு முன் நிகழ்ந்த மரண நிகழ்விலும் மீடியாக்கள் நடந்துகொண்ட விதம் கண்டிக்கத்தக்கது.
மீடியாக்கள் போர்வையில் வருபவர்களையும் அடையாளங்கண்டு களைய வேண்டிய நேரம் இது.
குடும்ப உறவுகளாக மதிக்கும் மீடியாவினரின் இதுபோன்ற நாகரிகமற்ற செயல்கள் வேறுபடுத்திப் பார்க்க வைக்கின்றன.
இவர்களுக்கும் நம் இழப்பிற்கும் சம்பந்தமே இல்லையோ என எண்ண வைக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகள் மனச் சங்கடத்தை உருவாக்கியுள்ளது.
ஊடக தர்மத்தை மீறி நடந்துகொள்வதால், காணொளி செய்பவர்களை மரண வீட்டில் மறுக்க வேண்டிய விதிமுறைகளை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஊடகத்தினரின் செயல்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறேன். காவல் துறையும் சம்பந்தப்பட்டவர்களின் அனுமதி இல்லாமல் மீடியாக்களை அனுமதிக்க வேண்டாம்”’ என பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
காட்சி ஊடகத்தினர் இனிமேலாவது அறம் காப்பார்கள் என நம்புவோம்.
– பாப்பாங்குளம் பாரதி.