பாலு எஸ். வைத்தியநாதன் எழுதி, இயக்கி, நாயகனாகவும் நடிக்கும் படம் ‘அறம் செய்’. தாரகை சினிமாஸ் தயாரிப்பில் அரசியல் விமர்சனப் படமாக உருவாகி வரும் இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் இந்தப் படத்தைப் பற்றி பேசிய இயக்குநர், “நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தத் தேசத்தின் அரசியல் மக்களுக்கானதாக மாறவில்லை. வரி வருமானம் வழியாகத் தரமான கல்வியோ, மருத்துவமோ மக்களுக்கு இலவசமாகக் கிடைக்கவில்லை. இதை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும்.
இதற்காக இன்றைய அரசியல்வாதிகளுடன் மோதும் ஓர் இளைஞர் குழுவின் நிலை என்ன ஆகிறது என்பதுதான் படம். இதில் இந்தியாவில் இருக்கிற எந்த அரசியல் கட்சியையோ, அரசியல் தலைவர்களையோ, தனி நபர்களையோ குறை கூறியோ, ஆதரித்தோ ஒரு சின்ன வசனம்கூட கிடையாது.
மாறாக மக்களுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்துக் கேள்வி கேட்டு இருக்கிறோம். இந்திய அரசியல் சாசனத்தின் சட்டங்களை மேற்கோள் காட்டி மக்களுக்கான அரசியலின் அவசியத்தைச் சொல்லி இருக்கிறோம். இது முழுவதும் ஒரு கமர்ஷியல் படம்” என்றார்.
-நன்றி: இந்து தமிழ்திசை.